எல்லா இசைகளும் ஒன்றுதான்,ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்,புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை,அந்தப் பறை இசையின் பின்னணியை,வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக “மாண்புமிகு பறை” திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் சுகுமார் உருவாகியுள்ளார்.

இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார்,காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ்,சேரன்ராஜ்,ரமா,அசோக் ராஜா, காதல் சுகுமார்,ஜெயக்குமார்,முத்தம்மா,ஆரியன், தர்மராஜ்,நந்தகுமார்,சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதையை சுபா &சுரேஷ் ராம் ஆகியோர் எழுதியுள்ளனர்.
ஒளிப்பதிவு :ரா.கொளஞ்சி குமார்,படத்தொகுப்பு:சி.எஸ்.பிரேம் குமார்,
இசை : தேவா,நடன இயக்கம் :ஜானி
பாடல்கள் :சினேகன்,கலை :விஜய் ஐயப்பன்
தயாரிப்பு :சியா புரடக்ஷன்ஸ்,தயாரிப்பாளர் :சுபா -சுரேஷ் ராம்,இணை தயாரிப்பு:ஜெ.எப்.நக்கீரன் &கவிதா

இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி அருகே துறையூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா நவம்பர் 18 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர் விஜய் சுகுமார் பேசியதாவது..,

எங்களை வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி.இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.மாண்புமிகு பறை எங்கள் தயாரிப்பாளர் சுபா & சுரேஷ்ராம் தான் எழுதியுள்ளார்கள்.பறையிசை ஒரு பொதுவான இசை அதை எப்படி திரையில் கொண்டுவந்துள்ளோம் என டிரெய்லரில் பார்த்தீர்கள். இரண்டு பாகங்களாக இப்படத்தைத் திட்டமிட்டுள்ளோம், முதல்பாகத்தில் பறை இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும்,இரண்டாம் பாகத்தில் பறை இசை எத்தனை வகைப்படும் என்பதையும் சொல்லத் திட்டமிட்டுள்ளோம்.உள்ளூர் பறை இசையை உலகம் முழுக்க கொண்டு செல்லும் நோக்கத்தில்தான் இப்படத்தை எங்கள் தயாரிப்பாளர்கள் தயாரித்தனர். இப்போது உலகம் முழுக்க பல விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு விருது வாங்கியுள்ளது.எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது.தேவா சார் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி என்றார்.

இணை தயாரிப்பாளர் நக்கீரன் பேசியதாவது..,

இவ்விழாவைச் சிறப்பிக்க வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி.இது திரையிசை வெளியீட்டு நிகழ்வல்ல,நம் பாரம்பரிய இசையின் கொண்டாட்டம். இந்த பறை இசை இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.பல நாடுகளில் இந்த இசை வளர்ந்து வருகிறது.கலையைத் தாண்டி இந்த இசை ஒரு அடையாளச் சின்னம்.ஆதிபறை என்பதை நாங்கள் நம்புகிறோம் இதை அனைவரும் கொண்டாடுவோம்.இப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.

கலை இயக்குநர் விஜய் ஐயப்பன் பேசியதாவது..,

இயக்குநர் கேட்டதை,கதைக்குத் தேவையான கலை இயக்கம் மூலம் தந்துள்ளேன் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி என்றார்.

படத்தொகுப்பாளர் பிரேம்குமார் பேசியதாவது..,

எல்லோரும் இப்படத்தில் கடினமாக உழைத்துள்ளோம். வெளிநாட்டிலிருந்து தயாரிப்புக்குப் பணம் வரும், ஆனாலும் இயக்குநர் அவ்வளவு உண்மையாக இருப்பார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் பேசியதாவது..,

உள்ளூரின் பெருமையைப் பேசுவதுதான் மிகச்சிறந்த உலக சினிமா.நாங்கள் நம் ஊரின் பெருமையை, உண்மையை இப்படைப்பில் கொண்டுவந்துள்ளோம், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் பேசியதாவது..,

வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய வெற்றியைத் தரட்டும். இசையமைப்பாளர் தேவா இசைக்கு வேலைபார்த்தது பெருமை.அவர் இசையமைத்த சலோமியா பாடல் தான் என் அடையாளமாக இருக்கிறது.நாயகன் மிகக்கடினமாக உழைத்துள்ளார்.மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.படம் அற்புதமாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் வெங்கடேஷ் பேசியதாவது..,

இன்று இசையமைப்பாளர் தேவாசாரின் நாள், மாண்புமிகு பறை படத்திற்கு இசைக்கு அவரைத்தேர்ந்தெடுத்தது மிக மிக பொருத்தம்.என் படங்களுக்குத் தேவா சாரும்,ஶ்ரீகாந்த் தேவாவும் அதிகமாக இசையமைத்துள்ளார்கள்,அவர்கள் இசையில் பறையை எப்போதும் பயன்படுத்துவார்கள்,அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பது பொருத்தமாக அமைந்துள்ளது.பறை பற்றிய கதையைப் படம் சொல்வது மகிழ்ச்சி.தொல் திருமாவளவன் அவர்களுக்கு ஒரு கோரிக்கை,உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் சினிமாவிலும் கொஞ்சம் நடியுங்கள்,லியோனி சார் மகனுக்கு என் வாழ்த்துகள்.இப்படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

ஆழி பறையிசைக் கலைஞர் எழில் பேசியதாவது…,

இயக்குநர் இப்படத்தில் எங்களை அழைத்துப் பறை இசையில் பயன்படுத்தினார்.பறை இசை இசைப்பதால் எங்களைப் பல இடங்களில் தொட்டுக்கூடப் பேசமாட்டார்கள்.இன்று பலர் நன்றாகப் படித்தும் இந்த மனநிலை மாறவில்லை.இந்தநிலை மாறவேண்டும் எனக் குழந்தைகளிடம் பறை இசையைக் கொண்டு சென்று பரப்பிவருகிறோம்.எங்களை வாழ்த்தியதற்கு நன்றி என்றார்.

பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் பேசியதாவது..,

பறை இசைதான் எனக்குத் தெரியும்,பேசத்தெரியாது. மனிதன் பேசுவதற்கு முன் ஆரம்பித்த இசை பறை இசை.மனிதனின் அனைத்து விஷேசங்களிலும் இசைக்கப்படுவது பறைதான்.மனிதனின் சந்தோசத்துக்கு இசைக்கும் இசைதான் பறை.பறைஇசையை பெருமைப்படுத்தியதற்கு நன்றி என்றார்.

கலைமாமணி முனுசாமி பேசியதாவது..,

நான் பறை இசைக்கலைஞன்,என் தாத்தா,அப்பா எல்லோரும் பறை இசைக்கலைஞர்கள்தான்.பல அவமானங்களை,நிராகரிப்புகளை இந்த பறைஇசையால் சந்தித்துள்ளோம்.மேடை கச்சேரிகளில் பறைஇசையைக் கொண்டு சென்று சேர்த்தேன்,பறைஇசை பெருமைப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் ஆரியன் பேசியதாவது..,

இந்தமேடை எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.இப்படம் கிடைக்கக் காரணம் தயாரிப்பாளர்கள் தான்,அவர்களுக்கு நன்றி.என்னை நம்பி எனக்கு இந்த கேரக்டர் தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி.டிசம்பர் 12 படம் திரைக்கு வருகிறது,அனைவரும் ஆதரவு தாருங்கள்.ஜானி மாஸ்டருக்கு நன்றி.அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் கணேஷ் பாபு பேசியதாவது..,

இயக்குநர் வெங்கடேஷ் திருமாவளவன் ஐயா நடிக்க வேண்டும் என்றார்,அது ஏற்கனவே நடந்துவருகிறது அதை ஐயா அறிவிப்பார்.எந்த ஒலிபெருக்கியும் இல்லாமல் மனித மனதை ஊடுருவும் இசை பறைஇசை.
பறைக்கும் எனக்கும் நிறையத் தொடர்பு உள்ளது. வேட்டையாட கண்டுபிடிக்கப்பட்ட பறை,இன்று அடிமை விலங்குகளை உடைக்க பயன்படுகிறது.சாவுக்கு அடிக்கும் இசை அல்ல,சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு சாவு பயத்தைக் காட்டும் இசை. இன்று சமூகத்திற்கு இந்த இசையின் பெருமை புரிந்துள்ளது.விஜய்சுகுமார் மாண்புமிகு பறை படத்தை உருவாக்கியதற்கு வாழ்த்துகள்.இந்தப்படத்தின் பெயருக்கே இப்படம் பெரிய வெற்றி பெறவேண்டும். அனைவருக்கும் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது..,

இயக்குநருக்காகத்தான் இந்த விழாவிற்கு வந்தேன். இயக்குநர் மிகக்கடினமான உழைப்பாளி.படத்தை அருமையாக எடுத்துள்ளார்,அப்பாவின் விழாவிற்கு நான் வந்ததது மகிழ்ச்சியாக உள்ளது.பறைஇசை இப்போது டிஜிட்டலிலும் வந்துவிட்டது.இந்த இசையை உலகம் முழுக்க வாசிக்கிறார்கள்.பறைஇசை நம் பெருமை. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.நன்றி என்றார்.

இசையமைப்பாளர் சபேஷ் முரளி பேசியதாவது..,

பறைஇசைக்கு ரிதம் மிக முக்கியம்,இந்தப்படத்திற்கு அண்ணனால் மட்டும்தான் இசை அமைக்க முடியும். அண்ணன் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி.இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை காயத்திரி பேசியதாவது..,

எல்லா இசைக்கருவிகளின் தாய்தான் பறை. எல்லா செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்க, திருவிழாவிற்கு,விஷேசத்திற்கு என எல்லாவற்றிற்கும் பறைதான் அடிப்படை.அந்த பறைஇசை பெருமை பேசும் படத்தில் நானும் அங்கமாக இருப்பது எனக்குப் பெருமை.மீடியா நண்பர்கள் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

அன்புச்செல்வன் பேசியதாவது..,

தயாரிப்பாளர் சுபா மேடம் இப்படத்தை ஃபிரான்ஸிலிருந்து எடுத்துள்ளார்கள்.மிகப்பெரிய செலவு செய்து இப்படத்தை எடுத்துள்ளார்கள்.இயக்குநரை முழுமையாக நம்பினார் அதை இயக்குநர் காப்பாற்றி அருமையாகப் படத்தை எடுத்துள்ளார். இப்படம் அதற்காகப் பெரிய வெற்றி பெறவேண்டும் என்றார்.

லியோ சிவக்குமார் பேசியதாவது..,

நான் திண்டுக்கல்லில் பிறந்து முதன்முதலில் கேட்ட இசை பறைஇசை.இன்று நான் பறைஇசை கலைஞனாக நடித்திருப்பது பெருமை.இந்தக்கதையை இயக்குநர் சொன்னபோதே இதன் பெருமை புரிந்தது,இதில் நடிக்கக் கண்டிப்பாகப் பறை கற்றுக்கொள்ள வேண்டுமென,சக்தி கலைக்குழுவில் பறை கற்றுக்கொண்டு இப்படத்தில் நடித்தேன்.இணை தயாரிப்பாளர் முரளி இல்லாமல் இப்படம் இல்லை. இப்படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முனுசாமி அண்ணன் இசை கேட்டு நாடி நரம்பெல்லாம் துடித்தது விருதுக்குத் தகுதியானவர் அவர். இயக்குநருக்கு என் நன்றி.இசையமைப்பாளர் தேவா இசை கேட்டுத்தான் வளர்ந்துள்ளேன்.அவர் இசையில் நடித்தது எனக்குப் பெருமை.இந்தவிழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய ஆளுமைகளுக்கு நன்றி.டிசம்பர் 12 படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது..,

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறக்கிறது என்பார்கள் இங்கு இரண்டுபேர் இருக்கிறார்கள்.ஶ்ரீகாந்த்தேவா தேசியவிருது வாங்கி தேவாவைக் கௌரவப்படுத்தியுள்ளார்.அதேபோல நாயகன் லியோ அவர் அப்பா லியோனி போல அருமையாகப் பேசினார். பறைஇசை நான் சின்னவயதில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் கேட்டுள்ளேன்.அது சாவுக்காக அடிக்கும் பறை இல்லை,சாமிக்காக அடிக்கும் பறை. சாமியிடம் செல்வதால் அதை அடித்து வழியனுப்புகிறார்கள்.ஆதி தமிழனின் முதல் இசை பறை. ஃபாரினில் போய் நம் பாரம்பரியத்தைப் போற்றும் கதை எழுதி,அதைப்படமாக எடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.லியோனி அனைவரையும் சிரிக்கவைக்கும் ஆளுமை,அவர் பேச்சை நான் விரும்பிக் கேட்பேன். ஆணவக்கொலை என்பது எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருந்தே நடந்துவருகிறது.இன்னும் மாறவில்லை. அதனால்தான் ஆதரவு தரும் வகையில் திருமாவளவன் இந்தவிழாவிற்கு வந்துள்ளார்.எல்லோரும் மிகவும் கஷ்பட்டு இப்படத்தை எடுத்துள்ளார்கள்.இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி என்றார்.

YouTube player

தயாரிப்பாளர் முரளி பேசியதாவது..,

சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ்ராம் என் அக்கா, அண்ணா,அவர்களால் இங்கு வரமுடியவில்லை,எங்கள் படத்தை வாழ்த்த வந்தவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் தேவா அவர்களுடன் பணிபுரிந்தது பெருமை.எங்களுக்கு என்ன தேவை என பார்த்துப் பார்த்து செய்துதந்தார்.லியோ அருமையாக நடித்துள்ளார்.விஜய் சுகுமாரிடம் பொறுமையும் அமைதியும் நிறைய உள்ளது.இணை தயாரிப்பாளர் நக்கீரன் சாருக்கு நன்றி.படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.எங்களுடைய மூன்று வருட கனவு,டிச்மபர் 12 படம் வருகிறது.எல்லோரும் திரையரங்கில் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் தேவா பேசியதாவது..,

இந்தவிழா ஆரம்பத்திலேயே களைகட்டி விட்டது. எழில் குழுவினர் கலக்கிவிட்டனர்.முனுசாமி ஐயா அசத்திவிட்டார்.விஜய் சுகுமாருக்கு இது முதல்படம் போலவே இல்லை,அட்டகாசமாக எடுத்துள்ளார். எல்லா கலைஞர்களும் அத்தனை அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள்.முரளி எனக்கு என்ன வேண்டுமோ அனைத்தையும் செய்துதந்தார்.சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துகள்.லியோனி மகன் என்பது மகிழ்ச்சி.நாயகிக்கும் எனது வாழ்த்துகள்.ஆஸ்திரேலியா அரசு என்னைக் கௌரவப்படுத்தியது.நான் அங்கு சென்று 25 பேருக்குப் பறை இசை சொல்லித்தந்தேன் அதற்காகத்தான் அந்த மரியாதை செய்தார்கள்.இப்படி ஒரு படத்திற்கு இசையமைத்தது எனக்குப் பெருமை. பறைஇசைக்கு ஆந்தம் செய்துள்ளேன் அந்த ஆந்தமாக எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டும். நன்றி என்றார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசியதாவது…,

மாண்புமிகு பறை இந்த தலைப்பே ரொம்ப அருமையான தலைப்பு.பறைஇசைக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படத்தினுடைய தயாரிப்பாளர் சுபா அப்புறம் அவங்க சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துகள் இயக்குநர் இங்கும் பரபரப்பாகவே இருக்கிறார். படத்தை மிக அற்புதமாகவே உருவாக்கியுள்ளார்.பாட்டுக்கு ஆடி இந்தவிழாவைத் துவங்கி வைத்த எழில் குழுவுக்கு வாழ்த்துகள்,ஒரு கலைஞர் கூட்டத்தில் இருக்க அவ்வளவு பேரையும் தன்பக்கம் கவர்ந்து தனக்காகக் கைதட்ட வச்ச ஒரு அற்புதமான ஒரு வாத்தியார் முனுசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்.ஸ்ரீகாந்த் தேவா ஒரு அருமையான இசையமைப்பாளர்,தேசிய விருது வாங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி மிக அழகாகத் தமிழில் பேசி,பறை கலையின் அருமையைப் புரியவைத்தார்.இசையமைப்பாளர் தேவா இப்படத்தின் பெரும்பலம்.கர்நாடக சங்கீதத்திலும் மிகப்பெரிய வல்லமை உள்ளவர்,இன்று அவர் கர்நாடக சங்கீதத்துக்கு இணையாக படத்திற்கு இசையமைத்துள்ளார்,இப்படம் மிகப்பெரிய சங்கராபரணம் மாதிரி வெற்றி அடைய வேண்டும் வாழ்த்துக்கள்.இந்தப்படத்துக்கு அவர்தான் உண்மையிலேயே ஹீரோ,அதனால் அவருடைய பாட்டை பற்றி ஒரு தனி பட்டிமன்றம் போடலாம் என்று ஆசைப்படுகிறேன்.படத்தில் டைட்டிலில் தன் பெயரைப் போடுவதையே தனிஸ்டைலாக்கி நம்மை ரசிக்க வைத்தவர் திரு பாக்யராஜ்,ஒரு மாபெரும் திரைக்கதை மன்னன் இந்தப்படத்துக்கு வாழ்த்து சொல்லியது பெரிய சந்தோஷம்.

சமூகநீதிக்காக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நான் மிகவும் நேசிக்கக் கூடிய என் அருமை சகோதரர் எழுச்சிதமிழர் தொல் திருமா அவர்கள்,இந்த இசை வெளியீட்டுக்கு வருகை தந்தது, எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை.இந்த மாண்புமிகு பறை என்ற படம் டிசம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிற்து. சூப்பர் ஸ்டாரோட ரசிகன் எங்க ஐயா தேனிசை தென்றல் தேவா என்று சொன்னார்கள். நான் அதை மாற்றிச் சொல்கிறேன். சூப்பர் ஸ்டாரோட ரசிகன் ஐயா இல்லை.தேவாவோட ரசிகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.சிங்கப்பூர் அதிபர்,தேவாதி தேவா அப்படிங்கிற நிகழ்ச்சிக்கு வருகை தந்து,தஞ்சாவூர் மண்ணை எடுத்து என்கிற பாட்டை,நான் சாகும்போது இந்தப்பாட்டை போட்டுட்டுதான் என்னுடைய உடலை அடக்கம் செய்யனும்னு சொன்னார் என்றால்,தேவா அவர்கள் இந்த உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்களைச் சம்பாதித்து உள்ளார்.இந்தப்படத்தில் என் மகனை விட, அவர்தான் இந்தப்படத்தினுடைய கதாநாயகன். இப்படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன் பேசியதாவது..,

மாண்புமிகு பறை இசை வெளியீட்டு விழா என்பதை விட மாண்புமிகு பறை தமிழர் பண்பாட்டுக்கூடல் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு இனத்தின் பண்பாடு குறித்து மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆற்றிய உரை நம்மை ஆழச்சிந்திக்க வைத்தது,சிலிர்ப்பூட்டியது,இனி பேசுவதற்கு எதுவும் இல்லை நன்றி சொல்லி முடிக்கலாம் என்கிற அளவுக்கு, அண்ணன் லியோனி அவர்களின் பேச்சும், நம்முடைய தேனிசை தென்றல் அவர்களின் இசையுடன் கூடிய ஒரு இசையுரையும் இளம் இயக்குநர்களுக்கு நல்ல வழிகாட்டுதலைத் தந்து ஆணவக் கொலைக்கு எதிராக இப்படியும் சிந்திக்கலாம் திரைக்கதை அமைக்கலாம் என்று இங்கேயே ஒரு திரைக்கதை அமைக்கிற உரையை ஆற்றி அமர்ந்திருக்கிற அண்ணன் கே.பாக்யராஜ் அவர்களின் உரை,எல்லாவற்றையும் விடத் தம்பி சிவா அவர்களின் உரை, நம்முடைய கதாநாயகி அவர்களின் உரை எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நம்மை ஆட்டிவைத்தது,வியப்புக்குள்ளாக்கியது.பறை குறித்து நம்முடைய தமிழர் பண்பாடு எவ்வாறு இருந்தது நாகரிகம் அடைந்தது என்ற உரையாக இது அமைந்தது ஒவ்வொருவரும் ஆற்றிய உரைகள் பறை என்பது இன்றைக்கு ஒரு இழிவான சொல்லாக மாறி இருக்கிறது. அதனால் அந்த கருவியும் இழிவாகப் பார்க்கப்படுகிற சூழல் அமைந்துவிட்டது. அந்த கருவியால் ஒரு இனம் இழிவாகக் கருதப்படுகிறதா? அல்லது ஒரு இனத்தால் ஒரு சமூகத்தால் அந்த கருவி குறைத்து மதிப்பிடப்படுகிறதா? என்று நமக்குத் தெரியவில்லை.

ஆனால் இது ஆதிசிவன் அடித்த பறை என்று கவிஞர் சினேகன் அவர்களின் வரிகளில் அண்ணன் தேனிசை தென்றல் அவர்கள் அமைத்திருக்கிற இந்த பாடல் நம் கவனத்தை ஈர்த்தது. மாண்புமிகு என்கிற பெருமைக்குரியது என்கிற வகையிலே இந்த திரைப்படத்திற்குப் பெயர் சூட்டி இருப்பது ஒரு துணிச்சலான செயல். போற்றுதலுக்குரிய செயல். இயக்குநரின் துணிச்சலைக் கதை எழுதியவர்களின் துணிச்சலை நான் மனமாற பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் பறை என்பது ஒரு பொதுவான சொல் அனைத்து இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் மூலம் அதிலிருந்துதான் இசைக்கருவிகளின் வடிவங்கள் மாறி மாறி வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருக்கின்றன. இந்த சமூகத்தின் மூலச்சமூகம் தான் பறை என்கிற பெயரில் அழைக்கப்படுகிற சமூகம் இது ஒரு சமூக ஆய்வாளரின் கருத்து.ஒரு குலத்திலிருந்துதான் எல்லா குலமும் என்கிற போது தமிழ்ச்சமூகத்தில் அந்த மூல சமூகம் ஆதிகுலம் பறையர்குலம்தான் என்று அந்த வல்லுநர்கள் பதிவு செய்கிறார்கள்.
பறை அடித்ததனால் பறையன் என்று பலரும் கருதுகிறார்கள் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை இன்றைக்கு நீங்கள் ஒரு கிராமத்திற்குப் போனால் பறையர் குடியிருப்புக்குப் போனால் 200 குடும்பங்கள் 300 குடும்பங்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த 300 குடும்பங்களைச் சார்ந்தவர்களும் பறை அடிப்பதில்லை, அவர்களுக்குப் பறை பற்றி தொடர்பும் இருப்பதில்லை அந்தகிராமத்தில் சிலர்தான் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் பறையடிக்கிற ஒரு வழக்கத்தை வைத்திருப்பார்கள்.எல்லா மக்களும் விவசாயத்தைச் செய்யக்கூடியவர்கள்தான்.அவர்களுக்கு ஏரோட்ட தெரியும். நடவு நடத்தெரியும். அறுப்பறுக்க தெரியும், தால் அடிக்கத்தெரியும்.விவசாய பெருங்குடி மக்கள்தான். அந்த விவசாய பெருங்குடி மக்களை ஒட்டுமொத்தமாகப் பறையர் என்ற பெயரில் அழைத்து இழிவுபடுத்தி இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும் இது குறித்து பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள் அதற்கு ஒரே காரணம்தான் இது மூலச்சமூகம் ஆதிச்சமூகம் அதிலிருந்து தோன்றுகிற ஒவ்வொரு புதிய சமூகமும் அதிலிருந்து தன்னை தனிமைப்படுத்தி அந்நியப்படுத்தி பிரிவுபடுத்தி காட்டிக் கொள்வதற்காக அந்த ஆதிசமூகத்தை இழிவுபடுத்துவதை ஒரு பண்பாடாக இங்கே வளர்த்திருக்கிறார்கள். அப்போதுதான் நாங்கள் அவர்களை விட மேலானவர்கள் என்று சொல்லுகிற அந்த நிலை வளர்ந்திருக்கிறது இது சமூக ஆய்வாளர்களின் கருத்து. பறை என்பதிலிருந்து பறையன் என்கிற ஒரு சமூகம் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை.ஆனால் அவன் பயன்படுத்துவதனாலேயே அது இழிவான கருவி இழிவான பொருள் என்று பார்க்கிற ஒரு உளவியல் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் மாற்ற வேண்டும் பொதுஉளவியலில் இந்த இழுக்கு இருக்கிறது அதைத் துடைத்தெறிய வேண்டும் என்றுதான் பெரியார் கனவு கண்டார் புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்டார் அதைத்தான் நாம் பேசுகிறோம். அந்த அரசியல் புரிதல் இருப்பதனால் தான் விஜய சுகுமாரன் இந்தப்படத்திற்கு மாண்புமிகு பறை என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர் மாண்புமிகு முதலமைச்சர் என்று சொல்லுவதுபோல் மாண்புமிகு பறை என்று சொல்லுகிற அந்த துணிச்சல் அது ஒரு அரசியல் புரிதலிலிருந்து மட்டும்தான் செய்யமுடியும்.அப்படிப்பட்ட ஒரு படத்தில் தம்பி சிவா போன்றவர்கள் இன்றைக்கு நடித்திருக்கிறார்கள் என்றால் அண்ணன் லியோனி அவர்களிடம் அவர் கற்றுக்கொண்ட அரசியலும் தான் அதற்கு அடிப்படை.இந்த சாதிய கட்டமைப்பை எதிர்த்து நடத்திய யுத்தத்தின் எச்சங்கள்,பதிவுகள் நாம இன்றைக்கு புதுசா பேசவில்லை.இதை ஐயன் திருவள்ளுவனே இந்த சாதி அமைப்பு கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.இது நீண்ட நெடிய ஒரு போராட்டமாக இருக்கிறது.அந்த போராட்டத்தை வெவ்வேறு வடிவங்களில் இன்றைக்கு நாம் மையநீரோட்டத்தில் இணைக்கிற முயற்சி தான் இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. திரைப்படங்களில் இன்றைக்குப் புதிதாக இது வரவில்லை திரைப்படங்களில் நீண்டகாலமாகவே இதற்கு எதிரான படைப்புகள் நிறைய வந்திருக்கின்றன.பழைய படங்களில் நிறையப் பாடல்கள் கூட இருக்கின்றன.அந்த பாடல்களை எல்லாம் இப்போது எடுத்து சமூகஊடகங்களில் தோழர்கள் பரப்புகிறார்கள். ஆகவே இது ஒரு நீண்டநெடிய போராட்டம், அந்த போராட்டத்திலே திரைக்கலை ஆளுமைகள் தங்களையும் இணைத்துக் கொள்வது, அதற்காக தம்முடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவது, இதுபோன்ற படைப்புகளைக் கொண்டு வருவது, இதன் மூலம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் சுகுமாரன் அவர்களை நெஞ்சார பாராட்டுகிறேன்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிற தம்பி சிவா அவர்கள் மிக அற்புதமாக உரையாற்றினார்.அவருடைய உரையில் நல்ல ஒரு தெளிவு இருந்தது.அந்த தெளிவு அரசியல் புரிதலாக ஒரு நீண்டகால அரசியல் தொலைநோக்கு பார்வை உள்ளதாக நான் புரிந்துகொள்கிறேன்.இதுபோன்ற கலைஞர்கள் தான் திரைத்துறையைக் கையில் எடுக்கவேண்டும் பயன்படுத்தவேண்டும். இந்த திரைத்துறையை நாங்கள் முற்போக்கு சிந்தனை களமாகப் பயன்படுத்துவோம் என்கிற அந்த ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.இந்த திரைப்படத்தில் நாம் முழுமையாகப் பார்த்தால்தான் என்ன கதை கருப்பொருளாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.என்றாலும் கூட இந்த தலைப்பே நம்மை வியக்க வைக்கிறது.ஆழமா சிந்திக்க வைக்கிறது.அந்தவகையிலே இது வெற்றி பெறவேண்டும். வெற்றிபெற வைப்பதற்குத் தமிழ்சச்மூகம் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.விடுதலைச் சிறுத்தைகளும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்போம் என்பதை இந்த நேரத்திலே சொல்லி,எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் லியோனி அவர்களுக்கும் இயக்குநர் விஜய் சுகுமாரன் தம்பி சிவா போன்றவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.