ஒரு மகிழ்ச்சியான கணவன் மனைவி.இவர்களில் மனைவிக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென ஆசை.கணவனுக்கு அதில் உடன்பாடு இல்லை.உடன்பாடு இல்லை என்பது மட்டுமின்றி தீவிரமாக எதிர்க்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அது ஏன்? என்பதைச் சொல்வதுதான் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் கதை.
ராபர்ட்டும் வனிதாவிஜயகுமாரும் கணவன் மனைவி. பாங்காக்கில் வசிக்கின்றனர். குழந்தை பிறப்புக்குக் கணவன் தடையாக இருப்பதால் அவருக்கே தெரியாமல் கருவுற்று அக்குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக கணவனிடம் சொல்லாமல் இந்தியா வந்துவிடுகிறார்.அவரைத் தேடி ராபர்ட்டும் வருகிறார்.அப்புறம் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் திரைக்கதை.
படத்தின் தலைப்பில் முதலில் வரும் மிஸஸ் ஆக வனிதா விஜயகுமார் இருக்கிறார்.அவர் தன் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை ஏற்று அதற்குத் தக்க நடித்திருக்கிறார்.அந்த வயதினருக்கான ஆசாபாசங்களை வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ராபர்ட்டுக்கு பெரும்பாலான ஆண்கள் போல் சுமைதாங்கி வேடம்.அதைச் சரியாகத் தாங்கி படத்துக்குப் பலமாக இருக்கிறார்.
வனிதாவின் அம்மாவாக ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஃபாத்திமா பாபு, ஸ்ரீமன், ஆர்த்தி கணேஷ், கணேஷ்குமார், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி, ஸ்வேதா பாரதி என நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.யாரும் அழுத்தமாகப் பதியவில்லை என்பது வியப்பு.பழைய படங்கள் போல், ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் கிரண்.
துள்ளலான பாடல்களைக் கொடுத்து இரசிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.
ராஜபாண்டி.டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டிஜி கபில் ஆகிய மூவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். பாங்காக் காட்சிகள் இனிமையாக இருக்கின்றன.
நாயகியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமாரே எழுதி இயக்கியிருக்கிறார்.கவர்ச்சிக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியனவற்றைத் தாராளமாக வைத்திருக்கிறார்.கதைக்கேற்ப அவையா? அவற்றிற்கேற்ப கதையா? என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
இதுபோன்ற விசயங்களைக் குறைத்து சொல்ல நினைத்த கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைத்திருந்தால் கவனிக்கத் தக்க படமாக அமைந்திருக்கும்.
– இளையவன்