இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் உடன் பத்திரிக்கையாளர் அருணகிரி நடத்திய உரையாடல்.
அருணகிரி:
நீங்கள் பல நாடுகள் சுற்றி இருக்கின்றீர்கள்? அங்கே நீங்கள் பார்த்தது என்ன?
ராஜ்குமார்:
நான் இயக்கிய வெங்காயம் படத்திற்காக மலேசியாவில் ஒரு விருது கொடுத்தார்கள்.
அதற்காக 2012 ஆம் ஆண்டுதான் முதன்முறையாக அயல்நாடு சென்றேன்.
அந்த நாட்டில் சாலைகள், நடைவழிகள், பொது இடங்களின் தூய்மைதான் என்னை வியக்க வைத்தது.
இங்கே அப்படிப் பார்க்கவே முடியாது.
அடுத்து, தாய்லாந்து, இலங்கை, கம்போடியா, வியட்நாம் என கிழக்கே உள்ள நாடுகளுக்குச் சென்றேன்.
அருணகிரி-
கம்போடியாவில் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடத்தியதாகச் சொன்னீர்களே?
ராஜ்குமார்-
திருத்தணிகாசலம் அவர்கள் ஒருங்கிணைப்பில், கம்போடியாவில் ஒரு தமிழ் மாநாடு நடைபெற்றது. அங்கே நான் தெருக்கூத்து நிகழச்சி நடத்தினேன். அந்த நாட்டை ஆண்ட தமிழ் மன்னன் நந்திவர்மன் கதையை நடித்துக் காண்பித்தோம்.
கடந்த பல நூற்றாண்டுகளாக, தமிழ்நாட்டின் கிராமப்புறக் கலைகளில் அண்டப்புளுகுப் புராணக் கதைகளைப் பேசிப்பேசி மக்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டார்கள். இதை முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் தந்தை பெரியார்தான்.
இசைவிழாக்களில் பாடப்படுகின்ற கீர்த்தனைகள் எல்லாமே தெலுங்கு மொழியில் இருக்கின்றதே?
ஏன் தமிழில் பாடக்கூடாது? என்று கேட்டார்.
அதற்காக ஒரு நிகழ்வையும் ஏற்பாடு செய்தார்கள். பெரியார் பங்கு ஏற்றார். அங்கே பாடப்பட்ட பாடல்களும் அண்டப்புளுகுகளாகவே இருந்தன. கடவுளைப்புகழ்ந்து, புராண இதிகாசப் புரட்டுகளைப் பாடுவதுமாகவே இருந்தன. அத்துடன் நில்லாமல் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் இருந்தன.
இதைக் கேட்ட பெரியார் அதிர்ச்சி அடைந்தார். இப்படி மூடக் கதைகளைக் கேட்பதை விட இது புரியாத மொழியிலேயே இருந்து தொலைத்து இருக்கலாமே? என்று சொன்னார். ஒரு மாமியார் பல் விளக்காத மருமகனிடம் கொஞ்சம் காசு கொடுத்து, மருமகனே நீங்கள் போய் கரும்பு சாப்பிட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தாராம். அவன் கடைக்குப் போய் எள்ளுப் புண்ணாக்கு வாங்கிச் சாப்பிட்டு வந்தது போல் அல்லவா இருக்கின்றது என்று கேட்டார்.
என் தாத்தா ஒரு தெருக்கூத்துக் கலைஞர். அப்பா நாடக நடிகர். எனவே, தெருக்கூத்துக் கலையைப் பரப்ப வேண்டும் எனத் தீர்மானித்தேன்.
ஆனால் அந்தத் தெருக்கூத்துப் பாடல்களைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. கலை என்கின்ற பெயரில்,
நமக்கு எதிரான கருத்துகளை நாமே எப்படிக் கொண்டாட முடியும்?
எனவே, தமிழரின் கதைகளை மட்டுமே பாடுவது என முடிவு செய்தோம். அதற்கு கம்போடியா நிகழ்வு வழி அமைத்தது.
அருணகிரி–
மேற்கு நாடுகளுக்குப் போயிருக்கின்றீர்களா?
ராஜ்குமார்
ஆம். ஃபிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறுகின்ற திரைப்பட விழா, உலகப் புகழ்பெற்றது.
ஆண்டுதோறும், உலகின் அத்தனைக் கலைஞர்களும் வந்து கூடுகின்ற அந்த நிகழ்வைப் பார்க்க ஒரு நண்பர் உடன் சென்றேன். அத்துடன் ஒன் படத்திற்காக சில காட்சிகளையும் அங்கே படம்பிடிப்பதாகத் திட்டம்
முதலில் சுவீடன் நாட்டுக்குச் சென்று இறங்கி, அங்கிருந்து சாலை வழியாக ஃபிரான்ஸ் சென்றோம்.
அப்படியே நோர்வே, டென்மார்க், இத்தாலி நாட்டில் ரோம், வாட்டிகன், பைசா வரை சென்று பார்த்தோம். லண்டன் போக முடியவில்லை.
அருணகிரி
ஆம். அதற்குத் தனி விசா எடுக்க வேண்டும்.
ராஜ்குமார்
ஆம் என்னிடம் செங்கென் விசா மட்டும்தான் இருந்தது. கண்டிப்பாக லண்டனுக்கும் போவேன்.
ஃபிரான்ஸ் நாட்டில் நான் சந்தித்த ஒரு பாட்டியைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
அவர் பெயர் ஓல்கா. நான் ஃபிரான்ஸ் போவதற்கு முன்பு, அங்கே தங்குவதற்கான விடுதி அறையை, ஏர் பிஎன்பி மூலம் முன்பதிவு செய்தேன்.
மாலை 4 மணிக்குத்தான் முன்பதிவு என்பதால் அந்நேரத்தில் தான் அந்த விடுதிக்கு உள்ளே நுழைய முடியும்.
ஆனால் வான் ஊர்திப் பயணத்தில் முன்பதிவு செய்தபடி, நாங்கள் காலை 6 மணிக்கே அங்கே போய்ச் சேர்ந்து விட்டோம்.
விடுதிக்குப் போனோம். ஆனால் அவர்கள் எங்களை உள்ளே விடவில்லை. மாலை 4 மணிக்கு தான் அனுமதிக்கமுடியும் என்றுவிட்டார்கள். எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம். எங்களுக்கு இங்கே யாரையும் தெரியாது.
நாங்கள் வேறு எங்கும் போக முடியாது என்று சொல்லிப் பார்த்தோம். அந்த விடுதிக்காரர்கள் கேட்கவே இல்லை.
அருணகிரி
ஆம். அயல்நாடுகளில் அப்படித்தான் இருப்பார்கள்.
செப்டெம்பர் மாதம் ஜப்பான் பயணத்தில், ஓசக்காவில் நான் தங்க இருந்த விடுதியில் ஒரு பணியாளர் கூட இல்லை.
வரவேற்பு அறையில் ஒருவர் கூட இல்லை. எல்லாமே இணைய வழியில்தான்.
வரவேற்பு அறைக்கு உள்ளே நுழைவதற்கே, அலைபேசியில் வருகையைப் பதிவு செய்த பிறகுதான் கண்ணாடிக் கதவு திறக்கின்றது. அப்படிச் செய்ய எனக்குத் தெரியவில்லை.
அங்கே இரண்டு ஐரோப்பியர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களை அழைத்தேன். ஒருவர் கதவு அருகில் வந்தார். உடனே கதவு திறந்து கொண்டது. உள்ளே போய்வட்டேன். ஆனால் அவர்களும் என்னைப் போலவே முன்கூட்டியே வந்தவர்கள்தான்.
பகல் 12 மணிக்குத்தான் அறைக்கு உள்ளே நுழைய முடியும். அதுவரை அங்கேயே உட்கார்ந்து இருந்தோம்.
12 மணி ஆனவுடன், அங்கே இருந்த ஒரு கணினியில் அந்த ஐரோப்பியர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்தார்கள். உடனே ஒரு எண் அட்டையும், ஒரு குறியீட்டு எண்ணும் வந்தது அதை எடுத்துக்கொண்டு அவர்கள் மேலே போனார்கள். அதைப் பார்த்து நானும் செய்தேன். அந்த அட்டையைக் கொண்டு போய் எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்கதவில் பொருத்திய பிறகு, குறியீட்டு எண் கேட்டது. அதைக் கொடுத்தவுடன், ஒரு சிறிய கதவு திறந்தது. அதற்கு உள்ளே மற்றொரு அட்டை இருந்தது . அதுதான் சாவி. அதை வைத்துக் கதவைத் திறந்தேன்.
நாம் அந்த விடுதி அறையை விட்டு வெளியேறுவதற்குக் குறிப்பிட்டு உள்ள நேரத்தில் வெளியே போய்விட வேண்டும். தவறினால் கதவு திறக்காது. மாட்டிக் கொள்வோம்.
மறுநாள் காலை 9 மணிக்கு இரண்டு பெண்கள் வந்தார்கள். அவர்கள் அன்று காலையில் காலி செய்த அறைகளைத் தூய்மை செய்துவிட்டு, 11 மணி அளவில் போய்விட்டார்கள்.
இந்த விடுதி அறையில் குடிப்பதற்குத் தண்ணீர் கிடையாது. ஒவ்வொரு நாளும் அறையைத் தூய்மை செய்கின்ற வழக்கமும் இல்லை என்பதை, பதிவு செய்யும்போதே குறிப்பிட்டு விடுகிறார்கள். அதை நாம் படித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கீழே வரவேற்பு அறையில் ஒரு குளிரிப் பெட்டியில் தண்ணீர் மற்றும் கோக் பாட்டில்கள் உள்ளன. காசு கொடுத்து அவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும.
ராஜ்குமார்
அப்படித்தான் ஃபிரான்ஸ் நாட்டில் நாங்கள் ஒரு வாரம் தங்கி இருந்த அந்த விடுதியிலும் இருந்தது.
அதற்கு முன்பு அந்த விடுதியைக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாக இருந்த து.
மாலை 4 மணி வரை உள்ளே போக முடியாது என்பதால், தெருவிலேயே சுற்றிக் கொண்டு இருந்தோம்.
நம்ம ஊரில் ஒரு தேநீர்க்கடை இருக்கும். அங்கே போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கலாம். ஒரு உணவுக் கடைக்குச் சென்று அங்கே சிறிது நேரம் உட்கார்ந்து இருக்கலாம்.
ஃபிரான்சில் அப்படி எதுவும் இல்லை. கையில் பெரிய பெட்டிகள் இருக்கின்றன. இரவு நேர வான் ஊர்திப் பயணம். மிகவும் களைப்பாக இருந்தது. இப்படி நாங்கள் தடுமாறிக் கொண்டு இருந்த வேளையில், ஒரு வயதான பாட்டி நடந்து வந்தார். அவரிடம் சொன்னோம்.
அவர் பிரெஞ்சு மொழிதான் பேசுகிறார். ஆங்கிலம் தெரியவில்லை.
எப்படியோ நாங்கள் சொன்னதைப் புரிந்து கொண்டார். அந்த விடுதிக்குத் தொடர்பு கொண்டு பேசினார்.
அதற்குப் பிறகும்கூட அந்த விடுதிக்காரர்கள் கொஞ்சம் கூட அசையவில்லை. அந்தப் பாட்டி போய்விட்டார்.
ஏதோ ஒரு கடைக்குச் சென்று திரும்பி வந்தார். இப்போதும் நாங்கள் தெருவில் நிற்பதைப் பார்த்தார். என்ன இங்கேயே நிற்கின்றீர்கள்? என்று கேட்டார். எங்கே போவது என்றே தெரியவில்லை என்று சொன்னோம்.
சரி. என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தார். ஐரோப்பா அமெரிக்காவில் நிறவெறியைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். நாங்கள் இருவரும் கருப்பு. ஆனால் அந்தப் பாட்டி எங்களை அன்போடு அழைத்தார் எங்களைப் பற்றி எந்த அச்சமும் அவருக்கு இல்லை. அவருடன் சென்றோம். நாங்கள் குளித்து உடை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்தார். காஃபி தந்தார். பிரெட் சாலட் என காலை உணவு தந்தார்.
அருணகிரி
ஐரோப்பா, அமெரிக்காவில் இப்படி யாருமே செய்ய மாட்டார்கள். ஏன் பேசக்கூட மாட்டார்கள்.
ராஜ்குமார்
ஆமாம். மாலை நான்கு மணி வரையிலும் அவர் வீட்டில் இருந்தோம். நாங்கள் விடுதி அறைக்குப் போகும்பொழுது, அலைபேசியை மின்ஊட்டம் செய்தவற்கான சார்ஜர் கொடுத்தார். கையில் கொஞ்சம் உணவும், சில பாத்திரங்களும் கூடத் தந்தார். நீங்கள் ஒரு வாரம் தங்கப் போகின்றீர்கள். இது உங்களுக்குப் பயன்படும் என்று சொன்னார். எங்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
விருந்தினரைப் போற்றுவதில் தமிழருக்கு இணை இல்லை என்று சொல்கிறோம். அது எந்த அளவிற்கு உண்மை என்பது நமக்குத் தெரியும். ஊருக்குத் திரும்புகையில் அந்தப் பாட்டியைச் சந்தித்து, நீங்கள் எங்கள் ஊருக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். அவர் இங்கே வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரவழைத்தேன். வந்தார்.
என் சொந்த ஊரில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தேன். அந்தப் பாட்டிதான் சிறப்பு விருந்தினர். விளையாட்டுப் போட்டிகளைப் பார்த்தார் பரிசுகள் வழங்கச் செய்தோம். பல கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காண்பித்தோம். எங்கள் ஊரில் எல்லோரும் அவரை அந்த அளவுக்குச் சிறப்பாக வரவேற்றதைப் பார்த்து, என்னை ஒரு மகாராணி போலக் கொண்டாடுகின்றீர்களே? I am like a princess இதை எங்கள் ஊரில் நான் நினைத்தே பார்க்க முடியாது என்று சொல்லி வியந்து போனார்.
அவரது நான்கு நாள்கள் வருகை முழுமையும் காணொளிகள் பதிவு செய்து என் முகநூல் தளத்தில் பதிவு செய்து இருக்கின்றேன்.
அருணகிரி
அப்படியா? மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற நிகழ்வுகள்தான் தமிழ்நாட்டின் சுற்றுலாவை வளர்க்கும். கேன்ஸ் திரைப்பட விழா பற்றிச் சொல்லுங்கள்.
ராஜ்குமார்
அது உலக அளவில் நடைபெறுகின்ற ஒரு பெரிய திரைப்பட விழா. அதுபற்றிச் சொல்லுவதற்கு நிறைய இருக்கின்றது. அதையும் கடந்து, வேறு சில செய்திகளைச் சொல்ல விரும்புகின்றேன்.
குறிப்பாக கேன்ஸ் கடற்கரை. அங்கே மது ஆறாக ஓடுகிறது. எங்கெங்கு பார்த்தாலும் பாட்டில்கள்தான். ஒரு செங்கல் சுவரைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அதுபோல அங்கே பாட்டில்களை அடுக்கி வைத்து இருக்கின்றார்கள். உலகின் அத்தனை நாட்டு மது வகைகளும் அங்கே கிடைக்கின்றன.
பல நாட்டு மக்கள் அங்கே குவிந்து இருக்கின்றார்கள்.
அருணகிரி
அமெரிக்காவில் எந்தக் கடைக்குப் போனாலும் பாட்டில்கள்தான் கண்ணில்படுகின்றன. ஆப்பிரிக்காவில் பெட்டிக் கடைகளிலும் கூட மது விற்கின்றார்கள்.
இங்கே தமிழ்நாட்டில்தான் அது ஏதோ பெரிய பாவம் போலச் சிலர் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.
ராஜ்குமார்.
ஃபிரான்ஸ் கடற்கரையில், மதுக் கடலுக்கு நடுவில் நீந்தினாலும்கூட, நான் ஒரு சொட்டு மது அருந்தவில்லை.
அருணகிரி
நானும் அப்படித்தான்.
ராஜ்குமார்
பொதுமக்கள் பார்வையில் திரைத்துறையைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள்? இதன் பின்னடைவுகள் என்ன?
புகை, மது, பெண்கள். நான் இதில் சமரசம் செய்து கொண்டது இல்லை. என் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகையை ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அழைக்க முயன்றேன். அவரது எண் என்னிடம் இல்லை. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
படம் வெளியான பிறகு அவர் அழைத்தார். என்ன சார் என்னைக் கூடக் கூப்பிடவில்லையே? என்றார். உங்கள் அலைபேசி எண் என்னிடம் இல்லை அம்மா. நீங்களாவது அழைத்துப் பேசி இருக்கலாமே? என்றேன். சார் நீங்கள் தேவை இல்லாமல் எதுவும் பேச மாட்டீர்கள். உங்களிடம் பேசவே பயமாக இருக்கின்றது என்றார்.
வான் ஊர்திகளில் கூட பல வகையான மது பரிமாறுகின்றார்கள். நமது நண்பர்களின் வாழ்க்கையைப் பார்க்கின்றோம். மதுப் பழக்கத்தால் வாழ்க்கையை நல்ல உடலை இழந்து விட்டார்கள். எனவே நாம் ஒருபோதும் தடுமாறி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.
கேன்ஸ் திரைப்பட விழா சிறப்பாக நடைபெற்றது. அங்கே நான் தெரிந்து கொண்டது என்ன? நமது திரைப்படங்களில் ஒரே ஆள் பத்துப் பேரை அடித்து வீழ்த்துவது, வண்ண வண்ண உடைகளை அணிந்து கொண்டு கூட்டமாக ஆடுவது எனக் காண்பித்துக்கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் அங்கே மக்களின் வாழ்க்கை, பண்பாடு, உணவு, உடையை உபசரிப்பை, அந்த நாட்டின் இயற்கை அழகை எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துக் கொண்டாடுகிறார்கள்.
அதுதான், பயாஸ்கோப் என்ற வாழ்வியல் படத்தை ஆக்குவதற்கு எனக்குத் தூண்டுகோலாக அமைந்தது.
அந்த வகையில் கேன்ஸ் திரைப்பட விழா மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
அருணகிரி
அமெரிக்கா போனீர்களா?
ராஜ்குமார்
இதுவரை நான்கு முறை சென்று வந்தேன்.
அருணகிரி
எதற்காகப் போனீர்கள்?
ராஜ்குமார்
இப்போது நான் இயக்குகின்ற ஒன் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி முழுமையும் அமெரிக்காவில்தான் படம் பிடித்து இருக்கின்றேன்.
அருணகிரி
அமெரிக்காவில் விடுதிகளில் தங்கிச் சுற்றிப் பார்க்கக் கட்டுப்படியாகாது. எங்கே தங்கினீர்கள்? நண்பர்கள் இருக்கின்றார்களா? எங்கெல்லாம் போனீர்கள். ‘
ராஜ்குமார்
நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். வீடுகளில்தான் தங்கினேன். சியாட்டில் ,சிகாகோ, நியூ யார்க், நியூ ஜெர்சி, மின்னசோட்டா, விஸ்கான்சின், லாஸ் வேகாஸ் எல்லாம் போயிருக்கின்றேன். அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் சுற்றி இருக்கின்றேன். நம் ஊரில் பேருந்துகளில் தொடரிகளில் துண்டு போட்டு இடம் பிடிப்பது போன்ற நெருக்கடிகள் அமெரிக்காவில் இல்லை.
அங்கே பெரும்பாலும் எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கின்றது. அதுதான் வியக்க வைக்கின்றது-
இனி ஆண்டுக்கு ஒருமுறை போக வேண்டும் எனத் தீர்மானித்து இருக்கின்றேன்.
நின்ற இடத்தில் ஒரு கோவில், வீட்டுக்கு உள்ளே கோவில், சட்டைப் பையில் ஒரு சாமி படம், கையில் ஒரு கயிறு,
,கழுத்தில் ஒரு சாமி டாலர், வண்டியில் சாமிப் படம், காரில் சாமிப் படம் இறங்கிய உடனே, தெருவில் ஒரு பிள்ளையார், வீட்டில் ஒரு பிள்ளையார், கதவில் ஒரு சாமி படம்… இவை எதுவும் அமெரிக்காவில் இல்லை.
இவை எல்லாம் பொம்மைகள் என்று இப்போது நீங்கள் எழுதி வருகின்றீர்கள். அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அருணகிரி
ஆம் இப்போது நிறையப் பேர் அப்படி எழுதத் தொடங்கி விட்டார்கள். திராவிடர் கழகத் தோழர்களும் கூட அப்படியே எழுதுகின்றார்கள்.
ராஜ்குமார்
இப்படி நாம் பார்க்கின்ற இடம் எல்லாம் பொம்மைகளுக்கு அடிமையாக இருக்கின்றோம்.
24 மணி நேரமும் கடவுளைப் பற்றிய சிந்தனையில் வாழ்கின்ற நாடு இந்தியா மட்டும்தான். பேருந்தில் போய்க்கொண்டு இருந்தால் கூட வழியில் ஒரு பொம்மையைப் பார்த்துக் கும்பிடு போடுகிறான்.
எது நடந்தாலும் அதற்குக் கடவுள்தான் காரணம் என்கிறான்.
அருணகிரி
இந்த உலகம் 460 கோடி ஆண்டுகளாகச் சுற்றுகிறது. இந்து கிறித்து முஸ்லிம் எல்லாக் கடவுளையும் மனிதன் படைத்து 2000 ஆண்டுகள்தான் ஆகின்றன.
ராஜ்குமார்
அகமதாபாத்தில் ஏர் இந்தியா வான் ஊர்தி கீழே விழுந்த து. 240 பேர் இறந்து போனார்கள். ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். கடவுள் அருளால் உயிர் தப்பினேன் என்கிறார்.
அட முட்டாப் பயலே, மீதி 240 பேரைக் கொன்றது யார் அருள்? எத்தனையோ குழந்தைகள் கருகிப் போய்விட்டதே, யார் அருள்? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இப்படி நமது மூளை முழுக்கக் கடவுளை நிரப்பி வைத்து இருக்கின்றார்கள்.
அடுத்தது காமம் சார்ந்த பார்வை. 24 மணி நேரமும் அதைப் பற்றிய தேடலும் சிந்தனையுமாகவே இருக்கின்றார்கள். இப்படி மேற்கு நாடுகளில் பார்க்க முடியாது- விலங்குகளுக்கு எப்பொழுது பசிக்கின்றதோ அப்பொழுது மட்டுமே சாப்பிடுகின்றன. அதேபோல தேவையான நேரத்தில் இனப்பெருக்கத்திற்காக இணை சேருகின்றன. பறவைகளும் அப்படித்தான். கொள்கின்றன.
மனிதன் மட்டும்தான், 24 மணி நேரமும் காமத்தைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கின்றான்.
அதுகுறித்த புரிதல் இல்லை. கடவுள் காமம் இந்த இரண்டும்தான் இந்தியாவின் பெருங்கேடாக நான் பார்க்கின்றேன்.
கேன்ஸ் கடற்கரையில், எல்லோரும் ஆகக் குறைந்த உடைகளை அணிந்து கொண்டு உலவுகின்றார்கள். அங்கே காமப் பார்வை எதுவும் இல்லை. .பாலியல் துன்புறுத்தல்கள் இல்லை. குளிர் நாடுகளில் அவர்களின் தோலுக்கு விட்டமின் டி தேவை. அது சூரிய ஒளியில்தான் நிறைய கிடைக்கின்றது.
எனவே, அவர்கள் கடற்கரைகளில் படுத்துக் கிடக்கின்றார்கள். அது ஒரு மருத்துவம்.
ஆனால் இங்கே அப்படி இல்லை. ஒரு பெண் குறைந்த உடை அணிந்து கொண்டு போனால், அதை உற்று உற்றுப் பார்க்கிறான். கேலி பேசுகிறான். பாலியல் துன்புறுத்தல் செய்கிறான். கேட்டால், நீ சரியாக உடை அணியவில்லை என்கிறான். இவை எல்லாம் மூடத்தனம். 33 கோடி கடவுள் பொம்மைகள் இருந்து என்ன பயன்?
இதை எல்லாம் அது கற்றுத்தரவில்லையே?
கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத மேற்கு நாடுகள் போல நமது நாடும் வளர வேண்டும் என்கிற பார்வை, அங்கே போய்ப் பார்க்கும்பொழுதுதான் நமக்கு ஏற்படுகின்றது.
ஒரு சுற்றுலா என்றால் அந்த நாட்டின் இயற்கை அழகைப் பார்க்கின்றோம். மலைகளைப் பார்க்கின்றோம் மரங்களைப் பார்ரக்கின்றோம், ஆறுகளைப் பார்க்கின்றோம் அருவிகளைப் பார்க்கின்றோம்.
ஒரு படைப்பாளியாக ஒரு காட்சியை உரு ஆக்குகின்றோம். அதை மக்களுக்குத் தருகின்றோம் என்கிறபோது, பிற நாடுகள் உடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கின்றோம். நாம் இங்கே கற்பனை செய்து கொண்டு இருப்பதை அங்கே அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
அதனால்தான், இந்தியாவில் சொத்துகளை எல்லாம் விற்று முகவர்களுக்குக் காசு கொடுத்து,
பல நாடுகள் வழியாக, கழுதைப் பாதை வழியாக ஐரோப்பாவுக்கு அமெரிக்காவுக்கு உள்ளே நுழைகின்றார்கள் என்றால், நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கின்றோம்.
அப்படிப் போகும்பொழுது உணவு கிடையாது தண்ணீர் கிடையாது, ,பெட்டிகளில் அடைத்துக் கொண்டு போகின்றார்கள். மூடைகளில் கட்டி, சரக்கு ஊர்திகளில் சரக்குகளுக்கு நடுவே போட்டுக் கொண்டு போகின்றார்கள். உயிருக்கு உறுதி இல்லை.
இப்படி என்ன ஆனாலும் பரவாயில்லை..இந்தியாவில் இருந்து நான் தப்பித்துப் போக வேண்டும் என்று முயற்சிக்கின்றானே, இந்த நாடு இந்த மக்களை ஏன் இப்படி வைத்து இருக்கின்றது?
அருணகிரி
இவை அனைத்திற்கும் கடவுள் பொம்மைகள்தான் காரணம். அதுவும் வடநாட்டில்தான். தமிழ்நாட்டு இளைஞர்கள் பொறிஇயல் மற்றும் உயர்கல்வி கற்றுப் போகின்றார்கள்.
ராஜ்குமார்
ஆம். அந்த வகையில் தமிழ்நாட்டை நினைத்துப் பெருமையாக இருக்கின்றது. அது மட்டும் அல்ல. அமெரிக்கா ஐரோப்பாவில் எத்தனையோ நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.
அருணகிரி
அது மட்டும் அல்ல. ஏகப்பட்ட சிறு நிறுவனங்களை நடத்துகின்றார்கள். உணவுக் கடைகளை நடத்துகின்றார்கள்.
அப்படி ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தில் நான் சந்தித்த பல நண்பர்கள் கணினிப் பணிக்காக அமெரிக்காவுக்கு வந்து இப்போது வேறு தொழில்களுக்கு மாறி இருக்கின்றார்கள். ஒருவர் நர்சரி வைத்து இருப்பதாகச் சொன்னார்.
ராஜ்குமார்
ஆம் அப்படி என் நண்பர்களும் வேறு தொழிலுக்கு மாறி இருக்கின்றார்கள். அதை எல்லாம் பார்க்கும்போது ஒரு படைப்பாளியாக எனக்கு நிறைய செய்திகள் கிடைக்கின்றன. அதை எல்லாம் இந்த மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்
அருணகிரி
இதை எல்லாம் உங்கள் முகநூல் தளத்தில் எழுதுகின்றீர்களா?
ராஜ்குமார்
ஓரளவு பதிவு செய்து இருக்கின்றேன். காணொளிகள் போட்டு இருக்கின்றேன். அங்கே ஒரு வீட்டை எப்படிக் கட்டுகின்றார்கள் என்பதைப் பதிவு செய்து இருக்கின்றேன். எல்லாமே மரம்தான். அதுவும் மிகவும் உயர்ந்த தரத்தில் இருக்கின்றது.
நீங்கள் சொல்வது போல அவர்களுடைய இறைச்சி உணவுகளைக் குறிப்பிட்டு இருக்கின்றேன்.
சாக்லேட் கட்டிகளைப் போல இறைச்சிகளை அழகாக வெட்டி அடுக்கி வைத்து இருக்கின்றார்கள் என்பதைச் சொல்லுகிறேன்.
மக்களின் உணர்வுகளுக்கு அரசுகள் மதிப்பு அளிக்கின்றன. எனவே, கருத்து உரிமை இருக்கின்றது-
நான் ஒரு இயக்குநர் என்கிறவகையில் அதற்கு ஒரு விசா இருக்கின்றது. அதை வைத்து அமெரிக்காவில் குடி உரிமை கூடப் பெற முடியும் என்று என் நண்பர்கள் சொன்னார்கள்.
அதை நான் விரும்பவில்லை. எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை. ஐரோப்பாவில் இருக்கின்றவர்கள் கூட அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கின்றார்கள். அமெரிக்காவுக்குப் போனால், ஒரே நாளில் என் வாழ்க்கை தலைகீழாக ஆகிவிடும். வசதியான வாழ்க்கை கிடைத்துவிடும். என் மனைவி, பிள்ளைகள் வசதியாக வாழலாம்.
ஆனால், நான் பிறந்த நாட்டுக்கு என் மக்களுக்கு என் கடமையை நான் செய்தாக வேண்டும்.
இங்கே உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைய என் மக்களை முன்னேற்ற நான் உழைக்க வேண்டும். அமெரிக்காவில் தெரிந்து கொண்ட செய்திகளை இங்கே சொல்லுகின்றேன்.
அயல்நாடுகளில் சுற்றுலா இடங்களைப் பார்ப்பதைக் கடைசியாக வைத்துக் கொள்வேன். மக்களைத்தான் பார்ப்பேன். .
அருணகிரி
நானும் அப்படித்தான். நிறையப் பேருடன் பேசுவேன். அப்போது கிடைக்கின்ற செய்திகளை உடனுக்கு உடன் எழுதிப் பதிவு செய்து விடுகிறேன். காணொளிகள் எடுத்துக் கொள்கின்றேன். அப்படித்தான் கடந்த 50 நாள்கள் ஜப்பான் அமெரிக்கப் பயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதி இருக்கின்றேன்.
ராஜ்குமார்
ஆம். அவை எல்லாவற்றையும் தொடர்ந்து பார்த்தேன். மிகச் சிறப்பாக இருந்தன. நான் என்றைக்குக் கேமராவைக் கையில் எடுத்தேனோ, அன்று முதல் இன்றுவரை நிறையப் பதிவுகள் செய்து இருக்கின்றேன். முற்போக்குச் சிந்தனைகளைப் பேசுகின்றேன்.
இப்போது நாம் உரையாடிக்கொண்டு இருக்கின்ற இந்த வேளையிலும் கூட, நான் இயக்கிய வெங்காயம் படம் கே டிவியில் காண்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள். என் கருத்துகள் பேசப்படுகின்றன.
அது போதும் எனக்கு.
பதிவு
உலகப் பயணி அருணகிரி
5.11.2025
