க்ராணி (Granny) என்பது ஆங்கிலத்தில் பாட்டியைக் குறிக்கும் (அம்மம்மா/அப்பம்மா) சொல்.அதை இந்தப்படத்துக்குப் பெயராக வைக்கக் காரணம், இலண்டனிலிருந்து வரும் குடும்பம்,தங்கள் வீட்டுவாசலில் மயங்கிக் கிடக்கும் ஒரு பாட்டிக்கு உதவுகிறார்கள்.அந்தப் பாட்டியை மையப்படுத்தியே கதை இருப்பதுதான்.
சந்திரமுகி அரண்மனை போல் ஒரு வீட்டுக்கு இலண்டனில் இருந்து வரும் ஒரு குடும்பம் வருகிறது.கணவன், மனைவி, இரு குழந்தைகள் கொண்ட அக்குடும்பத்துக்கு அந்த வீட்டுக்கு வந்தவுடன் பல சிக்கல்கள். உயிராபத்துகள்.அவை எதனா? அவற்றின் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் க்ராணி படம்.
இலண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து தங்கள் பூர்வீக வீட்டில் குடியேறும் குடும்பத்தலைவராக அனந்து நாக்,அவரது மனைவியாக அபர்ணா, ஆண் குழந்தையாக மாஸ்டர் கன்ஷ்யாம், பெண் குழந்தையாக பேபி இந்திரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.வீட்டைப் புனரமைக்கும் நேரத்தில், மனித நேயத்தோடு அவர்கள் செய்யும் செயல் எப்படியெல்லாம் அவர்களைப் பாதிக்கிறது? என்பதைக் காட்டி பதற வைத்திருக்கிறார்கள்.அவர்களும் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
பாட்டியாக வடிவுக்கரசி நடித்திருக்கிறார்.எதிர்மறைக் கதாபாத்திரம் அவருக்குக் கைவந்த கலை. இந்தப்படத்திலும் ஒச்சாயி என்கிற பெயருடன் மாறுபட்ட தோற்றத்துடன் சிறப்பாக நடித்து அனைவரையும் பயப்படச் செய்திருக்கிறார்.காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் திலீபன், சிங்கம்புலி ஆகியோர் நடிப்பு நன்று.ஊர்த்தலைவராக வரும் கஜராஜ் பொருத்தம்.
மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.ஒளிப்பதிவாளர்களுக்குச் சவால்விடும் திரைக்கதை.அதை தெம்பாக ஏற்றுக் கொண்டு திறம்படச் செய்திருக்கிறார்.
டாக்டர் செல்லைய்யா பாண்டியன் இசையில் கு.கார்த்திக்கின் எழுத்தில் பாடல்கள் கேட்டு இரசிக்கும் இரகம். பின்னணி இசை கூடுதல் பலம்.
படத்தை வேகமாகக் கொண்டு செல்லவேண்டும் என உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் எம்.எஸ்.கோபி.அவருடைய எண்ணம் ஈடேறியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் விஜயகுமரன், பழங்காலக் கதைகளை நினைவுபடுத்துவது போன்ற கதைக்களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அதில்,என்றும் இளமையாக இருக்க இதைச் செய்யவேண்டும் என்றொரு விசயத்தைச் சொல்லி அதை மையமாக வைத்து திகிலூட்டும் திரைக்கதை அமைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார்.கதைக்குப் பொருத்தமாக நடிகர்களையும் தேர்வு செய்திருப்பது அவருடைய பலம்.
– இளையவன்
