திரைப்படம் என்பது சீரிய கலைவடிவம் என்பதை மறந்து அது பணம் பண்ணும் தொழிற்சாலை என்றே பெரும்பாலோனோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதற்கு விதிவிலக்கான இயக்குநர்களும் உண்டு.இந்த கலையின் மூலம் நல்ல படைப்புகளைக் கொடுக்கவேண்டும் அதன்மூலம் சமுதாயத்துக்குத் தேவையான கருத்துகளை முடிந்தவரை பகிர்வது என்கிற சிந்தனையில் இயங்குவது என்று எண்ணுகிற இயக்குநர் வரிசையில் சேரக்கூடியவர் அனீஸ்.

ஜெய்,நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடித்த திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை இயக்கிய இயக்குநர் அனீஸ், தனது அடுத்த படத்தை சிறைச்சாலையை மையப்படுத்தி ஒரு கதைக்களத்தின் பின்னணியில் படைக்கத் திட்டமிட்டார்.அதற்காக, ஒரு உண்மை சம்பவத்தை தேடி கள ஆய்வுக்காக பெங்களூரு மற்றும் தமிழக சிறைச்சாலைக்குச் சென்றார்.

குறிப்பாக 2016 இல் சென்னை மத்தியச் சிறைச்சாலையான புழல் சிறைச்சாலைக்குள் சென்று அங்குள்ள நிஜ சிறை இல்லவாசிகளுக்கு இலக்கியம், நாடகம், திரைப்படம் பற்றிய பயிற்சிகள் அளித்தார். அவர்களை நாடகங்கள், குறும்படங்களில் நடிக்க வைத்தார்.

சிறைவாசிகளிடம் கலையானது எவ்வாறு அவர்கள் மனதை எவ்வாறு பக்குவப்படுத்துகிறது என்பதையே தனது முனைவர் பட்ட ஆய்வாக மேற்கொள்ளலாம் என முடிவு செய்தார். அடிப்படையில் இயக்குநர் அனீஸ் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் ‘நாடகம் மற்றும் அரகக்கலையில் முதுகலை மற்றும் முதுதத்துவமாணி (M.A,M.Phil) பட்டம் பெற்றவர்.

அந்த வகையில் தமிழ் நாடு திறந்த நிலைப்பள்ளியில், கலைகளில் சிறை இல்லவாசிகளை ஈடுபடுத்துவதால் அவர்களின் மன அழுத்தம், தற்கொலை எண்ணம் போன்ற உளவியல் சிக்கலிலிருந்து விடுபடுகின்றனர் என்பதை ஆய்வாக எடுத்து ” நாடகப்பயிற்சிகளின் மூலம் சிறை இல்லவாசிகளின் மனவளம்-ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் பட்டத்தை முடித்துள்ளார்.கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஆய்வை நாடகத்துறை முனைவர் கார்த்திகேயன் நெறிப்படுத்தலில் முடித்துள்ளார்.

நேற்று (செப்டம்பர் 25,2025) தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக அரங்கில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவியிடம் இருந்து இந்த ஆய்வுக்காக அனீஸ் முனைவர் பட்டம் பெற்றார்.

இந்தியாவில் சிறைச்சாலைகளில் கலைகள் பற்றிய முதல் கள ஆய்வு என்பது இந்த ஆய்வின் சிறப்பு என்பதும் இதை மேற்கொண்ட இயக்குநர் அனீஸை இத்துறை சார்ந்தவர்கள் பாராட்டுகிறார்கள்.

முனைவர் பட்டம் பெற்றுள்ள இயக்குநர் அனீஸ், சசிகுமார் நடித்துள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தை இயக்கியுள்ளார். இப்படமும் சிறையை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படம். இப்படத்தில், புழல் சிறை இல்லவாசிகளையும் நடிகர்களாக நடிக்க வைத்துள்ளார் என்பதும், இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசையில் சிறை கானா பாடலும் பாட வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறைவாசிகளை நடிக்க வைத்து சிறையினுள்ளேயே எடுக்கப்பட்ட இந்தத் திரைப்பட முயற்சியும் இந்திய சினிமாவில் புதுமையான பாராட்டத்தக்க முயற்சி என்று பலராலும் பாராட்டுப் பெற்றிருக்கிறது.

சசிகுமார் நாயகனாக நடித்துள்ள பகைவனுக்கு அருள்வாய் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது வெளியாவதற்கான இறுதிக் கட்டப் பணிகளில் உள்ளது. விரைவில் அப்படம் வெளியாகவுள்ளது. அப்போது இதுவரை துறை சார்ந்தவர்கள் மட்டும் அறிந்திருந்த இயக்குநர் அனீஸின் அரும்பணியை உலகம் உணர்ந்து கொள்ளும் என்று அப்படக்குழுவினர் கூறுகிறார்கள்.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.