இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது. அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது பாராட்டப்பட்ட குறும்படமான “லிட்டில் விங்ஸ்” வழங்குகிறது.

தேசிய விருது பெற்ற “லிட்டில் விங்ஸ்”, திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, இது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு பார்வையாளர்களுக்காக வெளியிடப்படுகிறது. இதையொட்டி லிட்டில் விங்ஸ் குறும்படம் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து குறும்பட குழு செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் நவீன், நடிகை மணிமேகலை, நடிகர் ராம்ஜி, இயக்குநர் ராஜூமுருகன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர்.

குறும்பட இயக்குநர் நவீன் பேசும் போது,

இந்த குறும்படத்தை எழுத தொடங்கும்போது இந்த இடத்திற்கு வருவதற்கு திட்டமிடவில்லை.ஆனால், குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்லும் என்ற கனவு இருந்தது,விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. எல்லாபடமும் எழுத தொடங்கும் முன்பு ஒரு கேள்வி இருக்கும்.அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கும் போதுதான் கதை,திரைக்கதை அமைத்து படமாக முயற்சி செய்கிறோம்.அடிப்படையில் இந்தகதை கொரோனா காலக்கட்டத்தில்தான் எழுதப்பட்டது.
கொரோனா காலக்கட்டத்தில் நிறைய துர்மரணங்கள் நிகழ்ந்த சமயத்தில்,நம் ஆசைகளும் நம் மரணத்துடன் மரித்து விடுகிறது.திடீரென நம் மரணத்துடன் நம் ஆசையும் சேர்ந்து போய்விடுகிறது.உலகமும் அதோடு ஓடிக்கொண்டே இருக்கிறது.அந்தகேள்வியை குறிப்பிடும் நோக்கத்தில்தான் இந்தகதை எழுதப்பட்டது.அவர் ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படுகிறாரே தவிர,அதில் இருக்கும் விஷயங்கள் இதுதான்.

எங்கள் ஊரில் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்களின் வாழ்க்கையில் தீர்வு இருக்காது.அது ஒரு தொடர் போல நீண்டுகொண்டே இருக்கும்.அந்தமாதிரியான வீடுகளில் சிலர் குடித்துவிட்டு உயிரிழந்துவிடுவார்கள்.அதன்பிறகு அந்த பெண்கள் சுதந்திரமாக இருப்பது நமக்கு தெரியும்.அந்த சூழலில் ஒருவரது மரணம் இன்னொருத்தருக்கு விடுதலையை கொடுக்கிறது. இந்த இரு கேள்விகளை குறிப்பிடும் வகையில்தான் இந்தகதையை நான் எழுதினேன்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடர்ச்சியாக படித்துக்கொண்டு இருக்கும்போது,கந்தர்வன் எழுதிய கதை இதற்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது.இதுதான் இந்தப்படம் ஆரம்பித்த விதம்.இதன் கதையை எழுதி முடித்ததும்,என் இயக்குநரிடம் காண்பித்தேன்.நான் எழுதும் கதைகளை இயக்குநரிடம் காண்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன்.என் முதல் சிறுகதை விகடனில் வெளிவர முக்கிய காரணமாக என் இயக்குநர் இருந்தார். அந்தவகையில், இந்தகதையை படித்ததும் அதனை செய்வதற்கு அவர் தயாராக இருந்தார்.எனினும்,இதனை செயல்படுத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

இதில் சேவல் இருக்கிறது,காட்சிகளை கிராஃபிக்ஸ் செய்கிறோமா அல்லது உண்மையில் படமாக்குகிறோமா என்பது போன்ற சிக்கல்களை பொறுமையாக கடந்துவர நேரம் ஆகிவிட்டது.என் நண்பர் அசோக், திலானி ரவீந்தரன் என்ற தயாரிப்பாளர் கனடாவில் இருந்து திரைக்கதை பற்றிய போட்டி இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.நானும், இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதி அனுப்பிவிட்டேன். இந்தப்படத்தின் முதல் தயாரிப்பாளர் திலானி ரவீந்திரன்தான்.

அந்தப் போட்டி தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய போட்டியாளர்களை கொண்டிருந்தது. அதில் என் திரைக்கதை முதல்பரிசை வென்றது. அதில் கிடைத்த தொகை,ராஜூமுருகன் சார் இணைதயாரிப்பு மூலம்தான் இந்தப்படம் எடுக்கப்பட்டது.எடுத்தப் பிறகு இந்தப்படம் ஒருவருடம் முழுக்க சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது.அதன்பிறகு,கேரளாவில் நடந்த திரைப்பட விழாவில் விருது வென்றது. அதன்பிறகு இந்தப்படத்திற்கு வெளிச்சம் கிடைத்தது. இதனால்,நாங்களாக இந்தப்படத்தை வேறு எங்கும் அனுப்பவில்லை.

விருது வென்றதால் பல சர்வதேச திரைப்பட விழாக்கள் சார்பாக எங்களை தொடர்பு கொண்டு படத்தை அனுப்பக் கோரினர்.இந்தப்படத்தை சரியாக கொண்டு சேர்க்க அதிக நேரம் ஆனது.தனித்து செயல்படும் போது,பெரிய நட்சத்திரங்கள் இன்றி எடுக்கும் போது பெரிய ஓ.டி.டி. தளங்களில் முயற்சி செய்தோம். அதற்கு நிறைய காலதாமதம் ஆனது.அதன்பிறகு இங்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப்படத்தை தாங்குவது மிகப்பெரிய விஷயம். இனிவரும் உதவிஇயக்குநர்களுக்கு இதுவொரு புது வழியாக இருக்கும்.ட்ரீம் வாரியர்ஸ் குழுவில் பிரகாஷ் சார் தொடங்கி அனைவருக்கும் நன்றி.விருது வாங்கும் முன்பே இந்தப்படத்தை பிரகாஷ் சாருக்கு பிடித்துவிட்டது.அதன்பிறகு பிரபு சார்,குகன் சார், அலாவுதீன்,கிருஷ்ணா என அனைவக்கும் நன்றி.
அதன்பிறகு மணிமேகலை அம்மா,காளிதாஸ் ஐயா என இருவரும் செட்டிற்கு வரும் முன்பே நடிப்பு பயிற்சி அளித்திருந்தோம்.லைவ் ரெக்கார்டிங் என்பதால் எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார்ப்படுத்த வேண்டியிருந்தது.படப்பிடிப்பு தளத்தில் ஒரு விஷயத்தை கூட மாற்றவில்லை.கதையாக என்ன எழுதப்பட்டதோ, அதைத்தான் எடுத்தோம்.இந்தப்படத்தில் சிற்பபாக நடித்த காளிதாஸ் தோழர்,தற்போது உயிருடன் இல்லை.அவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வீதிநாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தார்.தன் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என அதிகம் நம்பியிருந்தார்.இந்தப்படம் அவருக்கு அதை அமைத்துக்கொடுத்தது.கோவா,மும்பை என திரையிட்ட இடங்களில் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ராம்ஜியை நான் மெகந்தி சர்க்கஸ் படத்தில் கண்டெடுத்தேன்.அவருக்கு மதுரை வட்டாரம் சிறப்பாக வரும்.மதுரையில் இருந்து வந்துள்ள ராம்ஜி சாருக்கு நன்றி.தயாரிப்பு நிறுவனங்களான வியூஃபைன்டர், ராஜூமுருகன் சாரின் காம்ரேட் டாக்கீஸ் ஒத்துழைப்பு வழங்கினர்.காம்ரேட் டாக்கீஸ் ஊடக ரீதியில் சென்றடையும், பலவிதங்களில் உதவியாக இருந்தனர். நான் உதவிஇயக்குநர் என்பதால் கூடுதல் சிறப்பாக இருந்தது.உதவிஇயக்குநர் என்பதால் தயாரிப்பாளராக இன்றி ராஜூமுருகன் சாரிடம் ஆலோசனைகள் கேட்க முடிந்தது.அவர் சொன்ன தவறுகளை சரி செய்ததால், இந்தப்படம் மேலும் சிறப்பாக மாறியது.

மாநகரம் படத்தின் எடிட் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.அதை பார்த்தபிறகு,நான் உதவிஇயக்குநர் என்பதாலும் அப்போது நான் ஜோக்கர் படத்தில் பணியாற்றி இருந்தேன்.அந்தசமயத்தில் மாநகரம் படத்திற்காக பிரபு சார் வெற்றி விழா நடத்தினார்.அந்தவிழாவில் பிலோமின் ராஜை சந்தித்தேன்.அதற்கு அடுத்தநாள் நான் அவரை அலுவலகம் சென்று பார்த்தேன்.அதன்பிறகு அவர் நிறைய பெரிய படங்களில் பணியாற்றினார்.எனினும்,ஒரு குறும்படத்தில் பணியாற்றுகிறார் என்றால்,அவருக்கு படங்களின் மேல் உள்ள காதல்தான் காரணம்.முதல் சந்திப்பின்போது நானும் பிலோமின் சாரும் அதிகம் பேசவில்லை.அவர் படத்தின் கதையை மட்டும் கேட்டார், சில காட்சிகளை மட்டுமே பார்த்தார்.பிறகு தனது குழுவினருடன் பணிகளை தொடங்கிவிட்டார்.அவரது குழுவில் சந்தோஷ்,சக்தி மிகவும் ஆதரவாக இருந்தனர். ஒவ்வொரு திரைப்பட விழாவிற்கு அனுப்பும் போதும், ஒவ்வொரு விதமாக அனுப்பவேண்டும்.அதன்பிறகு தணிக்கை,விலங்குகள் நலவாரியம்,தேசிய விருதுகளுக்கு சமர்பிப்பது என ஒவ்வொரு நடைமுறையிலும் அவர்கள் உறுதுணையாக நின்றனர்.இதற்காக வாழ்நாள் முழுக்க நான் பிலோமின் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன்.

கலை இயக்குநர் விஜய் பற்றி பேசியாகவேண்டும். படத்தில் வரும் சுவர்,முட்டையில் இருக்கும் குஞ்சு உள்ளிட்ட சிறுசிறு விஷயங்களை மிக நுனுக்கமாக அவரே செய்தார்.மிக சிறிய பட்ஜெட்டில் பல பொருட்களை வாங்கும்போது,எல்லா பணிகளையும் அவரே செய்தார்.படத்தில் அவருக்கு உதவியாளர் இல்லை.இதனால்,அவரே கலை இயக்குநர்,உதவி கலைஇயக்குநர் என எல்லா பொறுப்புகளிலும் தனி மனிதனாக உழைப்பைக் கொடுத்தார்.
இந்தப்படத்தின் லைவ் ரெக்கார்டிஸ்ட் ராகவ்.இந்தப் படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்படுவதால், படத்தின் காட்சி மட்டுமின்றி அதற்கான ஓசையும் சரியாக பதிவாக வேண்டும்.இதனால்,பலமுறை ரீடேக் செய்ய வேண்டியிருந்தது.மேலும்,காட்சியின் ஒலி அமைப்பு சரியாக பதிவாகி இருக்கிறதா,காட்சியில் தேவையற்ற ஒலி ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.அப்படி பதிவாகி இருந்தால்,மீண்டும் படமாக்க வேண்டும்.இந்தப்பணியை ராகவ் மிகச்சிறப்பாக செய்தார்.இந்தப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி பணியாற்றினார்.ராஜூமுருகன் சார் மூலமாகத்தான் இந்தக்குழு அமைந்தது.சந்தோஷ் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் உதவியாளர்.அவர் தற்போது இயக்குநர் ராமின் பறந்துபோ படத்தில் பணியாற்றி இருக்கிறார்.இந்தப்படத்திற்காக சிறிய பட்ஜெட்டில் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்துள்ளார்.

ஒலி வடிவமைப்பாளர்களான சுரேன் மற்றும் கூத்தன் அவர்கள் இங்கு வரவில்லை,வேறொரு ரெக்கார்டிங்கில் உள்ளனர்.கலரிஸ்ட் ரங்கா சார் இங்குதான் இருக்கிறார். இவர் பல பெரியபடங்களில் பணியாற்றி வருகிறார். எங்கள் இயக்குநர் குக்கூ படத்திற்கும் அவர்தான் கலரிஸ்ட்.நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகுழு என இந்த மாதிரி அமைந்தால்தான் இதுபோன்ற படத்தை எடுக்க முடியும்.இந்தப்படத்தில் எல்லாமே கூடிவந்தது.ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசியவிருது அறிவிக்கப்படும்போது நான்,இயக்குநருடன் திருவண்ணாமலையில் இருந்தேன். அந்த அறிவிப்பு வெளியானபோது அந்தநாள் எப்படி இருந்தது என நியாபகம் இருக்கிறது.இதே பிரசாத் லேபில்தான் அதற்கும் பிரஸ்மீட் நடந்தது.அந்தப்படத்திற்கும் ட்ரீம் வாரியர்ஸ் ப்ரொடக்ஷன்,தற்போது இந்தப்படத்திற்கும் ட்ரீம் வாரியக்ஸ் ப்ரொடக்ஷன் ரிலீஸ் செய்வதை ஒரு பேட்டர்னாக பார்க்கிறேன்.எனது எதிர்கால படங்களுக்கம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் கதவுகள் திறந்திருக்கும் என்று நம்புகிறேன்.கனடாவில் இருக்கும் திலானியை நான் மிஸ் செய்யக்கூடாது.அவர்கள்தான் இந்தகதையை முதலில் தேர்வு செய்தார்கள்.இந்த வீடியோவை பார்த்து அவர்கள் பெருமை கொள்வார்கள் என நினைக்கிறேன்.வருகிற 27ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.இப்படியொரு திரைப்படம் யூடியூபில் வெளியாகும்போது அதற்கான வியூஸ்கள் அதிகரிக்க,உங்களை போன்ற ஊடகத்தினர் மட்டுமே செய்யமுடியும்.இதை நீங்கள் எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் மருது.அவரின் முயற்சியை நீங்கள் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியையும் மிகநுட்பமாக பார்த்து பார்த்து பதிவு செய்தார்.அவர் கணிதரீதியாக மிகச்சரியாக பணியாற்றியதே காட்சிகள் தரமாக வருவதற்கு காரணமாக அமைந்தது.பல பெரிய ஒளிப்பதிவாளர்கள், படத்தின் காட்சிகளை பார்த்தபிறகு,இதற்கு கிரேடிங் செய்யாதீர்கள் என்று கூறினர்.மற்றொரு ஒளிப்பதிவாளரான மீனாட்சி சோமன் பற்றி கூற வேண்டும்.மருது மற்றும் மீனாட்சி இருவரும் தனித்தனி கேமராவில் படமாக்கினர்.எனினும்,படத்தின் காட்சிகளுக்கு அதிக கிரேடிங் செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.மருது தற்போது என்னுடன் இல்லை, அவருடனான கூட்டணி கதை எழுதியதில் இருந்து படம் நிறைவுபெறும் வரையில் நீண்டது.அதேபோல் தற்போது காளிதாஸ் தோழரும் தற்போது நம்முடன் இல்லை. ஆனால்,இந்தப்படம் இருக்கப் போகிறது.இந்தப்படம் யூடியூப் இருக்கும்வரை இருக்கப்போகிறது.அவர்களின் நினைவாக இருக்கப்போகிறது.அவர்கள் இல்லை என்றாலும்,இங்குதான் இருக்கப்போகிறது.நன்றி என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகை மணிமேகலை,

எல்லாருக்கும் வணக்கம், இந்த குறும்படத்தை நான் பார்வையாளராக பார்க்கிறேன்.உங்களுடன் சேர்ந்து தற்போதுதான் இரண்டாவது முறையாக பார்க்கிறேன். காளிதாஸ் ஐயா இந்த கதாபாத்திரத்தில் சேவல் மீது ஒரு அவா.கஞ்சி சாதமே சாப்பிடுவோருக்கு,கறிசோறு சாப்பிடும் என்ற ஆசை இருக்கும்.அந்த சேவலை எப்படியாவது அடிக்கவேண்டும் என நினைத்தார். கடைசியில் முடித்தார் ஆனால்,அவரும் முடிந்துவிட்டார். கடைசியில் சனிக்கிழமை போனதால் அந்த சேவலை எடுத்து சென்றுவிடுவார்கள்.அந்த ஆன்மா சேவலுடன் செல்லும் விஷயம் அது மனதை மிகவும் பாதிக்கிறது. அவரின் ஆன்மா கோழியை கொண்டு சென்ற நிம்மதி இருக்கிறது.இன்னொரு விஷயம் கோழி முட்டைக்குள் குஞ்சு இருப்பது முற்றிலும் செயற்கையாக செய்யப்பட்டது.அதற்கு கலை இயக்குநர் செய்த பணி மிகப்பெரியது.அந்தக்காட்சியை படமாக்க நான்கு நாட்கள் திட்டமிட்டிருந்தார்கள்.எனினும்,காட்சி, ஒலி என அனைத்தும் கச்சிதமாக பதிவுசெய்ய ஆறு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பிறகு கோழி குஞ்சு கத்துவது, அதாவது வாழ்க்கையே போனபிறகு சந்தோஷம் வரும். அதை பார்வையாளராக பார்க்கும்போது நெகிழ்வாக இருக்கிறது.எனக்கு படத்தின் கதையை போனில் தான் சொன்னார்.நிறைய சிரமப்பட்டுதான் இந்தப்படத்தில் பணியாற்றினார்கள்.இந்தப்படத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சியாகவும்,பெருமையாகவும் இருக்கிறது.நவீன் மிக்க நன்றி,பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.

அடுத்து பேசிய நடிகர் ராம்ஜி,

இயக்குநருக்கும், எனக்கும் இது முதல் குறும்படம். முன்னதாக சில பெரிய படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.ஆனால்,குறும்படத்தில் இவ்வளவு வேலைகள் இருப்பதை இந்தப்படத்தில் நடிக்கும் போதுதான் உணர்ந்தேன்.இந்தப்படத்தின் தலைப்பிற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது.படத்தின் தலைப்பு “லிட்டில் விங்ஸ்”,நானும் லிட்டில்தான்.அது எனக்கு பிடித்து இருந்தது.ஆனால்,அதை இயக்குநரிடம் நான் கூறவில்லை.எனது யூடியூப் சேனலின் பெயரும் லிட்டில் மேன் ஷோ என்றுதான் வைத்திருக்கிறேன்.எல்லோரும் என்னை பார்த்தால் கிண்டல்தான் செய்வார்கள்.எனது புனைபெயரை தான் அப்படி வைத்தேன்.எல்லோரும் நான் குள்ளம் என்றுதான் கிண்டல் செய்வார்கள்,அதையே நான் புனைபெயராக வைத்தேன்.அதேபோல் சாரும் லிட்டில் விங்ஸ் என வைத்திருந்தது எனக்கு பிடித்திருந்தது. எனது முதல் குறும்படம்,இயக்குநருக்கும் முதல் குறும்படம் தேசியவிருது வாங்கியது மகிழ்ச்சி.என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பெரியபடத்தில் நடிக்கும்போது இருந்ததைவிட முதல் குறும்படம் தேசியவிருது வாங்கியது வீட்டில் உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இயக்குநர் நவீன் சார் மிக்க நன்றி.இயக்குநர் ராஜூமுருகன் மற்றும் இந்தப்படக்குழுவை சேர்ந்த அனைவரும் கடும் உழைப்பை கொடுத்தனர்.பெரிய படத்தில் கூட நான் பயிற்சி எடுத்ததில்லை,ஆனால், இந்தப்படத்தில் அனைவரும் முன்கூட்டியே பயிற்சி எடுத்து அதன்பிறகு நடித்தோம்.இங்கு எல்லாமே சவாலாக இருந்தது.படம் வெளியான பிறகு மேலும் வெற்றிபெறும் என்று நம்புகிறேன்,அனைவருக்கும் நன்றி என்றார்.

கலை இயக்குநர் விஜய் பேசும் போது,

எல்லோருக்கும் வணக்கம்,நான் இந்தப்படத்தில் நான்கு நாட்களுக்கு முன்புதான் கமிட் ஆனேன்.என் நண்பர் தீனா ராகவ் மூலமாகதான் இயக்குநரை சந்தித்தேன். இந்தப்படத்தில் அடைகாத்த கோழிக்குஞ்சியை உருவாக்குவது மட்டும் மிகவும் கடினமாக இருந்தது. திட்டமிட்டதை விட அதற்கு தேவைப்பட்ட இரத்தம் உள்ளிட்டவைகளை தயார்படுத்துவது சவாலாக இருந்தது. ரொம்ப நன்றி என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பேசும் போது,

வணக்கம்,ட்ரீம் வாரியர்ஸ்-க்கு நன்றி,இயக்குநர் நவீன், ராஜூமுருகன் சார் மற்றும மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி.இயக்குநர் நவீனை நான் ராஜூமுருகன் சார் மூலம்தான் சந்தித்தேன். ராஜூமுருகன் சாருடன் பணியாற்றவேண்டும் என்று முயற்சித்தேன்.அவர் முதலில் தனது உதவிஇயக்குநர்களை சந்திக்க வைத்தார்.அப்படி தான் நவீன் எனக்கு அறிமுகமானார்.நவீன் எனக்கு திறமை மிக்க நல்லநண்பர்.முதலில் அவரை இயக்குநராக சந்தித்தேன்,பிறகு நண்பர்களானோம்.நான் அடிக்கடி அவரை சந்திக்க நினைப்பேன்.அவர் படம்,கதைகள் மற்றும் இசை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்.நாங்கள் உரையாடல் மற்றும் திட்டமிடல்களில் ஈடுபடுவோம்.அந்தமாதிரிதான் லிட்டில் விங்ஸ் தொடங்கியது. நான் இந்தப்படத்தில் பணியாற்ற தொடங்கும்போது, இதை குறும்படமாக பார்க்கவில்லை. என்னை நிரூபிக்க இதுவொரு வாய்ப்பாக இருக்கும் என்று வகையில்தான் பார்த்தேன்.அதன்பிறகு நவீனுடன் பணியாற்ற தொடங்கினேன்.இந்தப்படத்திற்காக நிறைய விஷயங்களை பரிசீலனை செய்தோம்.லிட்டில் விங்ஸ்-இல் பணியாற்றிய ஒவ்வொருத்தரும்,எனக்கு இசையமைக்க மிகவும் ஊக்கப்படுத்தினர்.உண்மையில், அவர்களால் எனது வேலை இந்தப்படத்தில் குறைவாகவே இருந்தது.அனைவருக்கும் நன்றி,நவீன் விரைவில் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுப்பார். அந்த நாளுக்காக காத்திருக்கேன்
என்றார்.

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் பேசும் போது,

எல்லோருக்கும் வணக்கம்,நவீன் குறும்படம் செய்ய வேண்டும் என்று என்னை சந்தித்தார்.நாளைய இயக்குநர் காலக்கட்டத்தில் நண்பர்கள் இணைந்து குறும்படம் எடுப்போம்.குறைந்தபட்சம் ஒரு இலட்சத்தில் குறும்படம் எடுத்துவிடுவோம்.நவீனிடம் இந்தப்படத்தின் பட்ஜெட்டை கேட்டேன்,அவர் ரூ.30 இலட்சம் என்றார்.உடனே ஷாக் ஆனேன்.நான் பெரிய பட்ஜெட்டில் செய்த முதல் குறும்படம் இதுதான்.அப்போது அவர்,இல்லை இந்தப்படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.நாளைய இயக்குநர் சமயத்தில் இதுபோன்ற திரைப்பட விழாக்கள் இல்லை, இதனால் அந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே எடுப்போம். இந்தப்படத்திற்கு வரும்போது,இயக்குநர் நவீன் இது குறும்படம் ஆனால் இதன் தரம் சற்று திரைப்படம் அளவுக்கு உயர்வாக இருக்கவேண்டும் என்றார். அப்போது அவரிடம் தயாரிப்பாளர் யாரென்று கேட்டேன் அவர் திலானி ரவீந்திரன் என்றார்.அவருக்கு கோடி கும்பிடு போடுங்கள் என்றேன்.வாழ்க்கையில் ரூ.30 இலட்சம் போட்டு குறும்படம் எடுக்கும் மனது கொண்டவர் அவர்தான்.எனக்கு தெரிந்து குறும்படத்திற்கு யாரும் அவ்வளவு தொகை கொடுத்ததில்லை.எனக்கு இந்தப்படத்தில் மற்றொரு சவால்,லைவ் சவுண்ட். நான் அதற்கு முன்புவரை லைவ் சவுண்ட் செய்ததே இல்லை. இந்தப்படத்திற்கு லைவ் சவுண்ட் என்பதால் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.இந்தகதையை படிக்கும்போது, என் கிராமங்கள்தான் நினைவுக்கு வந்தது.எங்கள் வீட்டில் கோழி வளர்த்தோம்,அப்போது தினமும் மாலை 6 மணிக்கு கோழி கூண்டை அடைப்பது என் வேலை. என்றாவது அதை மறந்து போனால்,அம்மாவும், அம்மாச்சியும் என்னை அடிப்பார்கள்.அப்போதெல்லாம் வீட்டிற்கு மாமா,மச்சான் என உறவினர்கள் வந்தாலோ அல்லது பண்டிகை காலத்தில் மட்டும்தான் கோழி அடிப்பார்கள்.மற்றப்படி அசைவம் சற்று குறைவாகவே இருக்கும்.இந்தகதையை படிக்கும்போது எனக்கு அந்த ஞாபகங்கள் வந்தது.இதனாலேயே இந்தகதை எனக்கு மிகவும் பிடித்தது.இந்த குறும்படம் எனக்கு ஒரு பயிற்சியாகவே இருந்தது.திரைப்பட விழாக்களுக்கு இந்த குறும்படத்தை அனுப்பியது மறக்கமுடியாக அனுபவமாக இருந்தது.ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இந்தப்படத்தை வழங்குவதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்கள்.இதற்காக ஒரு டீசர் செய்யவேண்டும் என்றார்.மிக்க மகிழ்ச்சி என்று கூறி செய்தேன். தற்போது ட்ரீம் வாரியர்ஸ் மூலம் இந்தப்படம் வெளியாவது மிக்க மகிழ்ச்சி,நன்றி வணக்கம் என்றார்.

இயக்குநர் ராஜூமுருகன் பேசும் போது,

எல்லோருக்கும் வணக்கம்,நவீன் திரைப்படம் இந்த இடத்திற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் ட்ரீம் வாரியர்ஸ் இணைந்திருப்பது,இயக்குநர் கூறியதை போலவே ஜோக்கர் படத்தின்போது ஏற்பட்ட உணர்வு தற்போதும் ஏற்படுகிறது.நவீனை என்னிடம் ேசர்த்துவிட்டது,பவா செல்லத்துரை சார்.அவர் ஒருமுறை என்னை தொடர்புகொண்டு நவீன் என்றொரு பையன் இருக்கிறான்.அவனை முக்கியமான இயக்குநரிடம் சேர்த்துவிட அதிக முயற்சித்தேன். அவன் உலகசினிமா பற்றி அதிகம் பேசியதால்,ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்கவேண்டும் என்று கூறி இயக்குநர் வேண்டாம் என்று கூறிவிட்டார்.இதனால் அவன் விரக்தியாக இருக்கிறான் என்றார்.ரிஜெக்ட் ஆனவர்களை என்னிடம் தள்ளிவிடுகின்றீர்கள் என்று கூறி மறுத்துவிட்டேன்.ஆனால்,அவர் விடாமல் எங்கு செல்கிறாய் என்றார்.நான் தருமபுரிக்கு படப்பிடிப்புக்கு செல்கிறேன் என்றேன்.அவர் செல்லும் வழியில் திருவண்ணாமலையில் வந்து நவீனை லக்கேஜ் போல் எடுத்துச்செல்ல சொன்னார்.செல்லும் வழியில் அழைத்து செல்லப்பட்டவர்தான் நவீன்.அவருடன் பயணித்த சில வாரங்களில் அவர் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வருவார் என்பதை புரிந்துகொண்டேன். தொடர்ந்து நிறைய பயணம்,வாசிப்பு செய்பவர் நவீன். நிறையபடங்கள் பார்ப்பது,நிறைய உழைப்பை கொடுப்பவர் நவீன்.தற்போது மணி சாரிடம் இருக்கிறான்.அவன் எழுதும் எல்லாவற்றையும் என்னிடம் காண்பிப்பான்.இந்தகதையை என்னிடம் கொடுத்தான். இதை படித்ததும்,இது 20 நிமிடங்களாக இருந்தாலும், இது பேசும் உளவியல் மிகவும் பெரியதாக இருக்கிறது. இது பசி,ஆண்,பெண் உறவு,நம் கலாச்சாரம் பற்றி பேசுகிறது.இதையெல்லாம் பேசுகிறது,நிச்சயம் இதை எடு என்று கூறினேன்.அப்போது திலானியுடன் இணைந்து தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.காம்ரேட் டாக்கீஸில் நாங்கள் தொடர்ச்சியாக ஆவணப்படங்களை எடுத்து வருகிறோம்.எங்கள் குழுவில் சிந்தன் தோழர் உள்பட பலர் பணியாற்றி வருகிறோம்.சமீபத்தில் நாங்கள் எடுக்க வாச்சாத்தி ஆவணப்படம் அதிகம் பேசப்பட்டது.அந்த மாதிரி ஆவணப்படங்கள்,குறும்படங்களை எடுத்து வருகிறோம்.அதில் லிட்டில் விங்ஸ் எடுத்ததில் பெருமை அடைகிறோம்.அதை பார்த்து ட்ரீம் வாரியர்ஸ் இதை வெளியிடுவதாக பிரகாஷ் சார் மற்றும் பிரபு சார் தெரிவித்தனர்.ட்ரீம் வாரியர்ஸில் பிரகாஷ் சார் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்.அடிக்கடி நாங்கள் உரையாடும்போது, அவர் நிறைய கதைகளை படித்து இதை படமாக்கலாம் என்பார்.நிறைய இலக்கியம் படிப்பவர் பிரகாஷ் சார்.இந்தமாதிரியான தயாரிப்பாளர் அமைவது இந்திய சினிமாவில் மிகவும் அபூர்வம். தொடர்ச்சியாக இலக்கியம்,வாழ்க்கைய சரியான பிணைப்பில் சினிமாவுக்கு கொண்டுவருவது பிரகாஷ் சார் மற்றும் பிரவு சாரிடம் இருக்கும் மிகமுக்கிய அம்சமாக பார்க்கிறேன்.இந்தப்படத்தை எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்ததும்,நவீன் வாழ்க்கை தொடங்கும் என்று நினைத்தேன்.

ட்ரீம் வாரியர்ஸ் தொட்ட படைப்பாளிகள் அனைவரும் மிக முக்கிய இடத்திற்கு வந்துள்ளனர்.அப்படிப்பட்ட விஷயத்தைதான் ட்ரீம் வாரியர்ஸ் தொடர்ந்து செய்வார்கள்.ட்ரீம் வாரியர்ஸ்-க்கு மிக்க நன்றி.சந்தோஷ் இசை மிகவும் அற்புதம். சினிமாவில் உங்களுக்கு நிச்சயம் பெரியஇடம் உண்டு. இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அற்புதமான நடிப்பை வழங்கினர்.ஒளிப்பதிவாளர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.பிலோமின், இவர் படைப்பை மட்டுமே பார்க்கிறார்.இன்று இந்தியாவில் உருவாகும் பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றும் ஒருவர் இந்த குறும்படத்தில் தனது கவனத்தை செலுத்தி,புதிய படைப்பாளிகளுக்கான இடமாக அவரது அலுவலகம் இருக்கிறது.அவரது அலுவலகம் ஃபேக்டரி போல் இயங்கி வருகிறது.எந்த அறையில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதே தெரியாது.நல்ல படைப்பாளிகளுக்கும்,நடிகர்களுக்கும் எப்போதும் மேடையாக ட்ரீம் வாரியர்ஸ் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன் என்றார்.

ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர். பிரபு பேசும் போது,

எல்லோருக்கும் வணக்கம்,குறும்படம் என்று அழைத்து எல்லோரும் இவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்று சோர்ந்து போயிருப்பீர்கள் என நினைக்கிறேன்.இந்தகதையை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் ஊர்களில் ஆடு,மாடு வளர்ப்பது வாழ்வியலின் அங்கமாகவே இருக்கும்.நானும்,பிரகாஷும் ஏழு கிலோமீட்டர் நடந்து சென்று சேவல் விற்று வந்த ஞாபகம் எனக்கு இருக்கிறது.எல்லார் வாழ்விலும் நாம் நிறைய விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம். பிரியாணியில் ஒரு பீஸ் இல்லையென நடந்த கலவரங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.அந்த மாதிரி சாப்பாட்டில் அசைவம் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.இந்தகதை சொல்லும் விஷயங்கள் சிலருக்கு சாதாரணமாக தெரியலாம், ஆனால் அதன்பின் இருக்கும் ஆழமான கருத்துக்கள் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களை நினைவுக்கு கொண்டுவருகிறது.

ட்ரீம் வாரியர்ஸில் நாங்கள இதை கொண்டுவர காரணம்,சினிமாவில் இன்று நிறைய விஷயங்கள் மாறியிருக்கிறது.நாங்கள்,புது கலைஞர்கள் வரும்போது அவர்களின் தொடக்கம் குறும்படம் அல்லது இசை ஆல்பம் மூலம் தொடங்கும்போது நமக்கு நல்ல திறமைசாலிகளை அடையாளம் காணவும்,அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.இது வருவாய் அடிப்படையில் இன்றி புது திறமைசாலிகளை அடையாளம் காணும் தளமாக இதை பார்க்கிறோம்.அந்தவகையில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸில் நாங்கள் தனித்துவ இசை ஆல்பங்களுக்கு ஆதரவளிக்கிறோம்.தற்போது லிட்டில் விங்ஸ் மூலம் குறும்படங்களுக்கும் ஆதரவளிக்க தொடங்கி இருக்கிறோம்.எங்களின் அடுத்தடுத்து முயற்சிக்கு உங்களது ஆதரவு தேவை, உங்களுக்கு இந்த குறும்படம் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள்,கொண்டுவந்து கொடுத்த ராஜூமுருகன் அவர்களுக்கும் இதை எப்படி கொண்டு சேர்க்கவேண்டும் என்று திட்டமிட்ட ட்ரீம் வாரியர்ஸ் குழுவனர் அனைவருக்கும் நன்றி.நீங்கள் இதற்கு ஆதரவளித்து,இதன்மூலம் நிறைய திறமைசாலிகள் மற்றும் படைப்புகள் வெளியாகும் என நம்புகிறேன்,நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.