அறிமுக இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், புதுமுக நாயகன் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது. இப்படத்தில் நாயகியாக ’பரமசிவன் பார்வதி’, ‘மார்கன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் சேஷ்விதா கனிமொழி நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, இராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் இராஜன், பிரியதர்ஷினி இராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்படிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கரன் பி.க்ருபா இசையமைத்திருக்கிறார். எஸ்.கமலகண்ணன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இப்படத்தை ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகளின் இறுதிக் கட்டத்தில் உள்ள ‘குற்றம் புதிது’ திரைப்படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து நாயகன் தருண் விஜய் கூறியதாவது….
என் அப்பா, அம்மா, அக்கா ஆகிய மூவரும் மருத்துவர்கள். நான் திரைப்படத் துறையில் நுழைந்து கதாநாயகனாக வேண்டும் என்று முடிவு செய்தேன்.வீட்டில், சிறு வயதில் இருந்து என்னையும் மருத்துவராக வேண்டும் என்று சொல்லித்தான் வளர்த்தார்கள், நானும் பள்ளி படிக்கும் போது மருத்துவராக வேண்டும் என்றுதான் இருந்தேன்.12 ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டது, நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். கல்லூரியில் படிக்கும் போதே, நடிப்பு, நடனம், சண்டை ஆகியனவற்றில் பயிற்சி பெற்றேன். காலையில் கல்லூரிக்குச் சென்று படித்தால், மாலையில் சினிமாவுக்காக தயார் ஆவதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவேன். கல்லூரி முடிந்ததும், சினிமாவுக்காக தயாராகி விட்டாய், அதற்கான வேலைகளைப் பார் என்று என் அப்பா எனக்கு ஊக்கம் அளித்தார்.
அப்போது தான் இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங் கதை சொன்னார், அவரது கதை நன்றாக இருந்தது. ஆனால், முதல் படத்திலேயே ஒரு நெகட்டிவ் பார்வையுள்ள கதாபாத்திரமாக இருக்கிறதே என்று தோன்றியது. நாங்கள் நினைப்பதைப் புரிந்து கொண்ட இயக்குநர்,இந்தக் கதையை மையமாகக் கொண்டு ஒரு குறும்படம் எடுத்தார். அதில் என்னை நடிக்க வைத்தார். அந்தப் படத்தைப் பார்த்தவுடன், இது எனக்குச் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதேபோல் என் அப்பாவுக்கும் அந்தப்படம் பிடித்திருந்தது, அதனால் ஈர்க்கப்பட்ட அவர், தானே தயாரிப்பதாகவும் முன் வந்தார்.அப்படித்தான் இப்படம் உருவானது.இப்படத்தின் மூலம் திரைப்படங்கள் மற்றும் திரையுலகம் பற்றி நிறையக் கற்றுக்கொண்டேன்.
இந்தக்கதையில் என் கதாபாத்திரம் மிக வித்தியாசமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.உணவு விநியோகம் செய்பவனாக நடித்திருக்கிறேன். என்னுடைய குணாதிசயங்கள் அவ்வபோது மாறிக்கொண்டிருக்கும். ஐந்து விதமான குணாதிசயங்களை வெளிப்படுத்தி நடித்திருக்கிறேன். அனைத்தும் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததுதான். அவர் ஒவ்வொரு காட்சியை நடித்துக்காட்டுவார். கொரில்லா குரங்கு போல் நடக்க வேண்டும் என்ற யோசனையும் சொன்னார். அதற்காக சில காணொலிகளைக் காட்டினார்.அவற்றைப் பார்த்து பயிற்சி செய்து நடித்திருக்கிறேன். அது மிகவும் கடினமாக இருந்தது.அதற்காக 3 மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். டீசரில் அதை குறிப்பிட்டுச் சொல்லி பலர் பாராட்டுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
நாயகி சேஷ்விதா கனிமொழி கூறியதாவது….
முதன்முதலில் இந்தப் படத்தில் நடிக்கத்தான் தேர்வானேன். அதன்பிறகு தான் பிற படங்களின் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நடிகை என்றால், அவருக்கு சோசியல் மீடியா பக்கம் இருக்க வேண்டும், அதில் அவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார், எப்படிப்பட்ட கண்டெண்ட் போடுகிறார், என்பதை எல்லாம் எதிர்பார்ப்பார்கள், ஆனால் இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங் சார், அது எதையும் எதிர்பார்க்காமல், என்னுடைய நடிப்பை மட்டுமே பார்த்து என்னை நாயகியாகத் தேர்வு செய்தார்.அவருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது….
நான் குறும்படங்கள் இயக்கிவிட்டு திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது தருண் விஜய்க்காக கதை கேட்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்டேன்.என்னிடம் நான்கு கதைகள் இருந்தன. தருண் விஜயை பார்த்து, அவரிடம் பேசியவுடன், ‘குற்றம் புதிது’ கதை அவருக்கு சரியாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை நடிக்க வைத்தேன்.
குற்றம் புதிது என்றால் இதுவரை யாரும் செய்யாத குற்றம் செய்யப்படுகிறது என்று அர்த்தம் இல்லை, வழக்கமான குற்றம் தான், அதை புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறேன். கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம் என்றாலும், இதில் உணர்ச்சிகரமான பல விசயங்கள் இருக்கின்றன. அப்பா – மகள் செண்டிமெண்ட்,காதல் என அனைத்தும் இருக்கும்,அவை பார்வையாளர்களை நிச்சயம் பாதிக்கும் வகையில் இருக்கும்.
இந்தப்படத்திற்கு தருண் விஜய் சரியாக இருப்பார், என்று தோன்றினாலும் இந்த கதாபாத்திரத்திற்காக கொஞ்சம் தயாராக வேண்டி இருந்தது, அதற்காக அவர் பல மாதங்கள் பல்வேறு பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.அவர் நடிப்பு குறிப்பிட்டுப் பேசப்படும்.முதல்படத்திலேயே இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தை அவர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அவர் ஐந்து விதமாக படத்தில் நடித்திருக்கிறார், அது ரொம்பவே புதிதாக இருக்கும்.நிச்சயம் அவரது நடிப்பு பாராட்டுப் பெறும்.
படத்தின் மையக்கரு கிரைம் திரில்லர் என்பதால் காட்சிகளும் வன்முறை சார்ந்தவையாக தான் இருக்கும். டீசரும் அப்படி இருந்தது. ஆனால்,படத்தில் முழுக்க முழுக்க வன்முறை மற்றும் கொடூரமான காட்சிகள் மட்டுமே இருக்காது. அதைத்தாண்டி படத்தில் எமோஷனலான விசயங்கள் பல இருக்கின்றன.அவை இரசிகர்களை கவர்வதாக இருக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.