புறநகர் பகுதிக்கு தாய் (மந்திரா) மற்றும் மகள் ரஞ்சனா (ஜனனி) புதிதாக குடி வருகின்றனர். அதே தெருவில் வசிக்கும் ராகவாவுக்கு (டீஜய்) ஜனனி மீதுகாதல் வளர்கிறது. முதலில் அந்த காதலை ஏற்க மறுக்கும் ரஞ்சனா . ஒரு கட்டத்தில் ராகவாவை காதலிக்கிறார். இந்த விவரம் ரஞ்சனா தாய்க்கு தெரிந்து அவர் மகளை கண்டிப்பதுடன், ராகவாவைவும் நடுவீதியில் அசிங்கப்படுத்துகிறார். ரஞ்சனாவை வேறு ஊருக்கு அனுப்பி விடுகிறார். அவரைத் தேடி செல்கிறார் ராகவா. இந்த காதல் முடிவு என்னவாகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.
ஆக்சன் படங்கள் குடும்ப படங்கள் வரிசைகட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று வித்தியாசமான காதல் கதையாக உருவாகி இருக்கிறது உசுரே.
ஹீரோவாக அறிமுக மாகியிருக்கும் டீஜய் அருணாச்சலம் புதுமுகம் போல் இல்லாமல் புறநகர் பகுதி சாதாரண இளைஞனாக நடிப்பை வெளிப்படுத்தியி ருக்கிறார்.
சக நண்பர்களுக்குள் ஜனனி மற்றும் அவரது தாய் மந்திரா பற்றி வாக்குவாதம் எழுந்து மோதல் நடப்பதும் அது இரு குடும்ப மோதலாக மாறுவதும் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களின் பிரதிபலிப்பு.
ஜனனி கொழுக் மொழுக்கென்று முதல் பாதி படம் வரை கப்சிப் என வந்து செல்கிறார். பின்னர் டீஜய்யை காதலிக்க தொடங்கியதும் சற்று சுறுசுறுப்பு ஆகிறார். அப்பாவித்தனமாக அவர் முகத்தை வைத்துக்கொண்டு டிஜய்யை காதலிக்கவும் செய்யாமல், காதலையும் ஏற்காமல் தவிக்கவிடுவது சரியான கல்லுளி மங்கியாக இருப்பாரோ என்று எண்ண வைக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் தலைகாட்டி இருக்கும் மந்த்ரா வித்தியாசமான தாயாக நடித்திருக்கிறார். அவரே வில்லியாகவும் மாறுவது அதிர்ச்சி..
ஆதித்யா கதிர் தங்கதுரை இருவரும் காமெடி என்ற பெயரில் சீனுக்கு சீன் குடிகார கூத்தாடிகளாக மாறி இருக்கிறார்கள். ஹீரோவின் தந்தையாக குணச்சித்திர வடத்தில் முதன்முறையாக கிரேன் மனோகர் நடித்து மனதில் இடம் பிடிக்கிறார்.
டீ ஜய், ஜனனி இருவரின் காதலுக்குள் ஒரு அதிர்வலை கொண்ட சஸ்பென்சை இயக்குனர் நவீன் டி கோபால் வைத்திருப்பது எதிர்பாராத ஷாக். படத்தில் பெரும்பகுதி காட்சிகளில் இளைஞர்கள் குடித்துவிட்டு ஆட்டம் போடுவது போல் காட்டி இருக்கும் காட்சிகளை இயக்குனர் வைத்து இளைஞர்களுக்கு தவறான வழி காட்டுதலை காட்டியிருப்பதை தவிர்த்து இருக்கலாம்.
மவுலி எம் ராதாகிருஷ்ணா தயாரித்திருக்கிறார்
படத்திற்கு தூணாக அமைகிறது கிரண் ஜோசின் இசை. பாடல்கள் 90ஸ் காலகட்டங்களை ஞாபகப்படுத்துகிறது. இது போன்ற இதமான பாடல்களை கேட்டு நீண்ட நாள் ஆகிவிட்டது. இசையமைப்பாளருக்கு ஒரு பாராட்டு மாலை சூட்டலாம்
மார்க்கி சாய் ஒளிப்பதிவு ரசிகர்களை தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்கிறது.
உசுரே – பெண்களை நம்பாதே..
நடிப்பு: டீஜய் அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர் தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு: மவுலி எம் ராதாகிருஷ்ணா
இசை: கிரண் ஜோஸ்
ஒளிப்பதிவு: மார்க்கி சாய்
இயக்கம்: நவீன் டி கோபால்
பிஆர்ஓ: சாவித்திரி (S3)