லோகேஷ் கனகராஜின் சினிமா உலகில், சினிமாவின் நம்பர் ஒன் ஆக்சன் ஹீரோக்கள் பலரை, வெறுமனே வெறிச் சிரிப்பு சிரிக்கும் வன்முறை நிறைந்த பாத்திரங்களாக படைத்தே கமர்ஷியல் வியாபாரத்தில் இதுவரை வெற்றி பெற்றிருக்கிறார். கூலி படம் ரஜினியால் அந்த வெற்றியின் விளிம்பில் நிற்கிறது. இனியும் இது போல தட்டையான கதாபாத்திரங்களை வைத்து நம்பர் ஒன் இயக்குநராக தன்னை நிலைநிறுத்த முடியும் என்று அவர் நம்பினால் தவறு அவருடையதாகத் தான் இருக்கும்.
விசாகப்பட்டினத்தில் இருக்கும் சத்யராஜும் சென்னையில் வசிக்கும் ரஜினிகாந்த்தும் உயிர்நண்பர்கள்.ஆனால் தனித்தனியாக இருக்கிறார்கள்.ஒருநாள் சத்யராஜ் இறந்துவிட்டதாக ரஜினிக்குத் தகவல்.அங்கே போகிறார்.போனபோது, நண்பனின் மரணம் இயற்கையாக நடக்கவில்லை கொலை என்பதை அறிந்த ரஜினி,அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்குகிறார்.இதுதான் கூலி படத்தின் கதை.
ரஜினிகாந்த் கறிவெட்டும் கத்திகளுடன் அறிமுகமாகிறார்.அவருடைய வழக்கமான நடிப்பு மற்றும் நடவடிக்கைகளால் இரசிகர்களை ஈர்க்கிறார்.
சத்யராஜின் மகளாக நடித்திருக்கும் (அதிலும் ஒரு திருப்பம் இருக்கிறது) ஸ்ருதிஹாசன்,அன்பான மகள்,பொறுப்பான அக்காவாக பொருத்தமாக நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் நாகார்ஜுனாவுக்கு அதிக வேலையில்லை.
நாகார்ஜுனாவின் அடியாளாக வரும் செளபின் சாஹிர் தான் படம் முழுக்க கோலோச்சுகிறார்.நன்றாக நடித்திருக்கிறார் என்பதைத்தாண்டி மோனிகா பாடலில் அவருடைய நடனத்துக்குப் பெரும் வரவேற்பு.
சத்யராஜுக்கு குறைவான நேரம்தான்.அதிலும் நிறைவாகச் செய்திருக்கிறார்.
இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரச்சிதாராம், யார் இவர்? பின்னிப் பெடலெடுக்கிறார் என்று சொல்ல வைத்திருக்கிறார்.
ஒரு சண்டை மற்றும் சில காட்சிகளில் வரும் உபேந்திரா நிறைவு.
கடைசியில் வரும் அமீர்கான் வராமல் இருந்திருந்தாலும் படத்துக்குப் பங்கமில்லை.
ரஜினியின் உதவியாளராக வரும் மாறன், நாகார்ஜுனாவின் மகனாக வரும் கண்ணா ரவி, தொழிலாளர்கள் காளி வெங்கட், திலீபன், அடியாள் தமிழ்,ஸ்ருதிஹாசனின் தங்கைகளாக வரும் ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளஸி உள்ளிட்டோர் நன்று.
அனிருத் இசையமைப்பில் பாடல்கள் பின்னணி இசை போலவே வந்து கொண்டிருக்கின்றன.பின்னணி இசை முன்னணி இசையாக இருக்கிறது.
கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.காட்சிகளில் பிரமிப்பில்லை.
எழுதி இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், இவ்வளவு நடிகர்களை வைத்துக் கொண்டு அவர்களைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியிருக்கிறார்.ஒரு பழிவாங்கும் பழைய கதைக்கு இவ்வளவு நடிகர்களா? என்கிற அயற்சியை ஏற்படுத்துகிறார்.அதீத வன்முறைக்காட்சிகள் செயற்கைத் தனமாக இருப்பதால் வெறுப்பு ஏற்படுகிறது.
உயிர்நண்பர்கள் ஏன் பிரிந்திருக்கின்றனர்? கடைசியில் கூட மகளிடம் அங்கிள் என்று கூப்பிடலாமா? என்று மனதுக்கு ஒட்டாத வசனம் வைத்திருப்பது ஏன்? என்பன உட்பட ஏராளமான கேள்விகள். எங்கெங்கோ சுற்றும் கதை. ரஜினியைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படம்…
கூலி – காலி
– ரவி