சிங்கள இனவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பவும் உயிரினும் மேலான மானத்தைப் பாதுகாக்கவும் தாய்த்தமிழ்நாட்டை நாடி ஓடி வந்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் துயர்மிகு கதைகள் ஏராளம்.அவற்றிலொன்றைப் படமாக எடுத்திருக்கிரார்கள்.அதுதான் ப்ரீடம் அதாவது விடுதலை.

1991 ஆம் ஆண்டு கள்ளத்தோணி மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேருகிறார் நாயகன் சசிகுமார். அவர் இராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார். அங்கே ஏற்கனவே அவரது கர்ப்பிணி மனைவி லிஜோ மோல் ஜோஸ் அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.கடல் கடந்து கணவனும் மனைவியும் சேர்ந்த அந்த மகிழ்ச்சி இரண்டு நாள் கூடநீடிக்கவில்லை.
ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார்.அதனால்,அண்மையில் தமிழ்நாடு வந்த ஈழத் தமிழர்களைப் பிடித்துக் கொண்டு போய் விசாரணை என்ற பெயரில் வேலூர் கோட்டையில் அடைக்கிறார்கள்.
இரண்டு நாட்களில் திருப்பி அனுப்பி விடுவார்கள் என்று சொல்லப்பட்டு அழைத்துக் கொண்டு போன அவ்வளவு பேரும் அங்கே பல விதமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருடக் கணக்கில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அங்கே என்னவெல்லாம் நடந்தது? அதன்பின் என்ன நடக்கிறது? என்பனவற்றை விறுவிறுவென ஆங்கிலப்பட பாணியில் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

இது நடிப்பு என்று சொல்லிவிட முடியாதபடி அவ்வளவு எதார்த்தமாக நடித்திருக்கிறார் சசிகுமார்.ஈழத்தமிழ் உச்சரிப்பும் உடல்மொழியும் அவருக்கு நன்றாகக் கைவந்திருக்கிறது.அவருடைய திரைப்பயணத்தில் இது முக்கியமான படமாக நிலைக்கும்.

நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல்ஜோஸ்,அவர் நடித்த முந்தைய படங்களைப் போலவே இந்தப்படத்திலும் இரசிகர்கள் மனதில் தங்கி கலங்க வைக்கிறார்.இதுபோன்ற வேடங்களை ஏற்கும் எவரும் இவரைப் பார்த்துப் பயிலலாம் என்கிற அளவுக்கு உச்சம்.

சசிகுமாருடன் சிறையில் இருப்பவர்களில் முக்கியமானவர் மு.இராமசாமி, இன்னொரு சிறைவாசி மணிகண்டன் ஆகியோர் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்து நம்மை நடுங்க வைத்துவிடுகிறார்கள்.

புலனாய்வு அதிகாரியாக ரமேஷ்கண்ணா,விசாரணை அதிகாரியாக சுதேவ்நாயர் வழக்குரைஞராக மாளவிகா ஆகியோர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் இசையினால் கதையில் இருக்கும் கலக்கம் மேலும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

உதயகுமார் ஒளிப்பதிவில் சிறைக்காட்சிகளும் தப்பிக்கும் காட்சிகளும் ஆங்கிலப் படங்களுக்கு நிகராகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

இராஜீவ் கொலையையொட்டி தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை திரையேற்றியிருக்கிறார் இயக்குநர் சத்யசிவா.விசாரணை அதிகாரியாக ஒரு மலையாளியை நியமிப்பது உள்ளிட்ட பல நுட்பமான தமிழினஎதிர்ப்பு அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

– ஆநிரையன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.