சென்னையில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் தினேஷ், திருமணம் செய்ய எண்ணி ஒரு மணப்பெண்ணைத் தேடிப் பிடித்து பழகுகிறார். வருங்கால மனைவியின் ஆசைக்காக ஒரு கறுப்பு பல்சர் (பைக்) துள்ளுந்தை வாங்குகிறார்.அதை வாங்கியதிலிருந்து பல மர்மமான நிகழ்வுகள் நடக்கின்றன.அதற்கு, அந்தத் துள்ளுந்தில் ஒரு மனிதனின் ஆவி புகுந்திருக்கிறது என்றும் அது யாருடைய ஆவி? எதனால் துள்ளுந்துக்குள் வந்தது? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் கறுப்பு பல்சர்.

நாயகனாக நடித்திருக்கும் தினேஷுக்கு இரட்டை வேடங்கள்.சென்னையில் நடுத்தரக் குடும்ப இளைஞராகவும் மதுரையில் ஏறுதழுவும் வீரராகவும் நடித்திருக்கிறார்.அமைதி மற்றும் அன்பான சென்னைவாசியாக ஆக்ரோசமான மதுரை வீரனாக ஆகிய இரண்டு வேடங்களிலும் மிகவும் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

நாயகனுக்கு இரட்டை வேடம் என்பதால் நாயகிகள் இருவர் இருக்கின்றனர். சென்னை தினேஷுக்கு ரேஷ்மா வெங்கட்,மதுரை தினேஷுக்கு மதுனிகா ஆகியோர் இணையராக நடித்திருக்கிறார்கள்.இருவரையும் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களும் பயன்பட்டிருக்கிறார்கள்.

எதிர்நாயகனாக நடித்திருக்கும் அர்ஜய் கொடுத்த வேலையைக் குறைவின்றிச் செய்திருக்கிறார்.சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் வேடத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான், அவரது அடியாளாக நடித்திருக்கும் கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.காவல்துறை ஆய்வாளராக வரும் சரவண சுப்பையாவின் கதாபாத்திரம் கதைக்குப் பலம்.

பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.சென்னை வாழ்க்கை, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆகியனவற்றை எதார்த்தம் மீறாமல் காட்சிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்.உண்மையான ஏறுதழுவுதல் காட்சிகளையும் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.

இன்பாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை கதைக்களத்துக்குச் சரியான பின்புலமாக அமைந்து படத்துக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் சசிதக்சா, இயக்குநரின் எண்ணம் சிதையாமலும் வெகுமக்களின் ஆர்வத்த்தைத் தூண்டும் வகையிலும் படத்தைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.முரளி கிருஷ்.ஏறுதழுவுதலின் பின்னணியில் அடர்த்தியாக அடர்ந்திருக்கும் சாதியச் சிக்கலைப் பற்றிப் பேச முனைந்திருக்கிறார்.அதற்காக ஆவியை துணைக்கழைத்து அதை ஓர் இரும்பு ஊர்தியில் ஏற்றி திரைக்கதை அமைத்திருக்கிறார்.அந்த உத்தி, இந்தக் கதை மற்றும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து ஆகியனவற்றை எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கொண்டு சேர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.