படத்தின் தலைப்பே இது வீடு பற்றிய கதை என்பதைச் சொல்லிவிடுகிறது.அதற்கேற்ப வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் சொந்தவீட்டுக்கனவு மற்றும் அதை அடைவதற்கான அவர்களின் போராட்டம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு படம் அமைந்திருக்கிறது.
நடுத்தர வர்க்கக் குடும்பத்தலைவர் சரத்குமார். அவர் மனைவி தேவயானி. அவர்களுக்கு மகனாக சித்தார்த்,மகளாக மீதாரகுநாத்.வாடகை வீட்டில் குடியிருக்கும் சரத்குமாருக்கு சொந்தவீடு வாங்கிவிட வேண்டுமென்று தீவிர ஆசை.அதை நோக்கிப் பயணிக்கும்போது பல தடைகள். அவற்றைத் தாண்டி வீடு வாங்கினார்களா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் திரைக்கதை.
நடுத்தர வர்க்கக் குடும்பத்தலைவர் வேடத்துக்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார் சரத்குமார்.உண்மைக்கும் விருப்பத்துக்கும் இடையிலான போட்டியில் சிக்கிக் கொண்டு அவர்கள் படும் அவஸ்தைகளைத் திரையில் கொண்டுவந்திருக்கிறார்.பல இடங்களில் சோகம் அதிகமாகியிருப்பது பலவீனம்.
குடும்பத்தலைவியாகவே இருக்கிறார் தேவயானி.அவருடைய திரை இருப்பும், மகன் குறித்து எதிர்மறைக் கருத்துக் கொண்டிருக்கும் சரத்குமாரிடம் வாதாடும் இடம் உட்பட பல இடங்களில் அழுத்தமான நடிப்பும் அவருக்குப் பலம்.
பள்ளி, கல்லூரி மாணவர், இளவயது ஆகிய மூன்றுவகையான தோற்றங்களில் நடித்திருக்கும் சித்தார்த், அப்பாவின் கனவுக்கும் தன் விருப்பத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் மகன்களின் பிரதிநிதியாக இருந்து படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
சித்தார்த்தின் தோழியாக நடித்திருக்கும் சைத்ரா, சித்தார்த்தின் சகோதரியாக நடித்திருக்கும் மீதா ஆகியோர் கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள்.
யோகிபாபு அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.
அம்ரித் ராம்நாத் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.
தினேஷ் கிருஷ்ணன்.பி மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.கிடைத்த குறுகிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி நிறைவான காட்சியனுபவம் கொடுக்கப் பாடுபட்டிருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் கணேஷ்சிவா, படத்தை சுவாரசியமாகக் கொண்டு செல்ல மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.
ஸ்ரீகணேஷ் எழுதி இயக்கியிருக்கிறார்.பெரும்பாலான மக்களின் சொந்த வீட்டுக் கனவை கதைக்களமாக எடுத்துக் கொண்டால் அவர்கள் மனதுக்கு நெருக்கமான படத்தைக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்து இயங்கியிருக்கிறார்.
நடிகர்களின் மிகை நடிப்பும் யூகிக்கக்கூடிய காட்சிகளும்,நடுத்தர மக்கள் தமக்கும் மேலே உள்ள உயர்தட்டு வர்க்கத்து வீடுகளைப் போல் வீடு வாங்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதும் பலவீனம்.
– இளையவன்