நாட்டில் நடக்கும் மோசடிகள் பலவிதம்.அதுவும் வரவு, செலவு,வர்த்தகம் ஆகிய எல்லாம் இணையதளம் வாயிலாக நடக்கிற இக்காலகட்டத்தில் அதிலும் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன.அவற்றில் முக்கியமான நான்கு வித மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் படம் நிர்வாகம் பொறுப்பல்ல.
இப்படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் கார்த்தீஸ்வரன்.அவர் பல வழிகளில் மோசடி செய்து பெரும்பணம் திரட்டுகிறார்.அந்தப்பணத்தோடு வெளிநாடு செல்லத் திட்டமிடும்போது காவல்துறையிடம் சிக்குகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறது திரைக்கதை.
பல்வேறு மோசடிகள் செய்பவராக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன்,அதற்கேற்ப பல்வேறு தோற்றங்களில் உலா வருகிறார்.இந்தப் பூனையும் பால் குடிக்குமா? எனும் பழஞ்சொல்லுக்கேற்ப நடித்திருக்கிறார்.சில காட்சிகள் மிகையாகத் தெரிந்தாலும் நடக்கும் நிகழ்வுகளால் அது இயல்பாகிறது.
காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி, அதற்கேற்ற கம்பீரத்துடன் வ்ருகிறார்.நடிப்பிலும் குறைவில்லை.
கார்த்தீஸ்வரனின் குழுவினராக நடித்திருக்கும் ஆதவன், லிவிங்ஸ்டன்,இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் ஆகியோர் அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு உண்மையாக நடித்திருக்கிறார்கள்.அது அவர்களுக்கு மட்டுமின்றி படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.
என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவில் படம் வண்ணமயமாக இருக்கிறது.காட்சிகள் ஏனோ தானோவென இல்லாமல் எதார்த்தமாக அமைந்திருக்கிறது.இது திரைக்கதைக்குப் பெரும் உதவியாகவும் இருக்கிறது.
உற்சாகமாக இசையமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.அதனால் துள்ளல் பாடல்கள் கொடுத்து ஆட்டம் போட வைத்திருக்கிறார்.பின்னணி இசையிலும் கூடுதல் உற்சாகம் காட்டியிருப்பது சில இடங்களில் மிகையாகியிருக்கிறது.
பாடலாசிரியர் கருணாகரனின் பாடல் வரிகள் கலகலப்பாகவும், கருத்துமாக அமைந்து இரசிக்க வைத்திருக்கின்றன.
படத்தொகுப்பாளர் சஜின்.சி, இயக்குநர் எண்ணத்தை முழுமையாக உள்வாங்கி அதை அப்படியே பார்வையாளர்களுக்குக் கடத்திவிட வேண்டும் என்கிற பொறுப்புடன் தொகுத்திருக்கிறார்.
பல்வேறு மோசடிகளைக் காட்டி, அதை எப்படிச் செய்கிறார்கள்? என்பதை மட்டும் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு நில்லாமல் அவற்றிலிருந்து சாமானியர்கள் எவ்வாறு தப்புவது? என்கிற பாடத்தையும் நடத்தியிருக்கிறார்.கையில் இருக்கும் கைபேசி மூலமே எல்லாவற்றையும் நிகழ்த்தலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்.
அவருடைய நடிப்பு, பட உருவாக்கம் ஆகியனவற்றில் சிற் சில குறைகள் இருப்பினும் அவர் சொல்லியிருக்கும் கருத்துகள் அப்படியே மக்களைச் சென்று சேருகிறது.அது அவருடைய பலமாகியிருக்கிறது.
– இளையவன்
