கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணியின் உடை அணியும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதை ‘கோடித் துணி’.அந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’.

இப்படத்தின் கதையின் நாயகியாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார்.சரண்,பரணி,முல்லையரசி,தென்றல் ரகுநாதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

அஞ்சாய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு முகமத் மக்பூப் மன்சூர் இசையமைத்திருக்கிறார்.இவர் மலையாளத் திரையுலகில் பிரபல பின்னணி பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்க அதனுடன் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃப்ரோ மூவி ஸ்டேஷன் சார்பில் கார்த்திகேயன் எஸ்.ஃப்ரோஸ் ரஹீம், அஞ்சாய் சாமுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர். நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் கூறியதாவது….

எனக்கு தாய்மொழி மலையாளம் ஆக இருந்தாலும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கதைகள், சிறுகதைகளை நான் மலையாளத்தில் படித்திருக்கிறேன். அதில் கோடித் துணி என்ற சிறுகதை மனதில் பதிய அதைத் திரைப்படமாக்கி, கிராமத்து கலாச்சாரத்தை திரைப்படம் மூலமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
இதற்கேற்ற களத்தைத் தேர்வு செய்ய பல ஊர்களிலும் அலைந்து கடைசியாக சத்தியமங்கலம், களக்காடு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம்.அதற்கு முன் அந்த ஊர் கலாச்சாரத்தை புரிந்துகொள்ள நானும் படக்குழுவைச் சேர்ந்த சிலரும் நேராக அந்தக் கிராமத்திற்குச் சென்று சுமார் நான்கு மாதம் வீடு எடுத்துத் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி அவர்களது வாழ்வியலை அறிந்துகொண்டு அதன்பின் படமாக்கியிருக்கிறோம்.
’நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் ’நவரசா’ ஆகிய தொடர்களில் நடிப்பில் என்னைக் கவர்ந்த கீதா கைலாசம், இந்த அங்கம்மாள் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரிடம் இப்படத்தில் நடிக்கக் கேட்டோம். அவர் கதை முழுவதையும், தனது கதாபாத்திரத்தையும் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்.அவரும் நாங்கள் தங்கி இருந்த கிராமப் பகுதிகளுக்கு இரண்டு மாதங்கள் முன்பே வந்து மக்களிடம் பழகி அவர்களின் பழக்கவழக்கங்கள், பேச்சு பாவனை போன்றவற்றைப் புரிந்து கொண்டார். குறிப்பாக இப்படித்தான் இந்த பாத்திரம் இருக்கவேண்டும் என்று நான் முடிவு செய்த சுந்தரி என்ற ஒரு மூதாட்டி உடன் நன்கு பழகி கதாபாத்திரத்தை செம்மைப்படுத்தி இருக்கிறார்.அங்கம்மாள் கதாபாத்திரம் ஒரு சுதந்திரமான பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது. தான் என்ன நினைக்கிறேனோ அது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர். அவருக்கும் அவரது மகனுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் உள்ள பந்தத்தை இப்படம் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும்.
சின்னச் சின்ன மாற்றங்களுடன் இது சிறுகதை படிக்கும் உணர்வைத் தரவேண்டும் என்பதால் படத்தின் ஒலிப்பதிவை நேரடியாகச் செய்திருக்கிறோம்.
இந்தப்படம் ஏற்கனவே ஃபோக்கஸ் சவுத் ஏசியா உள்பட 3 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது.பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் இந்தப்படத்தை இரசித்துப் பாராட்டினார்கள் என்றார்.

அங்கம்மாள் வேடத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம் கூறியதாவது…

அங்கம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டபோது எனக்குப் பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன்.அதேநேரம், இரவிக்கை அணியக்கூடாது என்றதற்கு முதலில் சற்று தயக்கமாக இருந்தது. பின்னர் எப்படி நடிக்கலாம் என்று எனக்கு சொல்லிக் கொடுத்ததால் சங்கடம் எதுவுமில்லாமல் நடித்தேன்.அதேபோல் சுருட்டு பிடிக்க வேண்டும் என்று கூறியதால் அதற்காக நான் வீட்டு பால்கனியில் அமர்ந்து பீடி மற்றும் சுருட்டு பிடித்து பயிற்சி எடுத்தேன்.சுருட்டு பிடிப்பதை விட பீடி பிடிப்பது எளிதாக இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் கூட,அதற்கு நீ அடிமை ஆகிவிடாதே என்று கிண்டல் செய்தார்கள்.
சுந்தரி என்ற பெண்மணியுடன் என்னைப் பழகவைத்து அவரைப் போலவே நடிக்கச்சொன்னார் இயக்குநர்.ஆனால், சுந்தரி போல்டு லேடி. காலை நாலு மணிக்கு எழுந்து வயலுக்குச் சென்று விடுவார்.இரவு 11 மணிக்குத்தான் உறங்கச் செல்வார். அவ்வளவு எனர்ஜி அவரிடம் இருந்தது.அவர் அளவுக்கு என்னால் ஈடு கொடுத்து நடிக்க இயலாது என்றாலும் அவரது சாயல் வரும் அளவுக்கு நான் நடித்திருக்கிறேன். 20 வயதில் நான் ஓட்டிய டிவிஎஸ் ஃபிப்ட்டி வண்டியை இந்தப் படத்துக்காக ஓட்டியது சந்தோசமாக இருந்தது.
திரைப்படத் துறையில், மற்ற நடிகைகள் முப்பது வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்க நானோ நாற்பது வயதுக்குப் பிறகுதான் நடிக்கவே வந்திருக்கிறேன். இன்னும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் பல ஆண்டுகள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.