நகைச்சுவை நடிகராகப் புகழ்பெற்றிருக்கும் முனிஸ்காந்த், கதை நாயகனாக நடித்திருக்கும் படம் மிடில் கிளாஸ். கிஷோர் எம்.ராமலிங்கும் இயக்கியிருக்கும் இப்படத்தில் முனிஸ்காந்த்துக்கு இணையராக விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.ராதாரவி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாகவும் குரோஷி தானி ஓட்டுநராகவும் நடித்திருக்கிறார்கள். காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, மாளவிகா அவினாஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு, சுதர்சன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணனிடம் பணியாற்றிய பிரணவ் முனிராஜ் இசையமைக்கிறார். பாடல்களை மோகன் ராஜா கதிர் மொழி, ஏகன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரித்திருக்கும் இப்படம், நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து தகவல்களை, இயக்குநர் கிஷோர் எம்.இராமலிங்கம்,நாயகன் முனிஸ் காந்த்,நாயகி விஜயலட்சுமி, தயாரிப்பாளர்கள் கே.வி.துரை மற்றும் தேவ் ஆகியோர் பகிர்ந்து கொண்டார்கள்.

தயாரிப்பாளர் கே.வி.துரை கூறியதாவது….

பல வெற்றிப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் மறைந்த டில்லி பாபு சார்தான் இந்தக் கதையை கேட்டார். பிடித்துப் போகவே தயாரிக்க ஒப்புக்கொண்டார். சரியான படங்களை அவர் எப்போதும் தேர்வு செய்வார், அந்த வகையில் மிடில் கிளாஸ் படமும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்றார்.

கதாநாயகி விஜயலட்சுமி கூறியதாவது…..

மிடில் கிளாஸ் பட கதையை இயக்குநர் என்னிடம் கூறிய போது கதை மிகவும் பிடித்தது. உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய படங்களில் நான் நடிப்பதில்லை.காரணம்,படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மட்டும் நன்றாக இருந்து கதை சரியாக இல்லாவிட்டால் அந்தப் படம் வெற்றி பெறுவது கடினம். அதனால் கதாபாத்திரமும் வீணாகிவிடும். அதனாலேயே நான் முழுக் கதையையும் கேட்டு அந்தப் படம் மக்களுக்குப் பிடிக்கும், வரவேற்பு பெறும் என்று எண்ணினால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.அந்தவகையில்தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.

இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம் படம் குறித்துக் கூறியதாவது….

இரண்டு வேறுபட்ட மனநிலையில் இருக்கும் கணவன் மனைவி பற்றிய படம் இது.இதில் கணவனாக முனிஸ்காந்த்,மனைவியாக விஜயலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.முனிஸ்காந்த்துக்கு கிராமத்தில் இரண்டு ஏக்கர் இடம் வாங்கி அதில் வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமியோ நகரத்திலேயே வசதியாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.விஜயலட்சுமி தனது எண்ணத்தை அதட்டலுடன் வெளிப்படுத்தினாலும் முனிஸ்காந்த் மனதுக்குள் புழுங்கிக் கொண்டு அமைதியாக குடும்பத்தை நடத்திச் செல்கிறார். இப்படிச் சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அது என்ன? என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன்.
முதல் அரை மணி நேரம் குடும்பக் கதையாகச் செல்லும் படம் பின்னர் யூ ட்யூப் பற்றிய கதையாக மாறி அதன் மூலம் இந்தக் குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறது என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறேன்.
முனீஸ்காந்திடம் இப்படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டபோது முதலில் தயங்கினார்.நான் ஹீரோ கிடையாது.இந்த கதைக்கு எப்படிப் பொருந்துவேன் என்று கேட்டார்.இந்த கதாபாத்திரம் குணச்சித்திரம், காமெடி, செண்டிமெண்ட் என்ற எல்லா பரிமாணங்களும் கொண்ட பாத்திரமாக இருப்பதால் பொருத்தமாக இருப்பீர்கள் என்று விளக்கிக்கூறி சம்மதிக்க வைத்தேன்.
அதேபோல் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த விஜயலட்சுமியிடம் இந்தக் கதையைக் கூறச் சென்றபோது முழுக் கதையையும் கேட்டுவிட்டு இதில் அவருக்கு உள்ள முக்கியத்துவத்தையும் உணர்ந்து உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் என்றார்.

கதைநாயகன் முனிஸ்காந்த் கூறியதாவது….

நகைச்சுவை வேடங்களில் நல்லபெயர் கிடைத்து வண்டி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த நேரத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்டு இயக்குநர் வந்தார்.அவரிடம்,நான் ஹீரோவெல்லாம் கிடையாது. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும்.என்னால் முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டேன்.அதற்கு, இந்தக் கதையின் நாயகனாக இருக்க நீங்கள் மிகப் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னார்.கதை கேட்டேன்.நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவனாக ஒரு அருமையான பாத்திரம்.இதை விடக்கூடாது என்று முடிவு செய்து நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அதேநேரம், நான் வந்தால் சிரிப்பு இருக்கவேண்டும் என இரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.எனவே,சில காட்சிகளில் காமெடி வைக்க வேண்டும் என்று நான் கூறினேன். அதை இயக்குநர் ஏற்கவில்லை. இந்தக் கதைக்கு இவ்வளவு நடித்தால் போதும் என்று என்னை நடிக்க வைத்தார். இது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்கும்.அனைவருக்கும் பிடிக்கிற படமாகவும் இருக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.