இந்தத் தலைப்பே ஒரு கருத்தைச் சொல்கிறது.தீயவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதுதான் அந்தக் கருத்து.தீயவர்கள் பலவகைகள். தீமைகளும் பலவகை.இந்தப்படத்தில், பெண்களுக்கு நடக்கும் கொடும் பாதிப்பு மற்றும் அதன் விளைவுகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
பிரபல எழுத்தாளர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்.அதை விசாரிக்கும் காவலதிகாரியாக அர்ஜுன் வருகிறார்.சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவருடைய காதலராக வரும் பிரவீன் ராஜா ஆகியோரை நோக்கி அந்த விசாரணை விரல் நீளுகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருக்கிறது படம்.
அர்ஜுனுக்குக் காவல்துறை அதிகாரி வேடம் அல்வா சாப்பிடுவதுபோல்.இந்தப் படத்திலும் சிறப்பாகச் சாப்பிட்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிக அழுத்தமான வேடம்.தொடக்கத்தில் காதலருடன் சந்தோசமாக வளையவரும் அவர் ஒரு கட்டத்தில் அதிரடி ஆக்ஷனில் இறங்கி அசத்தியிருக்கிறார்.
ஆட்டிசம் எனும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுமியாக வரும் அனிகாவின் கதாபாத்திரம் இக்கதையின் அடிநாதமாக இருக்கிறது.
ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் ஆகியோரும் நன்று.
பரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை அளவாக அமைந்திருக்கிறது.
சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு கதை திரைக்கதைக்கு நிகரான பங்கை வகித்து படத்தைப் பார்க்க வைத்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர்,இந்தவகைப் படங்களுக்கேயுரிய வரிசைகளுடன் தொகுத்திருக்கிறார்.அது படத்தை சலிப்பின்றிப் பார்க்க உதவுகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் லட்சுமணன்.திரை மொழிக்குத் தேவையான திடுக்கிடும் திருப்பங்களுடன் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
தீயவர்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும் அது சட்டப்பூர்வமாக இல்லையென்றாலும் குற்றமில்லை சட்டத்தை மீறி தண்டிக்கப்பட்டாலும் தாழ்வில்லை என்கிற பொதுப்புத்தியினரை நிறைவடைய வைக்கும் வண்ணம் படத்தை எடுத்திருக்கிறார்.அவருடைய எண்ணம் ஈடேற அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
– இளையவன்

