பணம் பெரிதில்லை அன்புதான் பெரிது என்று வாழும் அறுபது வயதுக்காரரையும் பணம்தான் பெரிது என்று வாழும் இருபது வயது இளைஞரையும் கதை நாயகர்களாக வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பாடம் நடத்தியிருக்கும் படம் காந்தி கண்ணாடி.
நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த கேபிஒய் பாலா இந்தப் படத்தில் நாயகனாக உயர்ந்திருக்கிறார்.அதற்கேற்ப தன்னைத் தயார்படுத்திக் கொண்டுமிருக்கிறார்.காதல் மோதல் உணர்ச்சிகர நடிப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்தக் கூடிய வேடம்.அதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நமீதா கிருஷ்ணமூர்த்திக்கு திரைக்கதையில் குறைவான இடம்தான் என்றாலும் நிறைவாக இருக்கிறார்.
படத்தில் மூத்த இணையராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா த்ம்பதியர்,இருந்தால் இப்படி இருக்க வேண்டும் என்று பொறாமைப்படுகிற வாழ்க்கை வாழ்கிறார்கள்.காதலுக்காக தன் ஒட்டுமொத்த கம்பீர அடையாளத்தை விட்டுவிட்டு சாமானிய வாழ்வு வாழும் பாலாஜி சக்திவேல் கதாபாத்திரம் மூலம் பல்வேறு நல்லுணர்வுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
ஜாடிக்கேத்த மூடி போல் பாலாஜி சக்திவேலுக்கேற்ற இணையராக அர்ச்சனா இருக்கிறார்.அவருடைய அனுபவ நடிப்பு நெகிழ்ந்து இரசிக்க வைக்கிறது.
மதன், நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியம், ரித்து சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு உள்ளிட்ட நடிஅழ்கர்களும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜாவின் உழைப்பில் காட்சிகள் நீரோடை போல் ஓடுகின்றன.
விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் வண்ணம் இருக்கின்றன.பின்னணி இசையில் காட்சிகளை முழுமையாக்கியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஷெரிப், எல்லாக் காலத்திலும் அன்புதான் பெரிது எனும் ஆழமான கருத்தை பணமதிப்பிழப்பு உள்ளிட்ட அழுத்தமான விசயங்களைக் கலந்து சொல்லி கவனிக்க வைத்திருக்கிறார்.
– ஆநிரையன்