கிங்டம் திரைப்படத்துக்கு தடை விதிக்காத ஸ்டாலின் அரசு.
ஆந்திரத்து பாசம் ஒருபோதும் ஆத்திரம் கொள்ள வைக்காது!
விஜய் தேவரகொண்டா தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
=====================================
ஈழத் தமிழர்களை குற்றப் பரம்பரை போல் சித்தரிக்கும் தெலுங்கு திரைப்படமான கிங்டம் திரைப்படத்திற்கு எதிராக திரையரங்குகள் முன்பு நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்துகிறது.
ஆனால், இங்குள்ள ஆளும் திராவிட மாடல் அரசோ தமிழினத்தை இழிவு படுத்தும் கிங்டம் திரைப்படத்திற்கு எதிராக குரல் கொடுக்க மறுக்கிறது.
மாறாக, திரையரங்குகள் முன்பு போராடிய நாம் தமிழர் கட்சி தோழர்களை கைது செய்வதோடு, காவல் துறையை திரையரங்குகளுக்கு முன்பு நிறுத்தி பாதுகாப்பும் வழங்குகிறது.
அண்மையில் கமல்ஹாசன் நடித்த தக்லைப் திரைப்படத்தை கன்னட திரையுலகம் மட்டுமின்றி அங்குள்ள ஒட்டுமொத்த கன்னட, இந்திய தேசிய அரசியல் இயக்கங்களும் தடை விதித்தன.
இத்தனைக்கும் “தக்லைப்” படம் கன்னடர்களை இழிவாக சித்தரிக்க வில்லை. தக்லைப் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்து கன்னட மொழி உருவானதாக கூறிய ஒரு காரணத்திற்காகவே திரைப்படத்தை தடை செய்தார்கள்.
கர்நாடக உயர் நீதிமன்றமும் கன்னடர்கள் மனம் புண்பட்டு இருப்பதால் அதற்கு மன்னிப்பு தெரிவித்தால் தான் படத்தை வெளியிட அனுமதிக்க முடியும் என்று கூறியது.
ஆனால், கிங்டம் தெலுங்கு திரைப்படம் தமிழினத்தை கொச்சைப்படுத்துகிறது. ஆளும் திராவிட மாடல் அரசுக்கு இதுபற்றி எல்லாம் கவலை இல்லை.
தற்போது கிங்டம் படத் தயாரிப்பாளர் பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். உயர்நீதிமன்றமோ திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கச் சொன்னால் உடனடியாக அதை நிறைவேற்றித் தருவார்கள் . தமிழர்கள் மனம் புண்பட்டுள்ளது என்றெல்லாம் ஒருபோதும் வாதாட மாட்டார்கள்.
சந்தன மரங்களை கடத்தியதாக அப்பாவி தமிழர்களை ஆந்திர அரசு காட்டுக்குள் சுட்டுக் கொன்ற போது வேடிக்கை பார்த்தவர்கள்தான் இந்த திராவிட ஆட்சியாளர்கள்.
திரைப்படத்தில் ஆந்திரர்கள் தமிழர்களை கொன்றால் மட்டும் பொங்கி எழுந்து விடுவார்களா என்ன?
ஆந்திரத்து பாசம் ஒருபோதும் ஆத்திரம் கொள்ள வைக்காது!
– கதிர் நிலவன்

இந்தத் திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம். கேங்ஸ்டர் திரைப்படத்திற்கான களம் ஈழம். இந்த பரந்த இந்தியாவில் வேறு மாநிலமே அவர்களுக்கு கிடைக்கவில்லை. அங்கே வில்லன் ஒரு ஈழத் தமிழன். அந்த வில்லன் பெயர் முருகன்.
அந்த வில்லன் ஈழத்திற்கு இங்கிருந்து வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்ட மலையகத் தமிழர்களை
அடிமைகள் போல நடத்துகிறான். ஒரு கட்டத்தில் எங்கிருந்தோ வந்த பயல்களா உங்களுக்கு இவ்வளவு திமிரா என்று பேசுகிறான்.
நிஜத்தில் மலையகத்தமிழர்களை மலைப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களாக அடிமைப் படுத்தி வைத்திருப்பது சிங்கள பெருமுதலாளிகள். அவர்களை விட்டுவிட்டு தமிழர்களை விஷமமாக சித்தரிக்கிறது இந்தப் படம். வேண்டுமென்றே இது செய்யப்பட்டிருப்பது முழுப்படத்தையும் பார்த்தால் தெரிகிறது.
இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும். தமிழர்கள் இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும்.
விஜய் தேவரகொண்டா தமிழரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இல்லாவிட்டால் தேவரகொண்டாவின் படம் இனி தமிழ்நாட்டில் ஓடக்கூடாது.
தமிழினத்தை இழிவுபடுத்துவதை கண்டிக்காமல் காவல்துறையை வைத்து பாதுகாப்பு கொடுக்கும் ஸ்டாலினுக்கு தமிழர்கள் ஓட்டுப் போடக்கூடாது.
–வாட்சப் பகிர்வு.