ஒரு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் துப்பாக்கி காணாமல் போகிறது.அதனால் அதற்குப் பொறுப்பாக இருந்த தலைமைக் காவலர் லால் சிக்கலில் மாட்டுகிறார்.அதேநேரம், ஒரு அரசியல்வாதியின் பத்து கோடி பணமும் காணாமல் போகிறது.அதிலும் காவல்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் என்ன தொடர்பு?துப்பாக்கியைத் தொலைத்த லால் நிலை என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் சரண்டர்.(உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கியை சில காலத்துக்குக் காவல்நிலையத்தில் ஒப்படைப்பதற்குத்தான் சரண்டர் எனப் பெயர்.அதனால் இந்தத் தலைப்பு)
நாயகனாக பயிற்சிதுணை ஆய்வாளர் வேடத்தில் தர்ஷன் நடித்திருக்கிறார்.தொலைந்து போன துப்பாக்கியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு அவரிடம் தரப்படுகிறது.அதை அவர் செவ்வனே செய்திருக்கிறார்.காவல்துறையினருக்கான பொறுப்பும் மிடுக்கும் அவர் நடிப்பில் வெளிப்படுகிறது.
படத்தின் முக்கிய தூணாக லால் இருக்கிறார்.வயதான தலைமைக்காவலராக நடித்திருக்கிறார்.அம்மாதிரி இருப்பவர்களுக்குக் காவல்நிலையத்தில் என்ன மரியாதை கிடைக்கும் அதனால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை இயக்குநர் எழுத்தில் எழுதியிருக்கிறார்.அதை அட்சரசுத்தமாக நடிப்பில் கொண்டு வந்து கலங்க வைத்துவிடுகிறார்.
காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் அரோல் டி.சங்கர் மற்றும் அரசியல்வாதியாக நடித்திருக்கும் சுஜித் ஆகியோருக்கும் முக்கிய வேடங்கள்.பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
நாயகியாக பாடினிகுமார் இருக்கிறார்.இதுபோன்ற படங்களில் பாடல்காட்சிகளிலாவது நாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.இந்தப்படத்தில் பாடல்களும் இல்லை என்பதால் பரிதாப பாடினியாகிவிட்டார்.
நடிகராகவே வரும் மன்சூர் அலிகான்,மணிப்பூருக்கு துப்பாக்கியுடன் தான் செல்வேன் என்று பிடிவாதம் பிடிப்பதன் மூலம் தன் இருப்பை அழுத்தமாகப் பதிக்கிறார்.
முனீஸ்காந்த் நகைச்சுவை செய்கிறார்.சில இடங்களில் சிரிப்பு.சில இடங்களில் கசப்பு.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் உழைப்பால் இரவு நேரக் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் நன்றாக அமைந்திருக்கின்றன.காவல்நிலையத்துக்குள்ளேயே பெரும்பகுதிப் படம் நகர்ந்தாலும் அது குறையாகத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பாடல்கள் இல்லையென்றாலும் பின்னணி இசை மூலம் இசையமைப்பாளர் விகாஷ் படிஷா படத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ரேணு கோபால்,படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகரப் பாடுபட்டிருக்கிறார்.
கவுதமன் கணபதி எழுதி இயக்கியிருக்கிறார்.ஒரு காவல்நிலையத்துக்குள் என்னவெல்லாம் நடக்கும்? வெளியில் மிடுக்காக இருக்கும் காவலர்களின் நிலை காவல்நிலையத்தில் எப்படி இருக்கிறது? ஆகியனவற்றை விளக்கமாகச் சொல்லி அதனூடே ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்.அதனால் இப்படம் கவனிக்கத்தக்க படமாக மாறியிருக்கிறது.
– இளையவன்