பைசன் என்னும் காளமாடன்- இயக்குனர் மாரிசெல்வராஜின் ஐந்தாவது படம். இவற்றில் மாமன்னனைத் தவிர்த்து மற்ற அனைத்து படங்களிலும் அவர் எடுத்துக்கொண்ட களம் ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட மக்களின் வாழ்வியல் தான். இந்த படமும் அந்த வரிசையில் இணைகிறது. இம்முறை அவர் எடுத்துக்கொண்ட கரு ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்த தூத்துக்குடி மாவட்டத்தில் 1990 களில் நடைபெற்ற இரு வேறு சமூக குழுக்களின் மோதல்கள். கூரான கத்தியின் மேல் நடக்கும் கதை. சிறிது பிசகினாலும் கத்தி சொருகி விடும். ஆனால் அதில் மிக லாவகமாக நடந்ததோடு மட்டுமல்லாமல் நம்மையும் பாதுகாப்பாக கை பிடித்துக் கூட்டிச் செல்கிறார் மாரி.
பொதுவாக இது போன்ற படங்களில் கதையின் நாயகன் இரண்டு குழுக்களில் ஒன்றில் இணைந்து அந்த குழுவின் தலைவனாக மாறி அவர்கள் நம்பும் நியாயங்களுக்காக போராடுவான். இவ்வளவு ஏன்… இதே போன்ற கதைக் களத்தைக் கொண்ட மாரியின் முந்தைய படமான கர்ணனில் கூட அது தான் பார்முலா. ஆனால் அந்த இடத்தில் இருந்து முற்றிலும் வேறு ஒன்றை பைசனில் கையாண்டிருக்கிறார் மாரி. உண்மையைச் சொன்னால் மாரி இதில் கையாண்டிருப்பது ஒரு கதை அல்ல. இரண்டு கதை. ஒன்று ஏற்கனவே சொன்னது போல நாயகன், கர்ணன், அசுரன், வடசென்னை போல சமூக மோதல்களைத் தழுவி எடுக்கப்படுகின்ற கதைகள். இன்னொன்று சக் தே இந்தியா, லகான், இறுதிச்சுற்று, பிகில் போன்ற விளையாட்டு வீர்களின் வாழ்வைத் தழுவி எடுக்கப்படுகின்ற கதைகள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இந்த இரண்டு கதைகளையும் வைத்துக்கொண்டு தனது சமூக அரசியலைப் பேசியுள்ளார் மாரி.
படத்தின் நாயகன் கிட்டான் ஒரு கபடி வீரன். உடம்பும், மனதும் முழுக்க கபடி வெறி ஊறிப்போய் மிகப்பெரிய கபடி வீரனாக மாற வேண்டும் என்ற அவனது வாழ்நாள் லட்சியத்திற்கு இடையூறாக வருகிறது பிறப்பால் அவன் மீது சுமத்தப்படுகிற சாதிய அடையாளமும், அதேபோல அவனுக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத அதே சாதிய அடையாளத்தால் எதிரும் புதிருமாக நிற்கும் இரண்டு சாதிய குழுக்கள் மற்றும் அதன் தலைவர்களின் செயல்பாடுகளும். இவற்றை மீறி அந்த நாயகன் தன் லட்சியத்தில் எவ்வாறு வெற்றி பெறுகிறான் என்பதே கதை.
இதில் தமிழக கிராமங்களில் 90களில் களைகட்டிய மின்னொளி கபாடிப் போட்டிகளைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள். அதனை தென்மாவட்ட மக்களின் இரத்தமும் சதையுமான வாழ்வியலோடு சேர்த்துப் பார்க்கும் போது இன்னும் ஒன்றிப்போகிறது மனம். குறிப்பாக நெல்லை வட்டார வழக்குகள். இதற்கு முந்தைய மாரியின் மூன்று படங்களிலுமே அதன் நிஜத்தைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். அந்த வியப்பு இந்த படத்திலும் தொடர்கிறது. எங்கள் ஊர் கிராமங்களில் தாத்தாக்கள், மாமா மார்கள், சிறு வயது நண்பர்கள் பேசிய, பேசிக்கொண்டிருக்கிற குறிப்பான அந்த பேச்சு வழக்குகளைத் திரையில் பார்ப்பது ஒரு அலாதியான சுகம். வார்த்தைகளில் விவரிக்க முடியாத அந்த சுகத்தை மீண்டும் அடைந்தேன்.
நாயகன் துருவ் இப்படத்திற்காக செய்த உழைப்பு கண்முன் தெரிந்தது. ஒரு அசல் கபடி வீரனாக அவரது நடை, உடை, பாவனைகள் அசத்தலாக இருந்தது. இருப்பினும் நெல்லை வட்டார வழக்கு, அதற்கு ஏற்றார் போன்ற தோற்றம் போன்றவற்றில் அவரது தேர்வு கொஞ்சம் துருத்திக் கொண்டு இருப்பது போன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. (இதே போன்ற உணர்வு எனக்கு பரியேறும் பெருமாளிலும் இருந்தது…) பசுபதியின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் தனியாக ஒரு பதிவு எழுதனும். இரண்டாவது பாதியில் ஒரு காட்சியில் ஊர் கோவிலில் சாமி ஆடுவது போன்ற ஒரு காட்சி வரும். அது ஒன்று போதும். உடம்பெல்லாம் புல்லரித்துப் போய் விட்டது. மனுசன் சும்மா புகுந்து அசத்தியிருக்கிறார்.
நாயகனின் அக்காவாக வருகிற ரஜிஷாவின் நடிப்பும் அபாரம். தன் அப்பாவின் உத்தரவை மீறி தம்பியை கபடி விளையாடச் சொல்லி அனுப்பும் இடம், தன் வயதுடைய தோழி தன் தம்பியைக் காதலிப்பது தெரிந்ததும் அவளைத் தேடிச்சென்று கண்டிக்கும் இடம் என்று படம் முழுக்க பல சீன்களில் ஸ்கோர் செய்கிறார். அதிலும் நெல்லை வழக்கை நிஜத்திற்கு மிகநெருக்கமாக அவர் handle செய்யும் விதம் எல்லாம் அருமை. நாயகி அனுபமா தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை நன்கு செய்துள்ளார். சந்தானராஜ் என்ற கதாபாத்திரத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக நடித்துள்ளவரின் நடிப்பு குறித்தும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். மிக இயல்பான, அழுத்தமான நடிப்பு. அவரது கதாபாத்திர வடிவமைப்பு, குறிப்பாக அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள் பல இடங்களில் பிரமித்துப் பார்க்கச் செய்தது. ஒரே ஒரு சீனில் இரண்டு ப்ரேம்களில் தலைமை அசிரியராக கெத்தாக வந்து போன எங்கள் அன்புத்தோழர் சாமுவேல் ராஜ். (கவனிக்கத் தவறிய போது அருகில் இருந்த தோழர் வினோத்குமார் Vinoth Kumar தான் கூப்பிட்டுக் காட்டினார்…)
இருபது, முப்பது வருடங்களுக்கு முந்தைய நெல்லையின் கிராம அமைப்பை அப்படியே கண் முன் கொண்டு வந்ததில் கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமைக்கு சிறப்பு வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும். வீடுகள், வீட்டின் உட்புற அமைப்பு, கதவு, வீட்டிற்கு பின்னால் இருக்கும் மாட்டுத்தொழுவம் என்று அப்படியே எங்கள் ஆச்சி வீட்டு ஞாபகம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம். பெரிய அறிமுகம் இல்லாத மண்ணின் மைந்தன் நிவாஸ் அசத்தி விட்டார். சந்தோஷ் நாராயணன் இல்லாத குறை எங்குமே இல்லை. “தென்னாட்டு தேசத்துல”, “தீக்கொளுத்தி” பாடல்கள் எல்லாம் வேற லெவல். பிண்ணனி இசையிலும் மனுசன் பின்னிட்டார் ன்னு தான் சொல்லணும். ஒரு இடத்தில் படத்தின் முக்கியமான ஒரு கபடிப் போட்டி வருகிற காட்சியில், நெல்லையில் கோவில் கொடை விழாக்களில் பயன்படுத்தப்படும் பிரத்யேக கொட்டுமேளம் ஒன்றை பயன்படுத்தி இருப்பார். அப்பப்பா…goosebumps guaranteed…
படத்தில் மைனஸே இல்லையா என்றால், அப்படியெல்லாம் சொல்ல முடியாது. ஒரு சில காட்சிகளுக்கு இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். உதாரணமாக தனியாகவே எப்போதும் பயிற்சி செய்யும் நாயகன் திடீரென்று ஒரு டீமை தயார் செய்து போட்டியில் பங்கேற்பது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு எளிய கிராமத்து விவசாயி வீட்டில் இருக்கும் தொலைபேசி (??!!!), அதே போல இரண்டாவது பாதியில் துருவ் ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்படாமல் வீட்டிற்கு வந்த மறுநிமிடம் ஆசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதாக வரும் தொலைபேசி அழைப்பு… என்று ஒரு சில காட்சிகள் திரைக்கதைக்காக வலிந்து திணிக்கப்பட்டது போல உள்ளன. இருந்த போதிலும் பரியேறும் பெருமாளுக்குப் பிறகு மாரியின் சிறந்த திரைக்கதை இது என்று உறுதியாகச் சொல்லலாம். இரண்டரை மணி நேர படத்தில் ஒரு காட்சி கூட அலுப்பு தட்டவில்லை.
சரி…இது எல்லாம் ஒரு படத்தில் இருப்பதால் இது தமிழ் சமூகம் கொண்டாடப்பட வேண்டிய படம் என்று சொல்ல வேண்டுமா என்றால்…நிச்சயம் இல்லை. இதைவிட சிறந்த திரைக்கதை, பாடல், ஒளிப்பதிவு கொண்ட படங்கள் தமிழில் பல உள்ளன. அவற்றைத் தாண்டி இந்த படத்தில் மாரி பேசியிருக்கும் சமூக அரசியல் இருக்கிறதே, அதை வைத்து தான் இதை முக்கியமான படம் என்கிறோம். நான் முன்னரே சொன்னது போல கபடியோடு படத்தில் இன்னொரு கதை சேர்ந்தே வரும். தூத்துக்குடி மாவட்டத்தில் 90களின் மத்தியில் துவங்கி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற பசுபதி பாண்டியன் மற்றும் வெங்கடேச பண்ணையார் இடையேயான குழு மோதல்களைத் தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதையை மாரி கையாண்டிருக்கும் விதம் தான் அது. கொஞ்சம் பிசகினாலும் மொத்தமாய் வன்முறையைத் தூண்டிவிடும் களம் இது. அதை மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் மாரி.
வெங்கடேச பண்ணையாராக லால், பசுபதி பாண்டியனாக அமீர். ஒடுக்கப்படும் சமூக மக்களின் எழுச்சியையும், ஆதிக்க சமூகத்தின் ஆதிக்க மனோபாவத்தையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது என்றாலும், அதை அப்படியே திரையில் காண்பிக்கும் போது, ஒரு தரப்பினரை மீண்டும் வன்முறைக்கு தூண்டிவிடும் அபாயம் உள்ளதால் பிந்தைய கதாபாத்திரத்திற்கும் ஒரு பாசிட்டிவ் தன்மையைக் கொண்டு வந்து சமன் செய்து விடுகிறார் இயக்குனர். (நல்ல யுக்தி…)
“நான் ஏன் கத்தி எடுத்தேங்கிறதயே இங்க பாதிபேர் மறந்துட்டாய்ங்க. யாரும் மேலயும் இல்ல, கீழயும் இல்ல… எல்லாரும் சமம்னு தான் நாம கத்தி எடுத்து சண்டை செய்ய ஆரம்பிச்சோம்…ஆனா அதயே நம்ம பயலுக நைசா மறந்துட்டாய்ங்க”
– பாண்டியராஜா / பசுபதி பாண்டியன்.
“சில விசயத்தை விட்ரலாம்ன்னு நினைச்சாலும் முடியலடே..மரியாதைக்காக ஆரம்பிச்சது..அந்த கால பகை…அதை நானே நினைச்சாலும் இப்ப விடமுடியாது..அதான் நெசம்”
– கந்தசாமி / வெங்கடேச பண்ணையார்.
இருவரும் பேசும் இந்த வசனங்களே படத்தின் மையம். இத்தகைய அந்த கதாப்பாத்திரங்களின் தன்மையை அமீரும், லாலும் மிகச்சரியாக உள்வாங்கி மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இறுதியாக ஒரு வசனத்தைச் சொல்லி முடிக்கலாம். ஒரு காட்சியில் பசுபதி தன் மகனை எதிர் சமூகத்தைச் சேர்ந்த கபடி குழுவில் விளையாட அனுமதிக்க மறுப்பார். அப்போது அந்த ஊர்க்காரர் ஒருவர் பசுபதியுடன் பேசும் ஒரு காட்சி:
“என்னடே நீ…அவங்க காட்டுக்கு நாம வேலைக்கு போறதில்லையா…அதே மாதிரி நம்ம ஊருக்கு அவங்க யாவாரம் (வியாபாரம்) பண்ண வர்றது இல்லையா…ஒருத்தர வச்சி தானடே ஒருத்தரு…”
எத்தனை ஆழம் பொதிந்த வாசகம். மனிதன் ஒரு சமூக விலங்கு. இங்கு ஒருவரைச் சார்ந்து தான் இன்னொருவர் இயங்க முடியும். எவர் ஒருவராலும் தன்னிச்சையாக இயங்க முடியாது. இதையே மார்க்சிய பாலபாடத்தில் “உழைப்பும், மூலதனமும் இணைந்தால் தான் உற்பத்தி நிகழும். ஒன்றை விட்டு ஒன்றால் இயங்க முடியாது. எனவே இரண்டும் சமூகமயம் ஆக வேண்டும்” என்று சொல்வோம். இதையே பைசனின் பாலபாடமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
மீண்டும் ஒருமுறை வென்றுவிட்டீர்கள் மாரி…!!!
சிவ சங்கர் அவர்களின் முகநூல் பதிவு:

 
                    