சமீபகாலமாக நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி, வன்முறை, ஹீரோ பில்டப், வெற்று ஆரவாரங்களோடு கதை, திரைக்கதை எதுவுமின்றி பிரமாண்ட செலவில் வரும் படங்கள், முதல் நாள் முதல் காட்சியிலேயே தோல்வியை சந்திக்கின்றன! இப்படமோ, கச்சிதமான திரைக்கதை, இயல்பான கதாபாத்திரங்கள், தேர்ந்த கிளைமாக்ஸ்.. என அழகாக எடுக்கப்பட்டுள்ளது;
இந்த சினிமாக்களுக்கு மாற்றாக அத்தி பூத்தாற் போல், சில எளிய முதலீட்டு படங்கள் வெளிவரத்தான் செய்கின்றன! மிகக் குறைந்த முதலீட்டில் வெளியான குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்களை அந்த வகையில் குறிப்பிடலாம். குறிப்பாக டூரிஸ்ட் பேமிலி படம் சிம்ரன் சசிக்குமார் போன்றோர் நடித்திருந்தாலும் அப்படம் மிகக் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல கதையம்சத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் வெளியாகவிருக்கும் மாயக்கூத்து படமும் மிக மிகக் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராகவ் நம்மிடையே பேசும் போது, வெறும் 25 லட்ச ரூபாய் செலவில் முழுப்படத்தையும் தயாரித்து முடித்து விட்டதாக கூறிய போது, நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. மொத்தம் 23 நாட்கள் படப்பிடிப்பும், பின் தயாரிப்பு பணிகளையும் சேர்த்து படத்தை முடித்துள்ளதாக கூறுகிறார். இன்றைய தமிழ் சினிமா சூழலில், இந்த படம் செய்திருப்பது புதிய மாடல் என்றே குறிப்பிடலாம்.
படம், மிக எளிய மாயப்புனைவை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஒருவர், தான் படைத்த கதாபாத்திரங்களை நிஜ வாழ்வில் எதிர் கொண்டு சந்திக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, நிகழ சாத்தியமுள்ள சம்பவங்களின் கோர்வையாக மாயக்கூத்து சினிமா உருவாகி இருக்கிறது.
திரைக்கதையாக கச்சிதமாக எழுதி இருக்கிறார்கள். மூன்று அல்லது நான்கு கதைகளாக விரியும் சம்பவங்களை கோர்த்து, இறுதியில் தேர்ந்த கிளைமாக்ஸ் காட்சியில் படம் முடிவடைகிறது. வெவ்வேறு கதைகளுக்கான முடிச்சுகளையும் மைய கதாபாத்திரத்தின் போக்கில் நகர்த்தி விறுவிறுப்பாக கதை செல்கிறது.
படம் முழுக்க முழுக்க மிகச் சாதாரண கதாபாத்திரங்களும், எளிமையான நடிகர்களும் நடித்திருக்கின்றனர். எல்லாருடைய நடிப்பிலும் இயல்பு தெரிகிறது. கொஞ்சம் அவ்வப்போது நாடகத்தனமான காட்சிகள் இருந்தாலும், அவை பெரிய தொய்வை தரவில்லை.
ஒவ்வொரு கதைக்குள் செல்லும் போதும், வெளிவரும் போதும் காட்சிகள் வெட்டப்படும் இடத்தில் அழகாக நகர்த்தி இருக்கிறார், எடிட்டர் நாகூரான். ஒளிப்பதிவாளர் சிறிய பட்ஜெட் படம் என்பதே நமக்கு தெரியாத வண்ணம் பெரிய சினிமா என்ற தோற்றத்தை நமக்கு அளித்து விடுகிறார். இசையும் கச்சிதம்.
நாகராஜ் கண்ணன், டெல்லி கணேஷ், மு. ராமசாமி, சாய் தீனா, காயற்றி, ரேகா குமார், பிரகதீஸ்வரன், ஐஸ்வர்யா ரகுபதி ஆகியோர் தங்களுக்கு கிடைத்த பாத்திரங்களின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளனர். வன்முறை, ஆபாசம், சாகசம் என்று எந்த அபத்தங்களும் இன்றி, படம் மிக எளிமையான காட்சி அமைப்புகளுடன் நகர்கிறது.
சமூக அக்கறையுடன் கல்வி, மருத்துவம், சமத்துவம் குறித்து நல்ல கருத்துகளையும் விதைப்பதோடு, படைப்பாளிகளுக்கு பொறுப்பு இருக்க வேண்டும் என்ற மைய கருவையையும் கொண்டுள்ளது.
25 லட்ச ரூபாயில் எப்படி இந்த படத்தை எடுக்க முடிந்தது? என்று இயக்குனரிடம் கேட்ட போது,
“எல்லாமே திட்டமிடல்தான் சார். எங்க கிட்ட ஒரு கண்டெண்ட் இருந்தது. நண்பர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, செலவுகளை பகிர்ந்து கொண்டோம். ஒரு நாளைக்கு 45 ஆயிரம் வரை செலவாயிற்று. சில நாட்கள் மட்டும் காட்டுக்குள் படம் பிடிக்க மட்டும் ஒரு லட்சம் வ்ரை செலவாயிற்று. 23 நாட்கள் மொத்தம் படம் பிடித்தோம்.
இரண்டு நாட்கள் Batch வேலைகளை முடித்தோம். பின் தயாரிப்பு பணிகளையும் திட்டமிட்டபடி மிகக் குறைந்த செலவில் முடித்து நேரடியாக தற்போது திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கிறது. குறைந்த பட்ஜெட் என்பதற்காக படத்தின் தரத்தில் எந்த குறையையும் நாங்கள் வைக்கவில்லை.
ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் வரை போகும் தமிழ் சினிமா வணிகத்தில் மாயக்கூத்து நிகழ்த்தியிருப்பது பெரும் சாதனை. மாற்று சினிமாவாக இல்லாமல், வணிக சினிமாவாக மாயக்கூத்து குறைந்த பட்ஜெட்டில் வெளியாகிறது.
படம் நல்ல சுவாரஸ்யமான கதையம்சத்துடன் இருக்கிறது. மாயக்கூத்துவின் வெற்றி தமிழ் சினிமாவுக்கு நல்லது.
– தயாளன்
திரைக்கதை ஆசிரியர்