காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்?
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
என்றார் பாரதியார்.
இந்த காதல் உணர்வுகளை மையப்படுத்திய திரைப்படங்களும் எந்நாளும் உயிர்ப்புடன் இருப்பவை.அந்த வரிசையில் வந்திருக்கும் படம் வித் லவ்.
திருமணம் செய்து கொள்வதற்காகச் சந்தித்துப் பேசும் ஓர் இளைஞனும் யுவதியும் தத்தம் முதல்காதலைத் தேடிப்போகும் முடிவை எடுக்கின்றனர்.அந்தப் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைத் திகட்டத் திகட்டச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிசன் ஜீவிந்த் நாயகனாக நடித்திருக்கிறார்.பள்ளி மாணவன், திருமண வயது இளைஞன் ஆகிய இருவித தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்திருக்கிறது.இரண்டிலும் தோற்றம், உடல்மொழி, நடிப்பு ஆகிய எல்லாவற்றிலும் பொருத்தமாக இருக்கிறார்.முதல்படத்தில், இயக்குநராக வெற்றி பெற்ற அவர் இந்தப்படத்தில் நடிகராகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன், அழகிலும் நடிப்பிலும் அனைவரையும் ஈர்க்கிறார்.அவருடைய பாத்திரப்படைப்பு நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய வண்ணம் அமைந்திருக்கிறது.அவரும் அதை உணர்ந்து நடித்து பெரும் வரவேற்பைப் பெறுகிறார்.
நாயகன் நாயகியின் முதல்காதலர்களாக நடித்திருக்கும் காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன் ஆகியோரின் பாத்திரங்கள் கதைக்கருவின் அடித்தளமாக அமைந்திருக்கிறது.அவர்களும் அதற்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி, அப்பாவாக நடித்திருக்கும் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன், நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரிஷ் குமார், சித்தார்த், பள்ளி மாணவிகளாக நடித்திருக்கும் டிம்பிள் கண்ணா, சாச்சனா ஆகியோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, கதையில் இருக்கும் காதலை காட்சிகளிலும் ததும்பத் ததும்பக் கொடுத்திருக்கிறது.
ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசை இதம்.
படத்தொகுப்பாளர் சுரேஷ்குமாருக்கு சவாலான பணி.அதைத் திறம்படச் செய்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மதன், எழுதி இயக்கியிருக்கிறார்.மென்மையான உணர்வுகளை மையப்படுத்திய கதை எழுதி, அதற்குள் பெண் மனஉணர்வுகள் மட்டுமின்றி உரிமைகளையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.எந்தக் கதாபாத்திரத்தையும் வீண் என்று சொல்லிவிட முடியாத்படி பயன்படுத்தியிருப்பது அவருடைய தனித்திறன்.முதல்பாதியில் இருக்கும் சிற்சில தொய்வுகளைத் தாண்டி எல்லோரையும் ஈர்க்கும் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
– இளையவன்

