பாட்டி ஜரினாவகாப்புடன் வசித்துவரும் நாயகன் பிரபாஸ், பாட்டியின் நோய்க்கு மருந்தாக பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாத்தா சஞ்சய்தத்தைத் தேடிப் போகிறார்.அந்தத் தேடல் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை எல்லா பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்துக் கொண்டு சொல்ல விழைந்திருக்கும் படம் தி ராஜா சாப். ஹிந்தி, தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
முழுமையான ஆக்சன் ஹீரோவாகிவிட்ட பிரபாஸ்,இந்தப்படத்தில் காதல், சண்டை ஆகியனவற்றோடு நகைச்சுவை கலந்த வேடமேற்றுள்ளார்.எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிட வேண்டுமென்றும் முயன்றுள்ளார்.பேய் மாளிகைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் காட்சிகளில் நடிப்பில் பல மாறுபாடுகளைக் காட்டியிருக்கிறார்.
மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் ஆகிய மூன்று கதாநாயகிகள் படத்தில் இருக்கிறார்கள்.காதல் கவர்ச்சி பயம் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்களும் தாராளமாகவே நடித்திருக்கிறார்கள்.
தாத்தாவாக நடித்திருக்கும் சஞ்சய்தத்துக்கு கதையை நகர்த்திச் செல்லும் மிக முக்கியமான வேடம்.அதற்கு அவருடைய தோற்றமும் நடிப்பும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
சமுத்திரக்கனி,விடிவி.கணேஷ்,பொம்மன் இரானி ஆகியோரும் அளவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.மந்திர தந்திரங்கள், பேய்க் காட்சிகள் ஆகியனவற்றை அவற்றிற்குத் தக்க ஒளியமைப்புகளுடன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
தமன் இசையில் பாடல்கள் பல வகைகளில் இருக்கின்றன.பின்னணி இசைக் கோர்ப்பில் தேவைக்கு அதிகமாகவே இசைத்திருக்கிறார்.
கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.அவர் வெட்ட வேண்டிய பல காட்சிகளை அப்படியே விட்டுவிட்டது படத்துக்குப் பலவீனமாகிவிட்டது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே மாளிகைக்குள் நடப்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.அதற்காக கலை இயக்குநர் ராஜீவன் அமைத்துள்ள அரங்கம், இரசிக்கவும் பயப்படவும் வைக்கின்றது.
எழுதி இயக்கியிருக்கிறார் மாருதி.பிரபாஸை வைத்து முழுமையான ஆக்சன் படங்களே வந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மாற்றமாக,அரண்மனை வரிசைப் படங்களைப் போல் நகைச்சுவை கலந்த திகில் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.மூன்று நாயகிகளை வைத்து பிரபாஸுக்கு மகிழ்ச்சி கொடுத்ததோடு இளைஞர்களை ஈர்க்க முயன்றிருக்கிறார்.
– இளையவன்
