காவல்துறை அதிகாரியின் மகள் காணாமல் போகிறார்.அதேநேரம் ஒரு கொலை செய்ததாகச் சொல்லி ஓர் இளைஞர் சரணடைகிறார்.அதைப் பற்றி விசாரித்தால் அவர் கொலை செய்ததாகச் சொன்னவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.அப்படியானால் அந்த இளைஞன் ஏன் பொய் சொல்லவேண்டும்? என்கிற கேள்விக்கான விடையாக குற்றம் புதிது படம் இருக்கிறது.
கதாநாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், அதற்கென பக்காவாக தயாராகியிருக்கிறார்.உடலமைப்பு மட்டுமின்றி நடிப்பிலும் குறைவின்றி இருப்பது அவருக்குப் பலம்.அதற்குத் தக்க காட்சிகளும் அமைந்திருப்பது அவருடைய திரையுலகப் பயணத்தின் பாதையை நீட்டும் என்பதில் மாற்றமில்லை.
நாயகியாக சேஷ்விதா கனிமொழிவுக்கு வழக்கமான நாயகிகளைக் காட்டிலும் மாறுபட்ட கதாபாத்திரம்.அதற்குப் பொருத்தமாக நடித்து வரவேற்பைப் பெறுகிறார்.அவருடைய கண்கள் இரசிகர்களை உடனே ஈர்க்கும் ஆயுதம்.
நிழல்கள் ரவி, மதுசூதன் ராவ்,பாய்ஸ் ராஜன்,ராம்ஸ் உள்ளிட்டோரின் பாத்திரப்படைப்புகளும் அதில் அவர்களுடைய நடிப்பும் அவர்களுக்கு மட்டுமின்றி படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.
கரண் பி.கிருபா இசையில் பாடல்கள் கேட்கும்விதமாக அமைந்திருக்கின்றன.இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசைதான் மிக முக்கியம் என்பதை உணர்ந்து பின்னணி இசைத்திருக்கிறார்.அது காட்சிகளின் தன்மையை மேலும் உயர்த்திப் பிடித்திருக்கிறது.
ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் அச்ச உணர்வு காட்சிகளிலும் சரியாக வெளிப்பட்டு க்ரைம் பட இரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது.
படத்தொகுப்பாளர் எஸ்.கமலக்கண்ணன் படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர உழைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் நோஹா ஆம்ஸ்ட்ராங், படத்தின் தலைப்பைப் போலவே கதையையும் புதிதாக எழுதியிருக்கிறார்.அதை நேர்த்தியாகப் படமாக்கியும் இருக்கிறார்.
இதனால், இதுபோன்ற படங்கள் இப்படித்தான் இருக்கும் என்கிற யூகங்களைப் பொய்யாக்கி ஒரு புதுபரவசத்தைக் கொடுத்திருக்கிறது படம்.
– இளையவன்
