கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில், அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 45.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படமான ‘45’ படத்தின் தமிழ்ப்பதிப்பு 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது.இதன்மூலம் அடுத்த ஆண்டு வெளியாகும் முதல்படம் என்கிற பெருமையை இப்படம் பெறுகிறது.

சுராஜ் புரொடக்சன் (Suraj Production) சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு டிசம்பர் 21 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் தமிழின் முன்னணி நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இவ்விழாவில்…

தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி பேசியதாவது…

படத்தின் டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிவாண்ணா, ராஜ் பி.ஷெட்டி சூப்பராக நடித்துள்ளனர், உபேந்திரா கலக்கியுள்ளார். அர்ஜுன் ஜான்யா இப்படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளார். படத்தைப் பற்றி என்னைவிட அவர்கள்தான் சொல்ல வேண்டும். இங்கு படத்தை வாழ்த்த வந்துள்ள விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…

சிவாண்ணா அவர்களின் இரசிகன் நான்.அவர் மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர்.ஆனால் அதை வெளியில் எங்கும் காட்டிக்கொள்ள மாட்டார். அவர் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.அவருக்கு கேன்சர் வந்தது.இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எல்லோரும் உடைந்து விடுவோம், குடும்பத்தோடு இருக்க ஆசைப்படுவோம். ஆனால் சிவாண்ணா தயாரிப்பாளரை அழைத்து, இன்னும் மீதமுள்ள ஷூட்டிங்கை முடித்துவிடுங்கள், டப்பிங் எடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.அவரின் அர்ப்பணிப்பிற்கும் நேர்மைக்கும் தலை வணங்குகிறேன்.
உபேந்திரா அவர்களுடன் ஒரு படத்தில் வேலை செய்துள்ளேன்.அவர் இயக்கத்திற்கு நான் இரசிகன். ராஜ் பி.ஷெட்டியின் சமீபத்திய படங்கள் அற்புதமாக இருக்கின்றன.அவர் தமிழில் படம் செய்யவேண்டும்.20 வருடம் இசையமைப்பாளராக இருந்த அர்ஜுன் ஜான்யா படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார்.டிரெய்லர் பார்த்தேன்,அட்டகாசமாக இருந்தது.நிறைய சிஜி இருந்தது. தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள். நன்றி என்றார்.

இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா பேசியதாவது…

ஒரு இசையமைப்பாளராக இருந்து இயக்குநராக ஆனால் என்ன ஆகும் எனப் புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி இங்கு வந்து வாழ்த்தியதற்கு என் நன்றி. டாக்டர் சிவராஜ்குமார் அண்ணா சொன்னதால்தான் நான் இன்று இப்படத்தை இயக்கினேன். நான் இயக்குநராகக் காரணம் அவர்தான். அவருக்கு என் நன்றி. இயக்குநர் சக்கரவர்த்தி உபேந்திரா அவர்களின் இரசிகன் நான். அவர் என்னை நம்பி கதை கேட்டு, இதில் ஒரு பாத்திரத்தில் அற்புதமாக நடித்துத் தந்தார்.
ராஜ் பி.ஷெட்டி கர்நாடகாவின் பெருமை. அவர் இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி முழுமையாக நம்பி இப்படத்தைத் தாங்கியுள்ளார். அவருக்கு என் நன்றிகள். நான் ஒரு இரசிகனாகத்தான் இந்த மூன்று பேரையும் இயக்கியிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். நன்றி என்றார்.

நடிகர் வின்செண்ட் அசோகன் பேசியதாவது…

என் நீண்டகால நெருங்கிய நண்பன் சிவராஜ்குமார். அவருக்காகத்தான் நான் இந்த விழாவிற்கு வந்துள்ளேன். அவர் இரசிகன் நான். அவருடன் படம் நடித்துள்ளேன். ஒரு நண்பரை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் சிவராஜ்குமார் தான். என் அப்பா இறந்தபோது அவர் படம் நடித்து பெரிய ஹீரோ.ஆனால் எனக்காக ஓடோடி வந்தார். அவர் மனதுக்கு நன்றி.
உபேந்திரா அவர்களின் படங்களுக்கு நான் இரசிகன். அர்ஜுன் ஜான்யா படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

நடிகர் ராஜ் பி.ஷெட்டி பேசியதாவது…

தமிழ் இரசிகர்களின் அன்புக்கு நன்றி. தமிழ்மக்கள் கலாச்சாரத்தில் சினிமா கலந்துள்ளது. அவர்கள் சினிமாவை கொண்டாடுகிறார்கள். சிவாண்ணாவை ஜெயிலர் படத்திலும், உபேந்திராவை கூலி படத்திலும் கொண்டாடினார்கள். நல்ல சினிமா இங்கு கொண்டாடப்படும். தமிழ் சினிமா கர்நாடகாவிலும் கொண்டாடப்படுகிறது.
அர்ஜுன்ஜான்யா மூன்று வருடம் இப்படத்திற்காக உழைத்துள்ளார். நானும் இயக்குநர்தான்; ஆனால் அவர் உழைப்பைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன். தயாரிப்பாளர் இப்படத்தைத் தோள்மீது தாங்கியுள்ளார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி என்றார்.

நடிகர் உபேந்திரா பேசியதாவது…..

நான் சிவாண்ணா பேச்சைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். விஜய்ஆண்டனி இங்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. அவருடன் நான் வேலை பார்த்துள்ளேன்.அவருடைய வளர்ச்சி எனக்குப் பெரிய மகிழ்ச்சி. இயக்குநர் அர்ஜுன் ஜான்யா இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். தயாரிப்பாளர் இப்படத்தில் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார்.
ராஜ் பி.ஷெட்டி அற்புதமாக நடித்துள்ளார். சிவாண்ணா எனக்கு ஓம் படம் மூலம் பிரேக் தந்தவர். இதில் கலக்கியுள்ளார். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி என்றார்.

நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது……

நான் விஜய்ஆண்டனி இரசிகன். அவர் சினிமாவில் எல்லா வேலையும் செய்துள்ளார். அவரின் பிச்சைக்காரன் படத்தின் ரீமேக் வாய்ப்பு எனக்கு வந்தது.ஆனால் அதை மிஸ் செய்துவிட்டேன்.மீண்டும் அவரின் வேறு படத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன்.
வின்செண்ட் சின்னவயதிலிருந்து என் நண்பர்.அவர் என் சகோதரர் போலத்தான்.ரமேஷ் ரெட்டிக்கு என் நன்றி.அறிமுக இயக்குநருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்துள்ளார்.நான்தான் முதலில் கதை கேட்டேன்.என்னை நம்பி பெரிய செலவு செய்துள்ளார்.
அர்ஜுன் ஜான்யா இப்படத்தில் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார்.என்னிடம் கதை சொன்னபோது எல்லா கேரக்டர்களையும் நடித்தே காட்டிவிட்டார்.இப்போது இயக்குநராகியுள்ளார்.விரைவில் நடிகராக ஆகிவிடுவார்.
உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை.அவர்தான் எனக்கு பிரேக் தந்தார்.அவர் அட்டகாசமான கலைஞன்.ராஜ் பி.ஷெட்டி சமீபமாக கலக்கி வருகிறார்.அவர் நல்ல இயக்குநர்,நல்ல எழுத்தாளர்.எங்கள் மூன்று பேரின் கெமிஸ்ட்ரி படத்தில் அட்டகாசமாக வந்துள்ளது. இது ஒரு தனி உலகம்.படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.