காசு வாங்கினாலும் காரியத்த கச்சிதமா முடிச்சுக் கொடுத்துடுவாரு என்கிற சொல்லில் உள்ள அவலத்தை யாரும் உணர்வதே இல்லை. ஒரு செயலுக்குக் கையூட்டு வாங்குவதையும் கொடுப்பதையும் நியாயப்படுத்துகிற சொல் அது.அதை உணராமல் விதந்தோதுபவர்களை வைத்தே அந்த அவலத்தை அம்பலமேற்ற முயன்றிருக்கும் படம் சக்தித் திருமகன்.
தமிழ்நாட்டில் அரசியல் தரகராக இருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி.பணமிருந்தால் எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் கொடுத்துவிடுவார்.அவருக்கும் இந்திய அளவில் இதே வேலையைச் செய்து அடுத்த குடியரசுத்தலைவர் ஆவார் என்கிற இடத்திலிருக்கும் காதல் ஓவியம் கண்ணனுக்கும் மோதல் ஏற்படுகிறது.அது ஏன்? அதன் விளைவுகளென்ன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் படம்.
பெரிய பெரிய வேலைகளைச் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொள்வது விஜய் ஆண்டனிக்குக் கைவந்த கலை.அதற்குத் தகுந்த வேடம் இது என்பதால் எல்லாக் காட்சிகளிலும் வரவேற்புப் பெறுகிறார்.
நாயகி திருப்திக்கு நல்ல அறிமுகப்படம்.கொடுத்த வேடத்தை நன்றாகப் புரிந்து நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் காதல் ஓவியம் கண்ணன், சமகால நிஜ அரசியல்தரகரை நினைவுபடுத்தும் வேடத்தை ஏற்று அதற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.அவருடைய வேடம் மூலம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று வெகுமக்கள் அறிய வாய்ப்பாக இருக்கிறது.
வாகை சந்திரசேகர், ரவிசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வேடங்களும் வசனங்களும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட், இந்தக்கதைக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.அது நல்ல காட்சியனுபவத்தைக் கொடுக்கிறது.
விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் இரசிக்கும்படி இருக்கின்றன.பின்னணி இசையில் காட்சிகளுக்கு வலுவூட்டியிருக்கிறார்.
அருவி, வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு எழுதி இயக்கியிருக்கிறார்.
அரசியல் தரகர்களை தமிழ்நாடு மற்றும் இந்தியா எனப் பிரித்ததிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரின் பின்புலம் மற்றும் நோக்கம் ஆகியனவற்றை வடிவமைத்திருப்பதிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விசயங்கள் பெரும் வரவேற்புக்குரியன. கையூட்டு,ஊழல் ஆகியனவற்றைத் தாண்டி இருபெரும் அரசியல் சித்தாந்த மோதலை அடிநாதமாக வைத்திருப்பது அவருடைய அரசியல் ஆழத்தைப் புலப்படுத்துகிறது.
மக்கள் எப்போதும் ஏதாவது ஒரு நடிகர் நம்மைக் காக்கமாட்டாரா? என்றுதான் நினைப்பார்கள் என்பது உள்ளிட்ட பல வசனங்கள் சமகால அரசியலை அம்பலப்படுத்துவது படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.
– அசோகன்
