அடுத்தடுத்து மூன்று பெண்கள் மாடியிலிருந்து விழுந்து மரணிக்கிறார்கள்.அதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பரத்த்துக்கும் அவர் மனைவிக்கும் சண்டை. குற்றவாளி பரத்துக்கு மிக அருகிலேயே இருக்கிறார் ஆகிய விசயங்களை வைத்து பரபரப்பு படபடப்பான த்ரில்லர் படமாக வந்தது காளிதாஸ்.2019 இல் வந்து வெற்றி பெற்ற அந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது காளிதாஸ் 2.

இந்தப்படத்தில் பெண்குழந்தைகள் காணாமல் போவதை வைத்து அதே பரபரப்பு படபடப்பு ஆகியனவற்றைக் கொடுத்திருக்கிறது இந்தப்படம்.

சென்னை புறநகரில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபர்ணதி – அனந்த் நாக் இணையரின் 4 வயது பெண்குழந்தை காணாமல் போகிறது.அந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் காவல்துறை அதிகாரிகளான பரத்தும் பவானி ஸ்ரீயும்.

அந்த விசாரணையில், அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகப்பட்டு அவரை கைது செய்கின்றனர்.ஆனால் அவரை நீதிமன்றம் விடுவிக்கிறது.காணாமல் போன அந்தக் குழந்தை மரணிக்கிறது.அதேபோல் இன்னொரு பெண்குழந்தையும் மரணிக்கிறது.

இந்த மர்மமரணங்களின் பின்னணி என்ன? குற்றவாளி யார்? என்பதற்கான விடைகளை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

முதல்பாகத்திலேயே முதிர்ச்சியான காவலதிகாரியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பரத், இந்தப்படத்திலும் அதைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.இந்தப்படத்தில் இன்னும் கூடுதல் நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஸ்டீபன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இன்னொரு நாயகன் அஜய்கார்த்தி அறிமுகநடிகர்.ஆனால் அதைச் சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு நடித்திருக்கிறார்.அதற்கேற்ப அவருடைய கதாபாத்திரமும் இருக்கிறது.அதிகம் பேசாமல் கண்களிலும் உடல்மொழியிலும் நடிக்கவேண்டிய வேடம்.நன்றாகச் செய்திருக்கிறார்.

நீண்டஇடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் ‘பூவே உனக்காக’ சங்கீதா.அவரைத் திரும்ப அழைத்துவருவதற்கேற்ற ஆச்சரியமான கதாபாத்திரம்.அதில் சரியாகப் பொருந்தி நற்பெயர் பெறுகிறார்.

காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ,அனுபவமற்ற அதிகாரிகளின் பிரதிநிதி போன்று வேடமேற்று அதற்கு நியாயமாக இரசிக்கத்தக்க வகையில் நடித்திருக்கிறார்.

சிறியவேடம் என்றாலும் கவனிக்க வைக்கும் வேடமேற்றிருக்கிறார் அபர்ணதி.அவர் கணவராக வரும் அனந்தநாக்கும் நன்று.சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோரின் நடிப்பு படத்திற்குப் பலம்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ்பாலா,சென்னையையே புதிதாகப் பார்க்கிற மாதிரி காட்டி வியக்கவைக்கிறார்.திரைக்கதையில் இருக்கும் பதற்றம் காட்சிகளில் வெளிப்படுகிறது.

இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை மிகமிக முக்கியம்.அதை உணர்ந்து உழைத்திருக்கிறார் சாம்.சிஎஸ்.பாடல்களும் கேட்டு இரசிக்கவைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

முதல்பாகத்தைப் போலவே இதையும் வெற்றிப்படமாக ஆக்கியிருக்கும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், விறுவிறுவென படத்தைக் கொண்டு சென்றிருப்பதோடு எதிர்பாராத திருப்பங்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு பாகத்துக்கான வியக்கத்தக்க குறிப்பையும் கொடுத்திருக்கிறார்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.