தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் செல்வராகவன், அங்கிருப்போரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கிறார்.அதோடு நாளொன்றுக்கு ஒருவராக ஐந்து கொலைகள் செய்யப்போகிறேன் என்கிறார்.அவரிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டுவிட்டு அவர் செய்யும் கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால்.
அந்த முயற்சி பலித்ததா? செல்வராகவனை பிடிக்காமல் கொலைகளைத் தடுப்பது ஏன்? என்கிற கேள்விகளுக்கான விடையாக வந்திருக்கிறது ஆர்யன்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால், அதற்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார்.உடல்வலிமை மட்டுமின்றி புத்திக்கூர்மையும் உள்ளவராக இருக்கிறார்.தனி வாழ்வில் நிறைவில்லையென்பதை உடல்மொழியில் வெளிப்படுத்துகிறார்.அவருடைய விசாரணை முறைகள் சுவாரசியமாக இருப்பது கூடுதல் பலம்.
விஷ்ணுவிஷாலின் மனைவியாக மானசா நடித்திருக்கிறார்.அவருக்கும் அழுத்தமான வேடம்.குறைவின்றிச் செய்திருக்கிறார்.
கொலைக்காரராக நடித்திருக்கும் செல்வராகவன்,இதுவரை பார்த்த கொலைகாரர்களிருந்து மாறுபட்டுத் தெரிகிறார்.அவருடைய வேடத்தை இயக்குநர் எழுதியதைக் காட்டிலும் சிறப்பாக்கியிருக்கிறார்.அதற்கு அவருடைய அனுபவம்தான் காரணம் என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு திரைக்கதையில் முக்கிய பங்கு இருக்கிறது.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
அவினாஷ்,கருணாகரன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைக்கேற்ப நடித்து வரவேற்புப் பெறுகிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரானுக்குக் கூடுதல் உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய படமாக இது அமைந்திருக்கிறது.அவரும் அதற்கேற்ப இசைத்து படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்.
ஹரீஷ்கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் மற்றும் கோணங்கள் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன.காட்சிகளின் உணர்வுக்கேற்ற ஒளியமைப்பு செய்து பலம் சேர்த்திருக்கிறார்.
ஸ்டண்ட் சில்வா மற்றும் பி.சி.ஸ்டண்ட் பிரபு ஆகியோர் சண்டைப்பயிற்சி செய்திருக்கிறார்கள்.அவர்களுடைய வடிவமைப்பும் விஷ்ணுவிஷாலின் அர்ப்பணிப்பும் சண்டைக்காட்சிகள் மாறுபட்டும் விறுவிறுப்பாகவும் அமைய உதவியிருக்கின்றன.
ஷான் லோகேஷின் படத்தொகுப்பு படம் தொய்வின்றிச் செல்லப் பயன்பட்டிருக்கிறது.
பிரவீன்.கே எழுதி இயக்கியிருக்கிறார்.இதுபோன்ற படங்களில் கொடூரமான கொலைகள் காட்சிப்படுத்தப்படும், கொலையாளியை கடைசிவரை தேடி அலைய வேண்டியிருக்கும். முக்கியமான இவ்விரண்டு விசயங்களும் இல்லாமலேயே சைக்கோ த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார்.நாயகனின் மனச் சிக்கலை ஒரு பாடலுக்குள் முழுமையாக உணர வைத்திருப்பது நன்று.
நாயகன் விஷ்ணுவிஷால் மற்றும் எதிர்மறை நாயகன் செல்வராகவன் ஆகியோர் பாத்திரப் படைப்புகளில் இருக்கும் புத்திசாலித்தனம் இயக்குநரின் திறமையை அறிய உதவியிருக்கிறது.
– இளையவன்
