கல்லூரி மாணவர் தேர்தல்களிலும் அரசியல் எப்படியெல்லாம் விளையாடுகிறது? என்பதை எடுத்துக் காட்டும் படமாக வந்திருக்கிறது ரெட்லேபில்.
கல்லூரி மாணவராக இருக்கும்போது துடிப்புடன் இருந்து அதற்காக காவல்நிலையம், நீதிமன்றம் வரை அலைந்த நாயகன்,கல்லூரி முடித்த பிறகு தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்கிறார்.ஆனால் அவர் படித்த கல்லூரி மாணவர் தேர்தல் நேரத்தில் அதில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அங்கு போனால் ஒரு திடீர் சிக்கல் ஏற்படுகிறது. அது என்ன? அதிலிருந்து தப்ப நாயகன் என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் படம்.
நாயகனாக நடித்திருக்கும் லெனினுக்கு பெயருக்கேற்ற வேடம்.அதைப் பொறுப்பாகச் செய்திருக்கிறார். கல்லூரி மாணவர், அதற்குப் பின்னான இளைஞர் ஆகிய இருவேறு தோற்றங்களிலும் அதற்கேற்ற நடிப்பிலும் வரவேற்புப் பெறுகிறார்.அவருக்கு இதுதான் முதல்படம் என்பது சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அஸ்மினுக்கு சும்மா வந்து போகிற கதாபாத்திரமில்லை.திரைக்கதையில் முக்கியமான இடம் அவருக்கு இருக்கிறது.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.
எதிர்நாயகனாக நடித்திருக்கிறார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.அவருடைய் நிஜ வாழ்வை ஒட்டிய கதாபாத்திரம்.நிஜத்தில் அவர் நல்லவர் படத்தில் அவர் கெட்டவர்.அரசியல்வாதி மற்றும் கொங்குவட்டார வழக்கு ஆகியனவற்றிற்கு அவ்வளவு பொருத்தம்.
முனீஷ்காந்த், அனுமோகன் ஆகிய இருவரும் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்தை இரசிக்க வைத்திருப்பதில் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பனின் பங்கு அதிகம். காட்சிகளில் பலவித தோற்ற மயக்கங்களை ஏற்படுத்தி சுவை கூட்டியிருக்கிறார்.
கைலாஷ் மேனன் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம்.பின்னணி இசையில் திரைக்கதையோட்டத்தில் இருக்கும் பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறார்.
லாரன்ஸ் கிஷோர் படத்தைத் தொகுத்திருக்கிறார்.படம் தொடக்கம் முதல் கடைசிவரை விறுவிறுப்பாகச் செல்லவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உழைத்திருக்கிறார்.
திரைக்கதை எழுதியிருக்கும் பொன்.பார்த்திபன்,அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்பதற்கேற்ப எழுதியிருக்கிறார்.
கதைக்களம் ஒரு கல்லூரிதான் என்றாலும் அதற்குள் பல்வேறு பரிமாணங்களை வைத்து, அடுத்து என்னநடக்கும்? என்கிற எதிர்பார்ப்போடும் படபடப்போடும் பார்க்க வைத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் கே.ஆர்.வினோத்.
– இளையவன்

