கொரோனா பெருந்தொற்று காரணமாக,அதற்குமுன் கற்பனை செய்துகூடப் பார்த்திராத வகையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த காலகட்டத்தை வைத்துக் கொண்டு ஒரு சமுதாயச் சிக்கலைப் பேசியிருக்கும் படம் லாக்டவுன்.

நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன், தோழியின் அழைப்பை ஏற்று ஒரு மதுவிருந்துக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து மகிழ்கிறார்.அந்த மகிழ்ச்சி பெரும் துயருக்குக் கொண்டு செல்லும் பாதையாக மாறிவிடுகிறது.மதுமயக்கத்தில் அவருக்குத் தெரியாமலேயே கர்ப்பம் தரித்துவிடுகிறார்.பெற்றோருக்குத் தெரியாமல் அதைக் கலைத்துவிட முடிவெடுக்கும் நாளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிடுகிறது.

அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்புடன் சொல்ல விழைந்திருக்கிறது திரைக்கதை.

அனுபமா பரமேஸ்வரன், ஆர்ப்பாட்டமான நடிப்பா? அமைதியான அழுத்தமான நடிப்பா? எதுவாக இருந்தாலும் நான் நன்றாகச் செய்வேன் என்று நிருபித்திருக்கிறார்.எப்படி கர்ப்பம் தரித்தோம் என்று தெரியாமலும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் ஏற்பட்ட இடையூறினாலும் தவித்துப் போகும் காட்சிகளில் எல்லோருடைய பரிதாபத்தையும் சம்பாதித்துவிடுகிறார்.

அவருடைய பெற்றோராக நடித்திருக்கும் சார்லி,நிரோஷா ஆகியோர் நடுத்தரக் குடும்பங்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா என படத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.எல்லோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிகக் குறைந்த கதைக்களத்தில் நிறைவான காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். பாடல்கள் நன்று, பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் படபடப்பை ஒலியாக மாற்றி பார்வையாளர்களைப் படபடக்க வைத்திருக்கிறது.

வி.ஜே.சாபு ஜோசப், கதையில் இருக்கும் பரபரப்பு காட்சிகளிலும் தொடரும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ஜீவா.இந்தக் கதையில் வரும் இளம்பெண்ணின் சிக்கலைப் பற்றி மட்டுமின்றி ஊரடங்குக் காலத்தில், வருமானம் இழந்த குடும்பம், ஊருக்குத் திரும்ப முடியாத தொழிலாளி, உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் மருத்துவர்கள், தனிமையில் தவிக்கும் இளைஞர்கள், பிரிவால் வலிக்கும் காதலர்கள் ஆகிய அனைத்தையும் தொட்டுச் சென்றிருக்கிறார்.

நாயகியின் கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்கிற பெரும் கேள்விக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பார்வையாளர்கள்,ஒருகட்டத்தில் அதை மறந்து திகைக்கும்படி படத்தைக் கொண்டு சென்றிருப்பது நன்று.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.