கமல் ஹாசன்,அமலா உள்ளிட்டோர் நடிப்பில் ’பேசும் படம்’ என்ற பெயரில் பேசாத படமெடுத்த அதாவது வசனங்களே இல்லாத படத்தைக் கொடுத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் பல்லாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சிங்கீதம்.
இந்தப்படத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே பாடலாக அமைந்து ஆச்சரியப்படுத்துகிறது.
சிறையில் இருந்து விடுதலையாகும் நாயகன் அயான், அவர் குடும்பத்துக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வருகிறது.அந்த நிலத்தைத் தேடி குபேரபுரம் என்ற ஊருக்கு செல்கிறார்.பாலைவனம் போல் காட்சியளிக்கும் அந்தஊர் மக்கள், தோண்டப்பட்டு இருக்கும் இரண்டு தங்கச்சுரங்கங்களை நம்பி வாழ்கிறார்கள்.அதில் நாயகனுக்கு ஒரு சிக்கல்.அதனால்,
தன் நிலத்திற்கான பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து வெளியேற திட்டம் போடுகிறார்.ஆனால்,அவரது திட்டம் நிறைவேறாதபடியும்,அவரால் அங்கிருந்து வெளியேறாதபடியும் அங்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் அந்த ஊரில் உள்ள அனைவரும் சாதாரணமாக பேசும் வார்த்தைகளை கூட பாடலாகப் பாடும் விநோதமான சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள்.
மக்கள் மட்டும் அல்ல,அந்தஊரில் இருக்கும் கோழி கூட அதிகாலை கூவலை சங்கீத பாணியில் வெளிப்படுத்துகிறது.மக்களும் தங்களது சாதாரண வார்த்தைகளை கூட பாடலாக பாடுவதை,குபேர கடவுள் கொடுத்த சாபம் என்று கருத,அந்த சாபத்தில் இருந்து விடுபட்டார்களா?,பணத்தோடு ஓடிவிட நினைத்த நாயகன் அயானின் திட்டம் நிறைவேறியதா? என்கிற வினாக்களுக்கான விடைதாம் திரைக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அயான், தொடக்கத்தில் கலகலப்பானவராக வலம்வருகிறார்.சொந்த ஊரில் ஏற்படும் மாற்றங்களில் உணர்வுப்பூர்வமாக நடிக்கவேண்டிய கட்டாயம்.அதிலும் குறைவில்லை.
படத்தின் தூணாக இருக்கிறார் நாயகி அகல்யாபம்ரு.மரங்களையும், இயற்கையையும் காப்பதற்கு போராடும் பெரும் பொறுப்பு,துறுதுறு நடிப்பு ஆகியவற்றின் மூலம் ஈர்க்கிறார்.
தங்கச்சுரங்கத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபூடி, சைலஜம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சிவ நாராயணா, பெனர்ஜி, வம்சி ஆகியோர் அளவாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்கள்.
சிறப்புத்தோற்றத்தில் வந்து கவனம் பெறுகிறார் விஜய் தேவரகொண்டா.
முதிர்ந்த வயதிலும், புதிய முயற்சியில் இறங்கி, அதை சரியான முறையில் திரையில் கொண்டு வருவதற்குக் கடுமையான உழைப்பைச் செலுத்தியிருக்கிறார் இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ்.
கதை திரைக்கதை மட்டுமின்றி ஒவ்வொரு காட்சியிலும் உண்மையை பார்க்க முடிகிறது.
மனிதர்கள் தங்களது பேராசை மூலம் இயற்கையை அழித்துக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில் அதே இயற்கையால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கிற ஆழமான கருத்தை, நவீன முறையில் காட்சிப்படுத்தி அவற்றின் அழகை இரசிக்கவும், சொல்லப்பட்டிருக்கும் கருத்து குறித்து ஆழ்ந்து சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.
– இளையவன்
