நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகளைச் செய்வது யார்? என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவி செய்கிறார் கதாநாயகன் வெற்றி.அவர் யாரென்றால்? ஒரு துப்பறியும் எழுத்தாளரின் மகன்.புத்திக் கூர்மையுடைய அவருக்கு காவல்துறை ஆய்வாளர் தம்பிராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது.அப்போதிருந்து அவருக்கு மூளை உதவி செய்கிறார்.அதன்மூலம் அந்தக் கொலைகாரனை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? என்பதுதான் சென்னை ஃபைல்ஸ் – முதல்பக்கம் படம்.
நாயகனாக நடித்திருக்கும் வெற்றி,அப்பாவி போல் தோற்றமளித்துக் கொண்டே தன் புத்திக் கூர்மையான செய்கைகளால் ஆச்சரியப்படுத்தும் வேடத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.நாயகி ஷில்பா மஞ்சுநாத்துடனான காட்சிகளிலும் அப்படியே இருப்பதுதான் குறை.சண்டைக்காட்சிகளில் நிறை.
நாயகியாக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத்துக்கு பத்திரிகையாளர் வேடம். நாயகன் வெற்றி சொல்லச் சொல்ல அவருடைய தந்தையைப் பற்றி எழுதுகிறார்.படத்திலும் திரைக்கதையிலும் அவருக்குக் குறைவான வாய்ப்புதான் என்றாலும் அதைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் தம்பி ராமையா, தன் வழக்கமான அலப்பறைகளால் சிரிக்க வைக்கிறார்.மகள் தொடர்பான காட்சிகள் வந்தவுடன் பொறுப்பான தந்தையாக கண் கலங்கவும் வைக்கிறார்.
நகைச்சுவைக்கு ரெடின் கிங்ஸ்லி இருக்கிறார்.பேருக்கு இல்லாமல் உண்மையாகவே சிரிக்க வைக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் மகேஸ்தாஸ்,தோற்றத்திலும் அதற்கேற்ற நடிப்பிலும் மிரட்டுகிறார்.
அரவிந்த் ஒளிப்பதிவில் சென்னையைச் சுற்றிக் காட்டுகிறார்.காட்சிகளுக்குத் தக்க ஒளியமைத்து உறுத்தாமல் பார்க்க வைத்திருக்கிறார்.
ஏஜிஆர் இசையில் படபடப்பு அதிகரிக்கிறது.
படத்தைத் தொகுத்திருக்கும் விஷால்,தன்னாலியன்றவரை வேகப்படுத்தியிருக்கிறார்.
அனிஸ் அஷ்ரப் எழுதி இயக்கியிருக்கிறார். பார்த்துச் சலித்த கதைதான் என்றாலும் திரைக்கதை மூலம் வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கிறார்.சாதாரணமாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் படம் கொலைகாரனைப் பிடித்ததும் வேகம் பிடிக்கிறது.சிற்சில குறைகளைத் தாண்டியும் ஒரு நேர்த்தியான படம் கொடுக்க அவர் எடுத்திருக்கும் முயற்சிகள் தெரிகிறது.
– ஆநிரையன்