வடசென்னைப் பகுதியான காசிமேடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நேர்மையான மருத்துவர் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.ஒரு கட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் எதிர்ப்பையும் மீறி அவர் செய்யும் செயல் அனைவரையும் கோபப்படுத்துகிறது.அவரைத் தீர்த்துக் கட்டத் துணிகிறார்கள்.அந்தப் பகுதியில் பிரபல ரவுடி டேனியல் பாலாஜி, நாயகியை மிரட்டுகிறார். அவர் பயப்படாமல் டேனியல் பாலாஜியும் அசிங்கப்படும்படி செய்கிறார். இதனால் நாயகியைக் கொன்றே தீருவேன் என்று டேனியல் பாலாஜி புறப்படுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பது மீதிக்கதை.
நேர்மையான மருத்துவராக தெம்பும் திடமுமாக நடித்திருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன்.டேனியல் பாலாஜியிடம் நேருக்கு நேர் சவால்விடும் காட்சியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.ஆக்ஷன் ஹீரோயின்கள் வரிசையில் சேரக் கூடிய எல்லாத் தகுதிகளும் தனக்கு இருக்கிறது என நிரூபித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் டேனியல் பாலாஜி, வழக்கம்போல் சிறப்பாகச் செய்திருக்கிறார்.தான் பெரிய ஆள் என்கிற மமதையில் இருக்கும் அவர் ஒரு பெண்ணிடம் அவமானப்படும் நேரத்தில் வெளிப்படுத்தும் நடிப்பு அவருக்குப் புகழ் சேர்க்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ், தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
அரசியல்வாதியாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமுதாய ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா ஆகியோரும் நன்று.
ஒளிப்பதிவாளர் இராமலிங்கம், வடசென்னைப் பகுதி, அங்கு வாழும் மக்கள் ஆகியோரின் உள்ளும் புறமும் மட்டுமின்றி ஒளி, இருள் ஆகியனவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து காட்சிகளைக் கொடுத்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்தை மேலும் உயர்த்துகிறது.
படத்தொகுப்பாளர் இளையராஜா சேகர்,படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை பரபரப்பு குறையாமல் ஓட வைக்க முயன்றிருக்கிறார்.
இயக்குநர் ஜேபி,வடசென்னை வாழ்வியல், நேர்மறைக்கும் எதிர்மறைக்குமான போராட்டங்கள் ஆகியனவற்றை உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்லி தலைப்பில் இருக்கும் இரத்தக் கொதிப்பை பார்ப்போருக்கு ஏற்படுத்தியிருக்கிறார்.
– இளையவன்
