எஸ்.சாம் இயக்கத்தில்,தேவ்,தேவிகா,படவா கோபி,ஆகாஷ் பிரேம்குமார்,பிரவீன்,நித்தி பிரதீப், திவாகர்,யுவராஜ்,விஜே நிக்கி,தீபிகா,தீப்சன்,சுப்ரு, சுவாதி நாயர்,பூஜா ஃபியா,சுபா கண்ணன்,கலைக்குமார்
உள்ளிட்டோர் நடித்துள்ள படம் யோலோ. YOLO – You Only Love Once.
இப்படத்துக்கு,ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி, இசை – சகிஷ்னா சேவியர்,படத்தொகுப்பு – ஏ.எல். ரமேஷ்,கலை இயக்கம் – எம்.தேவேந்திரன்,கதை – ராம்ஸ் முருகன்,சண்டை – டேஞ்சர் மணி,நடனம் – கலைக்குமார், ரகு தாபா,திரைக்கதை – எஸ்.சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்,
பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ்,உடைகள் – நட்ராஜ்
எம்.ஆர்.மோசன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு,ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் மகேஷ்….
எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரைஆளுமைகளுக்கு நன்றி.படம் இப்போதுதான் ஆரம்பித்தது போல உள்ளது,முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர்,சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும். ஆகாஷ் மற்றும் தேவ் நடிகர்களாக இல்லாமல் எனக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறார்கள். எனக்குப் பலமாக இருந்து உதவிய அனைவருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் சார் நிறைய அறிவுரைகள் தந்தார். Generous Entertainment நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. செப்டம்பர் 12 அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் சூரஜ் பேசியதாவது…..
நன்றி சொல்வதைத் தவிர ஏதும் தோன்றவில்லை. நானும் இயக்குநர் சாமும் கல்லூரி முதலே நண்பர்கள், இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி, நன்றாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். படம் பாருங்கள், அனைவருக்கும் பிடிக்கும். நன்றி என்றார்.
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர்…..
கடவுளுக்கு நன்றி. நல்லமனிதர்களோடு சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு படத்தில் ஆறு பாடல்கள் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். என் சவுண்ட் இன்ஜினியர் கிபிக்கு நன்றி. என்னோடு வேலை செய்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். நன்றி என்றார்.
மாஸ்டர் ரகு…..
நான் மாஸ்டராக கார்டு வாங்கிய பிறகு செய்த முதல் படம் இது.எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி.இசையமைப்பாளர் மிக அற்புதமான இசையை தந்துள்ளார்.சூரஜ் சார் இந்தப்படத்தில் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார்.தேவ் மிகப்பெரிய உழைப்பாளி.என்னோடு உழைத்த டான்சர்களுக்கும் நன்றி என்றார்.
சண்டை இயக்குநர் டேஞ்சர் மணி…..
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் சாம் சார் மற்றும் மகேஷ் சாருக்கு நன்றி.படம் மிக அற்புதமாக வந்துள்ளது.கண்டிப்பாக நீங்கள் இரசிப்பீர்கள். சமுத்திரக்கனி அண்ணாவின் நிமிர்ந்து நில் படத்தில் நானும் சாமும் வேலை பார்த்துள்ளோம்.இப்போது நாங்கள் நிமிர்ந்து நிற்கிறோம் என்று சொல்வதில் பெருமை.இப்படத்தில் அத்தனை நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி என்றார்.
எழுத்தாளர் ராம்ஸ் முருகன்…..
இது என் நண்பனின் படம் என்பதில் பெருமை. சமுத்திரக்கனி சார், அமீர் சார் வந்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் மகேஷ் அவரைப் பார்த்தால் அவர் தயாரிப்பாளர் போலவே தெரியவில்லை, நண்பராகவே இருந்துவருகிறார்.இப்படத்தை மிகுந்த உழைப்பில் உருவாக்கியுள்ளோம்.அனைவருக்கும் பிடிக்கும். நன்றி என்றார்.
டிரெண்ட் லெளடு சார்பில் ஜிதேஷ்…..
தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நன்றி. அவர் மிக பாசிடிவானவர்.சகிஷ்னா சேவியர் ஒரு படத்தில் 6 பாடல்கள் கிடைப்பது அரிது என்றார், அந்த ஆறு பாடல்களும் TrendLoud க்கு கிடைத்தது சந்தோஷம். எல்லாபாடல்களும் மிகச்சிறப்பாக வந்துள்ளன.படம் அருமையாக வந்துள்ளது.தேவ் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.
விஜே நிக்கி……
நான் நிறைய மேடைகளில் தொகுப்பாளராக இருந்துள்ளேன்.பத்திரிக்கையாளனாக இருந்துள்ளேன். அங்கிருந்து இன்று இங்கு வந்திருப்பது மிகப்பெரிய ஆசீர்வாதம்.மிகப்பெரிய வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஒரு நாள் கால் வந்து, “நீதான் ஹீரோ, ஆபீஸ் வா” என்றார்கள்.நான் பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்தேன்.ஆனால் செகண்ட்லீட் என்று சொல்லி ஷூட்டிங் கூப்பிட்டுப் போய்விட்டார்கள்.அங்கு ஆகாஷ் பிரேம்,திவாகர்,யுவராஜ் எல்லோரிடமும் நீதான் செகண்ட்லீட் என்று சொல்லி இருந்தார்கள்.நான் படம் நடிக்கிறேன் என்பதை என் அப்பாவே நம்பவில்லை. இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. படம் சூப்பராக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
நடிகர் ஹார்ட் பீட் கிரி…..
இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. “You Only Live Once” என்பதுதான் யோலோ.தலைப்பே சிறப்பாக உள்ளது.நண்பர்களாகப் பெரிய ஆளுமைகள் வாழ்த்த வந்துள்ளதில் மகிழ்ச்சி.சாம் சார் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படம் வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.
Generous Entertainment சார்பில் கோகுல்…
இப்படத்தை வெளியிடும் உரிமையை Generous Entertainment நிறுவனத்திற்குத் தந்ததற்கு நன்றி. மகேஷ் சார் இப்படத்தை தயாரித்து உழைத்ததைப் பற்றிப் பேசினார்.புதுமுகங்களை நம்பி வாய்ப்பு தந்த இந்தக்குழுவிற்கு பத்திரிக்கையாளர்கள் முழு ஆதரவு தர வேண்டும்.தேவ் சினிமாவில் பல வருடங்களாக இருக்கிறார்.இப்போதுதான் ஹீரோவாக மாறியுள்ளார். மிகச்சிறப்பாகச் செய்துள்ளார்.அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள்.நன்றி என்றார்.
நடிகர் ஆகாஷ் பிரேம்…..
படத்தில் மதன் கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேன் என்று நம்பி என்னை அழைத்த உதவிஇயக்குநர் ஸ்டீபன் சாருக்கு நன்றி.அவர் வார்த்தையை நம்பி எனக்கு வாய்ப்பு தந்த சாம் சார்,மகேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் மிகச்சிறந்த தயாரிப்பாளராக வருவார்.ஒருவருடத்திற்கு முன் இப்படத்திற்குப் பூஜை போட்டோம்.இப்போது படம் முடிந்து வந்துவிட்டது. இந்த திட்டமிடல் சினிமாவில் மிகப்பெரிய விஷயம். இந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்களை அழகாக காட்டிய சூரஜ் சாருக்கு நன்றி. இப்படத்தில் நான் ஒருபாடலும் பாடியுள்ளேன். அந்த வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் சாருக்கு நன்றி. வயலண்ட் படங்களுக்கு மத்தியில் உங்களை ஆச்சரியப்படுத்தும் படமாக இது இருக்கும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி என்றார்.
நடிகர் படவா கோபி……
2009 இலேயே என்னை நடிகனாகச் செதுக்கி இப்போது ஸ்கூல் பஸ் படத்திலும் வாய்ப்பு தந்த சமுத்திரக்கனி சாருக்கு நன்றி.இந்தப்படத்தில் நான் முதலில் காமெடிதான் செய்வதாக இருந்தேன்,ஆனால் சாம் தான் என்னை ஹீரோயின் அப்பாவாக நடிக்கவைத்தார். என்னுடைய மகள் 5 வயதில் இருந்தபோது தவறிவிட்டார்.ஆனால் டீனேஜில் மகள் என்ன செய்வார் என்பதை இப்படம் மூலம் அனுபவித்தேன்.இப்படத்தின் ஷூட் அவ்வளவு ஜாலியாக இருந்தது.சாம், ராம் இருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப்பார்த்து செய்தார்கள். செப்டம்பர் 12 படம் வருகிறது – ஒரு இளமைக்கொண்டாட்டம்.அனைவரும் பார்த்து இரசிக்கவும். நன்றி என்றார்.
நடிகை தேவிகா…..
நான் தமிழில் செய்யும் முதல்படம் யோலோ. இதற்கு முன் ஒரு சீரிஸ் செய்திருந்தேன். இப்பட வாய்ப்பு தந்த சாம் சாருக்கு நன்றி.சமுத்திரக்கனி சாரின் தெலுங்கு படத்தில் நடித்தபோது,சாம் சார் பார்த்து இந்த வாய்ப்பை தந்தார்.இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி.படம் மிக அருமையாக வந்துள்ளது.செப்டம்பர் 12 எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள். நன்றி என்றார்.
தயாரிப்பாளர் கே.வி.துரை…….
நாங்கள் Access Film Factory-யில் நிறைய புது திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் குழுவிலிருந்து ஒரு திறமையாளரான தேவ்வை இப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. டிரெய்லர் அற்புதமாக உள்ளது.அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் சதீஷ்……
படக்குழு அனைவருமே இளமைத்துள்ளலுடன் இருக்கிறார்கள்.படம் பார்க்க மிக நன்றாக உள்ளது. சாம் மிகச்சிறப்பாக உழைத்துள்ளார்.தேவ் எனக்குத் தம்பி மாதிரி.அவன் ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. சிறப்பாக வரவேண்டும். வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன்…..,
டிரெய்லர் நன்றாக உள்ளது.அதில் ஒன்றை மறைத்து வைத்துள்ளனர்,அது படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருக்கும். தேவுக்காகதான் வந்துள்ளேன்.அவரிடம்தான் முதலில் மரகதநாணயம் கதை சொன்னேன். Access Film Factory-யில் அவர் நிறைய உழைத்துள்ளார். இப்போது ஹீரோவாகியிருப்பது மகிழ்ச்சி. இந்த நேரத்தில் டெல்லி சார் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.தேவ் பெரிய ஹீரோவாக வர வாழ்த்துகள் என்றார்.
நடிகர் தேவ்……
இந்த வாய்ப்பு வரக்காரணமாயிருந்த அரவிந்த் பிரதருக்கு நன்றி.அவர்தான் இப்படத்திற்கு ஆள் தேடுகிறார்கள் என என்னை அனுப்பினார்.கதை கேட்டேன், ரொம்பபிடித்தது.என்னைத் தேர்ந்தெடுப்பார்களா என சந்தேகம் இருந்தது.ஆனால் தயாரிப்பாளர் போன் செய்து, “புதுமுகம்தான் வேண்டும், நீங்கள் பொருத்தம்” என்று சொன்னார்.மகிழ்ச்சி.தயாரிப்பாளர் மொத்த டீமுக்கும் சுதந்திரம் தந்தார்.சாம் சார் பக்காவாக திட்டமிட்டு உழைத்தார்.என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி.என்னை இப்படிப்பார்க்க ஆசைப்பட்ட என் அப்பா,அம்மா,மாமா மூவரும் இல்லை.அவர்களின் ஆசிர்வாதத்தில்தான் இது நடந்துள்ளது.செப்டம்பர் 12 யோலோ திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி என்றார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி….,
இந்த விழாவிற்கு எதுவும் தெரியாமல்தான் வந்தேன். வந்த பிறகுதான் தெரிகிறது இது என் குடும்பவிழா என்று.ஹீரோ தேவ் எனக்குச் சின்னவயதிலிருந்து தெரியும்.அவரை எனக்கு பூர்ணேஷ் எனத்தான் தெரியும், படத்திற்காக தேவ் என மாறியுள்ளார்.அவரது மாமா டெல்லி பாபு, உலகத்தின் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார்.அவருக்குத் தீமையே தெரியாது, நன்மைதான் செய்வார்.மிகச்சிறந்த இயக்குநர்களை, மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய தயாரிப்பாளர். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.அவர் தன் மகனை ஹீரோவாக்க வேண்டுமென்று பலமுறை சொல்லியுள்ளார்.இன்று அந்த ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி.அவருடைய ஆசி உனக்கு எப்போதும் உண்டு.
“YOLO” என்றால் என்னவென்று தெரியவில்லை. இங்கு வந்த பிறகுதான் கேட்டேன் — You Only Live Once என்றார்கள்.உண்மைதான்,நாம் ஒரு முறைதான் வாழ்கிறோம்,அதை அழகாக வாழ்வோம்.
இந்தப்படத்தில் எல்லோரும் இளமையாக இருக்கிறார்கள்.எல்லோரும் தங்கள் முழுஉழைப்பைத் தந்துள்ளார்கள்.சகிஷ்னா வரும்போதே 6 பாடலுடன் வந்துள்ளார்.சாம், சமுத்திரகனி,அமீர் மாதிரி இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறார்,அதுவே அவர் திறமையைச் சொல்லும்.
எனக்கு முதல்படத்துக்குச் சம்பளம் ₹14,000 தான். ஆனால் அடுத்தபடத்துக்குச் சம்பளம் ஒரு கோடி ரூபாய். அதனால் முதல்படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள்.முதல்படத்தோட பட்ஜெட் என்னவோ அதுதான் உங்கள் சம்பளம்.ஏனெனில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் 1 கோடி போடுகிறார் என்றால் அதுதான் என் சம்பளம்.அப்படி இயக்குநர்கள் நீங்கள் நினைத்தால்தான் அடுத்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கமுடியும். இப்படத்திற்கு உழைத்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகள். நன்றி, வணக்கம் என்றார்.
இயக்குநர் அமீர்…,,,,,
இந்தவிழாவில் கலந்துகொண்ட எங்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது.ஆனால் பெருந்தன்மையோடு காரணமில்லாமல் கலந்து கொண்ட அண்ணன் ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கு நன்றி.
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு “கேப்டன்” எனும் பெயர் நிரந்தரமாக அமையக் காரணமானவர். அவருடைய மறைவுக்குப் பின்னாடியும் ஓடிய கேப்டன் பிரபாகரன் படத்தை தந்தவர்.இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் திரையிடப்பட்டு ஒரு மாபெரும் வெற்றி அடைகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த படத்தின் தரம்.
என்னுடைய முதல்படம் மௌனம் பேசியது முதல் இப்போ வரைக்கும் நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் என்கிட்ட இருந்து வெளியில் போயிருக்கிறார்கள். அதில் பாதி பேரின் பெயரே எனக்குத் தெரியாது. “சார், உங்களோடுதான் ஒர்க் பண்ணேன்” என சொன்னால் “அப்படியா, சரி ஓகே” அப்படின்னு சொல்வேன். ஏன்னா ஒரேஒரு ஷெட்யூலில் மட்டும்தான் ஒர்க் பண்ணியிருப்பான்.அடுத்த ஷெட்யூலில் இருக்கமாட்டான். அப்படிப்பட்டவர்கள் ஒரு 30–40 பேர் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் மிகக்குறைவுதான். அதில் சாம் ஒருவர்.
எல்லாரும் கனி பற்றித்தான் சொன்னார்கள். அவன் இளகிய மனசுக்காரன்.பருத்திவீரன் படப்பிடிப்பில் யாரையும் திட்டக்கூட மாட்டான்.இப்போது அவனை நடிகனாகப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. அவனுடைய வளர்ச்சிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
இந்தப்படத்தின் ஹீரோ பற்றி எனக்கு பெருசா ஒன்றும் தெரியாது.பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள்: “ஊராம் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானா வளரும்?” என்று. அவருடைய மாமா நிறைய புதியஇயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார். மரகத நாணயம் எடுத்த சரவணன்,பேச்சலர் எடுத்த சதீஷ் — இவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தியதால் தான் இன்று மகேஷ் என்ற தயாரிப்பாளர் மூலமாக தேவ் ஹீரோவாகி இருக்கிறார்.
தேவ் தன் அப்பா அம்மா இந்தமேடையில் இல்லை, அவர்கள் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்னு சொன்னார். வாழ்க்கை அப்படி நம்ம நினைப்பதுபோல நடக்காது. அப்படி நினைத்த மாதிரி நடந்ததுன்னா அது வாழ்க்கையே இல்லை.பொதுவாக சொல்வார்கள் — நீ போகும் பாதையில் இடையூறு இல்லையென்றால் அது உனக்கான பாதை இல்லை.நீ போட்ட பாதையில் இடையூறு இருந்தால் அதைச் சரி பண்ணினால்தான் அது உன் பாதையாக இருக்கும்.
நிச்சயமாக இந்தப்படம் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைத்தரும் என நம்புகிறேன். சாம் என்கிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான்,கனிகிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான்.ஆனா இருவரின் பாணியையும் பின்பற்றாமல் புதுசாக படம் எடுத்திருக்கான். ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்துள்ளான். டிரெய்லரில் அது தெரிகிறது.
படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு பேசினார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துகள்.படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன். நன்றி என்றார்.
இயக்குநர் சாம்……
முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி.அவர்களால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.அமீர் சார் ஒரு சிங்கம் மாதிரி. அவருடன் வேலை செய்வது சவாலானதாக இருந்தது.அவர் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கக்கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.அவரால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தைரியம் வந்தது.
நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அமீர் சாரும், கனி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் எனக்கு இப்போதுவரை நிறைய உதவி செய்திருக்கிறார்கள்.
கனி சார் எந்த ஒரு நொடியையும் வீணாக்கமாட்டார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன். “எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்பார். அவர் இந்தப்படத்திற்குப் பெரிய ஆதரவாக இருந்தார்.
எங்கள் அழைப்பை மதித்து வந்த ஆர்.கே.செல்வமணி சாருக்கு நன்றி.எனக்கு இப்பட வாய்ப்பை தந்த மகேஷ் சாருக்கு நன்றி. அவர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தார். அதுபோலவே தேவை லீடாக அறிமுகப்படுத்தினார்.
ஆகாஷ் ஒரு அப்பாவி பையனாக நன்றாக நடித்துள்ளார். பலரைத் தேடி கடைசியாக தேவிகாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.
என் நண்பன் ராம் — கல்லூரியிலிருந்தே ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். இன்ஸ்டிடியூட்டில் சூரஜ் உடன் பணிபுரிந்திருக்கிறேன். நான் கேட்டதைச் சிறப்பாகச் செய்து தந்துள்ளார்.சகிஷ்னா இந்தப் படத்தில் 6 வெவ்வேறு பாடல்களை மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளார்.எடிட்டர் ரமேஷ் நேரடியாக வந்து எனக்கு உதவினார். தயாரிப்பில் நாகராஜ் புரொடக்ஷன் மேனேஜர் பெரிய ஆதரவாக இருந்தார்.என் உதவி இயக்குநர்கள் குழு என்னைவிட வேகமாக இருப்பார்கள். ரகு மாஸ்டர், டேஞ்சர் மணி மாஸ்டர் இருவருக்கும் நன்றி.பாடலாசிரியர்கள் சூப்பர் சுப்பு, முத்தமிழ், சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் — இவர்களின் வரிகள் படத்துக்கு வலு சேர்த்துள்ளன.
படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படவா கோபி பெரிய ஆதரவாக இருந்தார். நன்றி.
இது இளமையான எண்டர்டெயின்மென்ட் படம். நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும்.
செப்டம்பர் 12 அன்று திரைக்கு வருகிறது.மீடியா நண்பர்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும். நன்றி என்றார்.
இயக்குநர், நடிகர் சமுத்திரகனி…..
இறைவனுக்கு நன்றி.மிக மகிழ்ச்சியான தருணம். என் படத்தை விட அதிக சந்தோசமாக உள்ளது.அமீர் அண்ணனுக்கு நன்றி சொல்லவேண்டும்.பருத்திவீரன் படத்தில் தான் நானும் சாமும் சந்தித்தோம். அமீர் அண்ணன் எங்களிடம் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
சாமுக்கும் எனக்கும் இனிமையான பயணம். அண்ணனிடமிருந்து வந்த பிறகு “இவனை விட்டு விடக்கூடாது” என நினைத்து என்னுடன் இணைத்துக் கொண்டேன்.அவன் எனக்காக நிறையச் செய்துள்ளான். இந்தமேடை அவனுக்கு ரொம்ப லேட்டாக கிடைத்துள்ளது.அதனால் இந்தப்படத்திற்காக அவனுடன் நிற்கவேண்டும் என நினைத்தேன்.
இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். ஏனெனில் அவ்வளவு உழைப்பைச் செய்திருக்கிறார்கள். படத்தில் உண்மையும், உணர்வும் இருக்கிறது.
தேவ் கவலைப்படாதீர்கள்,உங்கள் அப்பா அம்மா மாமா ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.நண்பன் மகேஷ் இந்தக்குழுவின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்ததுகள்
இவ்வாறு அவர் பேசினார்.
https://www.instagram.com/reel/DOAvJXbkcfo