நகரத்திலிருந்து ஒரு சிக்கல் காரணமாக தன் பூர்வீக மலைகிராமத்துக்கு மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனுடன் செல்கிறார் நாயகன் ஹரிஷ் ஓரி.போன இடத்தில்,தன் வர்த்தக நோக்கத்துக்காக அந்தக் கிராமத்தையே காலி செய்யத் துடிக்கிறார் முன்னாள் ஊர்த்தலைவர்.அதையறிந்து அதை முறியடிக்கும் முயற்சியில் மனைவியும் கணவனும் இறங்குகிறார்கள்.அவர்கள் முயற்சி வென்றதா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் வெள்ள குதிர.

நாயகன் ஹரிஷ் ஓரி, மலைகிராம மனிதராகவே மாறியிருக்கிறார். எதிர்மறை சிந்தனையை உள்ளே வைத்துக் கொண்டு அவர் செய்யும் செயல்களால் படம் சுறுசுறுப்பாகிறது.

மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ்,தமிழுக்குப் புதிது என்றாலும் பிறமொழிகளில் நடித்த அனுபவம் உள்ளவர். துணிச்சல்கார கிராமத்துப் பெண்களின் பிரதிநிதியாக இருக்கிறார்.அமைதி,அன்பு, கோபம் ஆகிய எல்லா நேரங்களிலும் கவர்கிற மாதிரி நடித்திருக்கிறார்.

வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் உதிரி விஜயகுமார், அதற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.எதிர்த்துக் கெடுப்பதை விட அடுத்துக் கெடுப்பதே சிறந்தது என்கிற அவர் செயல்பாடு ஒவ்வொருவருக்கும் நெருக்கமானதாக இருக்கும்.

ரெஜின் ரோஸ், ஜெயலட்சுமி, என்.எஸ்.டி.அறிவு ஆகியோர் கதாபாத்திரங்களும் அவற்றில் அவர்களுடைய நடிப்பும் நன்று.

ஒளிப்பதிவாளர் ராம்தேவ் உழைப்பில்,எவ்விதப் பூச்சுமில்லாமல் கிராமத்துக்காட்சிகள் அப்படியே எதார்த்தமாகப் பதிவாகியிருக்கின்றன.

பரத் ஆசீவகன் பின்னணி இசையில் மலைகிராம மக்கள் வாழ்வியலும் கலந்திருக்கிறது.பாடல்கள் இல்லாதது குறை.

படத்தொகுப்பாளர்கள் பிரதீப் மற்றும் சரண்ராஜ் செந்தில்குமார் ஆகியோர் படத்தில் எவ்வித சலிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகப் பார்த்துப் பார்த்து வேலை செய்திருக்கிறார்கள்.அவர்களை மீறி சில இடங்கள் தொய்வடைகின்றன.

எங்கள் ஊருக்கு மேல் இருக்கும் மலைப்பகுதியில் ரோடு இல்லாமல் ஜனங்கள் படும் கஷ்டத்தை வைத்து ஒரு படம் பண்ணு என்று தயாரிப்பாளரும் நடிகருமான ஹரிஷ் ஓரி கேட்கையில், அங்கு ஒரு மாதம் தங்கி அவர்கள் படும்பாட்டைப் பார்த்து படத்தை நான் இயக்கி இருக்கிறேன் என்று சொல்லியிருந்தார் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்.

அவ்வளவு கஷ்டப்பட்டாலும் தங்கள் ஊர்மீதும் அந்த மண்மீதும் அவர்கள் கொண்டிருக்கும் பாசம் கண்கலங்க வைக்கிறது.தூயஅன்பு எதையும் சாதிக்கும் என்று சொல்லியிருப்பது வெள்ளக் குதிரயின் பலம்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.