இப்போது 2026 ஆம் ஆண்டில் இருக்கிறோம்.இன்னும் பதினான்கு ஆண்டுகள் கழித்து 2040 ஆம் ஆண்டில் நடக்கின்ற கதையைக் கொண்ட படம் எல் ஐ கே. லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்பதன் சுருக்கம்தான் எல் ஐ கே.

காதலித்துத் தோற்பவர்கள் காதல் மீதே கொலைவெறி கொள்வார்கள்.அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தான் பெற்ற துன்பத்தை இந்த வையகத்தில் வேறுயாரும் அடைந்துவிடக்கூடாது என எண்ணி, எல் ஐ கே என்கிற கைபேசி செயலியை உருவாக்குகிறார்.இந்த செயலி மூலம், பொருத்தமான காதல் இணையைத் தேர்வு செய்யலாம்,அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதை எந்நேரமும் கண்காணிக்கலாம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.இந்தச் செயலிக்கு காதல் இணையரிடம் மட்டுமின்றி தம்பதியினரிடமும் நல்ல வரவேற்புப் பெற்றிருக்கிறது.

அந்தச் செயலி, நாயகன் பிரதீப்பின் காதலுக்குக் குழி தோண்டிவிடுகிறது.அதனால் வெகுண்டெழும் அவர்,அந்தச் செயலி மட்டுமல்ல எந்தக் கருவியாலும் காதலை அளக்கமுடியாது என்பதை நிறுவப் போராடுகிறார். அதில் அவர் வென்றாரா? இல்லையா? என்பதைச் சுவையாகச் சொல்ல முயன்றிருக்கிறது திரைக்கதை.

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான ஓர் எதிர்வினை கண்டிப்பாக உண்டு என்கிற நியூட்டனின் மூன்றாம் விதிப்படி,உலகமே கைபேசி மூலம் இயங்கிக் கொண்டிருக்கிறபோது அதற்கு நேரெதிராக கைபேசி இல்லா உலகத்தைப் படைக்கும் தந்தை சீமானின் வழிகாட்டுதலில் வளர்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

அவர் நாயகியைக் கண்டவுடன் காதலில் விழுவதும் அதற்காக அப்பாவுக்குத் தெரியாமல் கைபேசி வாங்கி பயன்படுத்துகிறார்.அதுவே அவருக்கு எதிராகப் போகிறது.இந்த வேடத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.காதல் எல்லாவற்றையும்விடப் பெரிது என்று போராடி இளைஞர்களை ஈர்க்கிறார்.

கைபேசி அடிமை, சமூகவலைதள மோகம் ஆகியனவற்றைக் கொண்ட யுவதிகளின் பிரதிநிதியாக நாயகி கீர்த்திஷெட்டி இருக்கிறார்.ஒரு பொம்மை போல் தோன்றி இளைஞர்களைக் கவரும் அவர் தாய்ப்பாசம் தொடர்பான காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

தன்னுடைய செயலிதான் உலகை ஆள்கிறது என்கிற இறுமாப்போடு வலம்வருகிற கதாபாத்திரம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு.அதற்கு அவர்தான் மிகப்பொருத்தம்.அந்தச் செயலிக்கு ஓர் ஆபத்து சவாலாக ஒருவன் வந்துவிட்டான் எனும்போது நடக்கும் மாற்றத்தை தன் அனுபவ நடிப்பால் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

தரையில் பேசும் கருத்துகளைத் திரையிலும் பேசும் வாய்ப்பு சீமானுக்கு.இயற்கை சூழ் வாழ்வு குறித்த அவருடைய கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடிய இந்தக் கதாபாத்திரத்தை அவரைத் தவிர வேறு யார் செய்திருந்தாலும் அது செயற்கையாக இருந்திருக்கும்.சீமானும் அவர் நடிப்பும் இயற்கையாக அமைந்து பலம் சேர்க்கிறது.

மாறுபட்ட தோற்றத்தில் யோகிபாபு,முதன்முறை கவர்ச்சி காட்டியிருக்கும் கெளரிகிஷன்,நாயகனின் நண்பராக வரும் ஷாரா,நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா மற்றும் ஆனந்தராஜ், சுனில் ரெட்டி ஆகியோரும் நன்று.

2040 எப்படியிருக்கும் என்பதை தன் கருவி மூலம் காட்டி வியக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.திரைக்கதையில் இருக்கும் பலவீனங்களை மறக்கச் செய்கின்றன அவருடைய காட்சிகள்.

படத்துக்கு அடையாளமாக ஏற்கெனவே அமைந்துவிட்டது அனிருத்தின் இசையில் அமைந்த பாடல்கள்.பின்னணி இசையும் திரைக்கதைக்கேற்ப இசைந்திருக்கிறது.

சொல்லப்படுகிற புதியவிசயங்கள் குழப்பமின்றி மக்களிடம் சென்று சேரவேண்டுமென உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர்
பிரதீப் இ.ராகவ்.

கலை இயக்குநர் கண்ணன்.எஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் தங்கராஜ் மற்றும் உடை வடிவமைப்பாளர்கள் பிரவீன்ராஜா, ரினிபாந்த், ஜேகட்லீரிண்டியா, ஷங்ரீஹான் கே.எஸ் ஆகியோர் 2040 ஆம் ஆண்டு இப்படித்தான் இருக்கும் என்று நமக்குக் காட்ட கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

நடை,உடை,பாவனை நாகரிகம் ஆகியன 2040 ஆண்டில் எப்படியிருக்கும்? என்கிற கற்பனையோடு எந்தக்காலத்திலும் காதலின் வலிமை எவ்வளவு? என்பதைச் சொல்ல விழைந்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் சிவன்.அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.