அறிமுக இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 15 அன்று நடைபெற்றது.
‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்தபடத்தில் அஜய் கார்த்தி,அஞ்சனா நேத்ரன்,நட்டி நட்ராஜ்,
கே.பாக்யராஜ்,சிபி சக்கரவர்த்தி,விடிவி கணேஷ்,அரவிந்த்,சாகுல்,நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்பிற்கு கதிரேஷ் அழகேசன் பொறுப்பேற்க,கலை இயக்கத்தை சண்முகராஜா கையாள,சண்டைப்பயிற்சியை நைஃப் நரேன் வழங்க,நடன இயக்கத்தை சதீஷ் மேற்கொண்டுள்ளார்.இப்படத்துக்குப் பாடல்கள்:யுகபாரதி,விவேக்,கணேஷ் கே.பாபு.
ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன்,கணேஷ் கே.பாபு,கே.செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிடத் திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா.ரஞ்சித்,கார்த்திக் யோகி,விக்னேஷ் கார்த்திக்,மாறன் கார்த்திகேயன்,நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ,கலையரசன்,டி.சிவா,ஃபைவ் ஸ்டார் கதிரேசன்,கமலக்கண்ணன்,ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிமாறன் பேசுகையில்….
டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம்.மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களை பார்த்துவிட்டு..இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாகவேண்டும் என நினைப்போம்.அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த ‘டார்க்’ திரைப்படம் இருக்கும்.
இந்தவருடத்தில் தமிழ்சினிமாவிலிருந்து பத்து முதல் பதினைந்து ஹீரோக்கள் உருவாகிறார்கள்.அதில் ஒரு முக்கியமான இடத்தில் இப்படத்தின் ஹீரோவான அஜய் இருப்பார்.
இந்தப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா,ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.அந்தப்பாடலுக்கு எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார்.இந்தப்பாடலை நாங்கள் படத்தின் புரோமோவிற்காக உருவாக்கியுள்ளோம்.இந்தப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருநாள் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் உடன் பயணிக்கும்போது,அவர் என்னிடம் உங்களின் ஆசை என்ன எனக்கேட்டார்.அப்போது,நான் சினிமாவில் தயாரிப்பாளராக வேண்டும் என சொன்னேன்.உடனடியாக அவர் எழுதிக்கொடுத்த கதைதான் ‘டார்க்’.இப்படத்தின் மூலம் என்னைத் தயாரிப்பாளராக உயர்த்தியவர் இயக்குநர் கணேஷ்.அவருக்கும் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில்….
இந்தப்படத்தின் டிரைலர் வழக்கமானதாக இல்லாமல் சற்று புதிதாக இருந்தது.இன்றைய தேதியில் இரசிகர்கள் ஏதாவது புதிதாக இருக்கிறதா? என்றுதான் பார்க்கிறார்கள்.ஏனெனில் புதிதாக கதை சொன்ன படங்கள் எல்லாம் வெற்றிபெற்று வருகின்றன.அந்தவகையில் ‘டார்க்’ திரைப்படத்திலும் புதிதாக ஏதேனும் ஒரு விசயம் சொல்லப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தத் திரைப்படம் ஒரு இலாபகரமான திரைப்படமாக இருக்கவேண்டும்.ஒரு ட்ரெண்ட் செட்டிங் ஃபிலிமாக அமைந்து,எல்லோருடைய வாழ்க்கையிலும் வசந்தத்தைக் கொடுக்கவேண்டும்.இப்படத்தின் ஹீரோவான அஜய்கார்த்திக்கும் இந்தப்படம் வெற்றிப்படமாக அமையவேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகர் ரியோ பேசுகையில்….
டார்க் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது.பொதுவாக சைக்காலஜிகல் திரில்லர் படங்களுக்கு என இரசிகர்கள் உள்ளனர் என்பார்கள். ஆனால் என்னுடைய ஒப்பினியன் வேறு.இதுபோன்ற சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படங்களுக்கென ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள்.பயந்து பயந்து ஒரு படத்தைப் பார்ப்பது ஒரு குடும்பத்திற்கே பிடிக்கும்.அதற்கான மொமென்ட்ஸ் ட்ரெய்லரில் இருந்தது. ரீசன்டா ‘அப்சஷன்’ என்ற ஒரு பத்துகோடியில் எடுத்த படம்,1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.தமிழில் இது போன்றதொரு படங்கள் வராதா என்ற ஏக்கம் நமக்கும் இருக்கும்.அந்தவகையில்,ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் ‘டார்க்’ படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
‘டாடா’ படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியைப் பார்த்தவர் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் கே பாபு.இந்தப்படத்தில் அவர் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.அதுவும் அவருடைய திறமைக்குப் பொருத்தமானதுதான்.தயாரிப்பாளராகவும் அவர் மிகப்பெரிய வெற்றிகளை பெறவேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில்….
டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபு என்னிடம் வந்து கதை சொன்னார்.நான் ஃபேமிலி சென்டிமென்ட் சம்பந்தமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன்.ஆனால் அவர் ‘டார்க்’ படத்தின் கதையைச் சொன்னார்.கேட்டதும் இப்படத்தின் ஹீரோ யார்? என்று கேட்டேன்.அஜய் கார்த்தி நடிக்கிறார் என்றார்.இந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்துவிடுவாரா? புதுமுகமாச்சே? என்று கேட்டேன்.ஆனால் இப்படத்தினை டப்பிங் செய்யும்போது பார்த்தேன்.அஜய் கார்த்தி அற்புதமாக நடித்திருக்கிறார்.
ஃபைவ் ஸ்டார் செந்தில் கமர்சியல் படங்களை வெளியிட்டாலும்,கன்டென்ட் உள்ள படங்களையும் வெளியிடுகிறார்.இதற்காக அவருக்கும் நன்றி.
இப்படத்தினை திரையில் பார்த்தபோது குழுவினரின் உழைப்பைத் தெரிந்து கொண்டேன்.இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்….
அஜய் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் இது.இதன் ட்ரெய்லர் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது.திரையில் அவரது லுக் அண்ட் பிரசன்ஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது.அவருக்கு வாழ்த்துகள்.
இந்தப்படம் திரில்லராக இருப்பதால் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உருவான பாடல் நன்றாக இருந்தது.
இயக்குநராக இருந்து தயாரிப்பாளராகி இருக்கிறார் நண்பர் கணேஷ் கே பாபு.தற்போது நிறையப் படங்களைத் தயாரிக்கிறார்.தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக அறிமுகம் செய்வது மிகவும் முக்கியமான விசயம்.அதனால் அவருக்கும் என் வாழ்த்துகள்.
நம்முடன் இருப்பவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நல்லவிசயம்தான்.ஆனால் இதில் ரிஸ்க் அதிகம்.இது சாதாரண விசயமும் அல்ல.படத்தைத் தயாரிப்பது என்பது எளிதானதல்ல.கதையை நம்பி முதலீடு செய்து அந்தப்பணம் திரும்ப வருமா?வராதா? என்ற தவிப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கும்.தயாரிப்பாளர் என்பதால் அது எனக்கும் தெரியும்.
ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்றவர்கள் படங்களைத் தயாரித்து வெற்றிபெற வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன்.அதிலும் சின்னபட்ஜெட்டில் படங்களைத் தயாரித்து வெற்றி பெறுவது ரொம்ப அவசியம் என்று நினைக்கிறேன்.எப்படி தமிழக சூழலில் அரசியலில் மாற்றம் வந்ததோ அதேபோல் தமிழ்த்திரையுலகத்திலும் சின்னப்படங்கள் வெளியாகி, தியேட்டர்களை நோக்கி மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. ‘பிளாஸ்ட்’, ‘சிறை’ போன்ற படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நல்லவசூல் செய்திருக்கிறது.பெரிய பட்ஜெட் படமான ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற்றிருக்கிறது.அண்மையில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு கூட ஏராளமானவர்கள் வருகை தந்து பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருந்தது.
தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாகப் பார்க்கிறேன்.மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் நல்லபடங்களை உருவாக்கினால்.. நிச்சயமாக நல்ல இலாபத்துடன் கூடிய வெற்றி கிடைக்கும்.அந்தவகையில் டார்க் திரைப்படமும் நிச்சயமாக பெரியவெற்றியைப் பெறும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசுகையில்….
நான் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டேன்.மிக நன்றாக இருக்கிறது.இந்தப்படத்தை திரையரங்குகளில் பார்த்து இரசித்து ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகை அஞ்சனா நேத்ரன் பேசுகையில்….
டார்க் படத்தின் மூலம் நான் அறிமுகமாகிறேன்.முதல்படத்திலேயே கே பாக்யராஜ்,நட்டி நட்ராஜ்,வி.டி.வி கணேஷ் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன்.இதுவே எனக்குக் கிடைத்த ஆசியாகக் கருதுகிறேன்.ஹீரோ அஜய் கார்த்திக் கடும் உழைப்பாளி.மிகவும் இனிமையானவர்.அப்பாவி.என்னைவிட அவர் ரொம்ப அப்பாவி.அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்கமுடியாததாக இருந்தது.
என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும்,இயக்குநருக்கும் நன்றி.என்னுடைய அடுத்தபட வாய்ப்பையும் தயாரிப்பாளர் கணேஷ் பாபு வழங்கியிருக்கிறார்.இந்தப்படம் இரசிகர்களுக்குப் பிடிக்கும்.அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்றார்.

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசுகையில்…
இந்தப்படத்தின் குழுவினர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.இவர்களுடன்தான் என்னுடைய அடுத்தபடத்தில் இணைந்து பணியாற்றுகிறேன்.அதனால் இந்தவிழாவிற்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
டார்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது.அதிலும் விஷுவல்ஸ் அட்டகாசமாக இருந்தது.எழுத்து நன்றாக இருக்கிறது. அதனால் இந்தப்படம் நிச்சயமாக பெரியவெற்றியைப் பெறும்.இதற்காக படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அஜய் கார்த்தி இந்தப்படத்தில் நன்றாக வேறலெவலில் நடித்திருக்கிறார்.தமிழ்த் திரையுலகிற்கு நல்லதொரு நடிகர் கிடைத்திருக்கிறார். தமிழ்சினிமாவின் நியூ சாக்லேட் பாய்.அவருடைய சிரிப்பு கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
நட்டி நட்ராஜ் உடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை.விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.
இப்படத்தின் தயாரிப்பாளர்களான கணேஷ் கே பாபு மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றார்.
நடிகர் அஜய் கார்த்தி பேசுகையில்….
இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மேடை.டார்க் ஒரு படம் என்பதைக் கடந்து எனக்கு ஒரு பாடம் என்றும் சொல்லலாம்.சினிமாவைப் பற்றி முறையாக கற்றுக்கொண்டதே இந்தப்படத்தின் படப்பிடிப்பில்தான்.இந்தப்படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமான
ஏ பி வி மாறன் மற்றும் கணேஷ் கே பாபு ஆகிய இரண்டுபேருக்கு நான் நன்றி சொல்கிறேன்.
‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே பாபு வேறொரு பிரபலமான நடிகரை வைத்து படம் இயக்கியிருக்கலாம். ஆனால் இது போன்றதொரு எக்ஸ்பிரிமென்டல் படத்தை புதுமுகங்களை நம்பித் தயாரிக்க முன்வந்ததற்கு நன்றி.இந்தப்படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார்.அதற்கும் எங்களது வாழ்த்துகள்.
அவரும் நானும் சில வருடங்களாக இணைந்து பயணித்திருக்கிறோம்.அதில் பல சுவாரசியமான சம்பவங்கள்- வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.
படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கே செந்தில்.என் அப்பா.அவருக்கு எத்தனை மேடைகளில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.அவரிடம் தொடக்கத்தில் பேய்ப்படம் என்று சொன்னதும் அவர் பின்வாங்கினார்.மகனை இப்படி ஒரு சீரியஸான பேய்ப்படத்தில் அறிமுகப்படுத்த வேண்டுமா? என யோசித்தார்.அதன்பிறகு எங்களது குழுவினரின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு அனைத்துவகையிலும் உதவிசெய்து வருகிறார்.
இயக்குநர் கல்யாண் கே.ஜெகனுடன் மூன்றாண்டுகளாகப் பயணித்திருக்கிறேன்.அவருடைய சமயோஜிதபுத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்புத் தளங்களில் எத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை எல்லாம் தன்னுடைய திறமையால் சீர்செய்து
படக்குழுவினருக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்கக்கூடியவர்.எதற்கும் டென்ஷன் ஆகவே மாட்டார்.
படப்பிடிப்புத்தளத்தில் என்னுடைய சின்னச்சின்ன அசைவுகளையும் துல்லியமாகக் கவனித்து அதனை எப்படி மேம்படுத்த வேண்டும் என்ற விசயங்களை நட்டிநட்ராஜ் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.அவரது இந்த அணுகுமுறை எனக்கு உற்சாகத்தை அளித்தது.
டார்க் ஒரு எக்ஸ்பிரிமென்டல் சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது.தியேட்டருக்கு வருகைதரும் இரசிகர்களுக்கு புதுவகையான அனுபவத்தை வழங்கவேண்டும்.அடுத்து என்ன? என்பதை யூகித்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு படத்தைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்து,இதனை உருவாக்கியிருக்கிறோம். இந்தப்படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள்.பார்த்தபிறகு உங்களுடைய விமர்சனங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுங்கள்.உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் பேசுகையில்….
எனக்கும் இது முதல்மேடை.இந்தமேடையில் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது மாஸ்டர் இயக்குநர்
கணேஷ் கே.பாபுவிற்கு நன்றி.அவர் ஒரு குறும்படத்தில் நடித்தபோது என்னை முதல்முதலில் மானிட்டரில் பார் என்று சொன்னார். அதன்பிறகு அவருடைய தயாரிப்பில் முதல்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்தது மிகவும் சந்தோசம்.
தயாரிப்பாளர் மணிமாறன்- மிகவும் இன்ட்ரஸ்டிங்கான மனிதர்.படத்தை வணிகம் செய்வதில் தேர்ந்தவர்.இந்தப்படத்தில் நட்சத்திரங்களை நடிக்கவைத்ததில் அவருடைய பங்களிப்பும் உண்டு.முதல்படத்தில் இந்த இருவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.இதுவே இந்தப்படம் உருவாகக் காரணமாகவும் இருந்தது.
இந்தப்படத்தில் அஜய் கார்த்திதான் ஹீரோ.அவரும் புதுமுகம்.நானும் புதுமுகம்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருப்போம்.அதைத்தொடர்ந்து ஹீரோயின் அஞ்சனா.அவர்களும் புதுமுகம்.நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்துக்கொண்டே எங்களால் என்ன செய்யமுடியுமோ அதை திரையில் செய்திருக்கிறோம்.
நட்டி நட்ராஜ் பேசும்போது படப்பிடிப்புத்தளம் அமைதியாக இருக்கும் என்று சொன்னார்.அவர் வரும்போது நாங்களே படப்பிடிப்புத்தளத்தை அமைதியாக்கி விடுவோம்.எங்களுடன் நீண்டநாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்தப்படத்தின் ஒட்டுமொத்தக் கதையும் அஜயை மையப்படுத்திதான் இருக்கும்.படப்பிடிப்புத்தளத்தில் நாங்கள் சொன்னதை அவர் புரிந்துகொண்டு நடித்தார்.
இந்தப்படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.அதற்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் கணேஷ் கே.பாபு பேசுகையில்….
டாடா படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நிறைய பேசமுடியவில்லை.பெரும் மனஅழுத்தத்தில் இருந்தேன்.அந்தத்தருணத்தில் டாடா படத்தின் வெற்றியையும் என்னால் சுவைக்க முடியவில்லை.அதேசமயத்தில் நான் மேடையில் அதிகமாகப் பேசும் நபரும் கிடையாது. ஆனால் இந்தமேடையில் நிறையப் பேசவேண்டும் என நினைத்திருக்கிறேன்.
13 வயதில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யவேண்டும் என்று எண்ணினேன்.அதற்காக படிக்கவேண்டும் என்றார்கள்.படித்தேன்.உதவிஇயக்குநராகப் பணியாற்றவேண்டும் என்று சொன்னார்கள்.உதவிஇயக்குநராகப் பணியாற்றினேன்.நிறைய இடங்களுக்குச் சென்று நிறையபேரைச் சந்திக்கவேண்டும் என்றார்கள். சந்தித்தேன்.அதன்பிறகு குறும்படம் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள்.குறும்படத்தை இயக்கினேன்.மியூசிக் வீடியோ செய்யவேண்டும் என்றார்கள்.அதையும் செய்தேன்.எல்லாவற்றையும் செய்தேன்.ஆனால்,என்னால் இயக்குநராக முடியவில்லை. எங்கோ ஒரு சிறிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது.கோவிட் காலகட்டத்தில் அனைவரும் முடங்கிவிடுகிறோம்.கோவிட் முடிந்தபிறகு நமக்கு சினிமா வராது என்று நினைத்து,பத்துவருடமாக நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோமோ? என நினைத்தேன்.அதனால் இதனை விட்டுவிட்டு,வேறு வேலைக்குச் சென்றுவிட்டேன்.
அந்ததருணத்தில் ஒரு போன் வருகிறது.டாடா படத்தின் கதையைச் சொல்கிறேன்.அந்தக்கதையைச் சொல்லி முடித்தவுடன் ஒரேநாளில் அதனை படமாக உருவாக்கவேண்டும் என்ற பணிகள் நடைபெற தொடங்குகிறது.
தயாரிப்பாளரும் இந்தப்படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் நிறைவு செய்யவேண்டும் என்கிறார்.தயாரிப்பாளராக மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் நானும் அந்தவேலையை செய்யவேண்டியிருந்தது.பட்ஜெட்டில் எங்கெல்லாம் தயாரிப்பாளருக்கு செலவைக் குறைக்கமுடியும் என்பதைப் பார்த்துப் பார்த்துச் செய்தேன்.
கல்யாண் என்னுடைய நண்பர்.நானும் அவனும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்களாக இருக்கிறோம்.என்னுடன் இணைந்து பயணித்தான்.எப்போது அவன் என்னுடைய உதவியாளராக மாறினான் என்று எனக்குத் தெரியாது.அவன் நல்லவேலையை பார்த்துக் கொண்டு,நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தான்.அவனது வேலையை நான்தான் கெடுத்தேன்.
அவரிடம் நான் வேலை செய்வதற்கு ஒரு ஆபீஸ் வேண்டும் என்று கேட்டேன்.உடனே அவனுடைய ஆபீஸில் ஒருபக்கத்தை ஒதுக்கிக் கொடுத்தான்.நாளடைவில் அது என்னுடைய ஆபீசாக மாறிவிட்டது.கொஞ்சநாளில் அவனும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்கத் தொடங்கிவிட்டான்.இதுபற்றிக் கேட்டபோது நீ முதலில் இயக்குநர் ஆகு.மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
கல்யாணின் மனைவியிடம்,இவன் ஒருநாள் நிச்சயம் பெரிய ஆளாகிவிடுவான் என்று சொன்னேன்.இன்று அது நடந்துவிட்டது.
டாடா படத்தின் ரஃப் கட் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது செந்தில் சார் வந்தார்.அந்தத்தருணத்தில் அவர் யார் என்றுகூட எனக்குத் தெரியாது.அவரை தயாரிப்பாளர் அழைத்து வந்தார்.நான் சினிமாவைபற்றி படித்திருக்கிறேன்.ஆனால்,ஒரு சினிமாவுக்குள் எப்படி இருக்கவேண்டும் என்பது தெரியாது.செந்தில் சார் வந்து படத்தை பார்த்துவிட்டு சென்ற அடுத்த நாள்,என் வாழ்க்கை மாறிவிட்டது.அது என்ன மேஜிக் என்று எனக்குத் தெரியவில்லை.இவர் வந்து சென்ற அடுத்தநாள் என்னிடம் எல்லோரும் வேறுமாதிரியாக நடந்துகொள்ளத் தொடங்கி விட்டனர்.முதன்முதலாக டாடா படத்தை அங்கீகரித்தவர் செந்தில்சார்தான்.இந்த செந்தில் சார் இருக்கும் தைரியத்தில்தான் நான் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கிறேன்.அவருக்கும் நன்றி.
இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான்.இன்று நான் திரைத்துறையில் நல்லதொரு இடத்தில் இருக்கிறேன்.நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரியவிசயம் இல்லை.எந்தப்பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள்.அதனால் தான் டார்க் என்பது ‘டாடா’ படத்திற்கான தேங்க்ஸ்தான்.
இந்தப்படத்தின் கதையை நான் தனுஷ்சாரை மனதில் நினைத்து எழுதினேன்.ஆனால் இதில் நடிப்பதற்கு அஜய் முன்வந்து நிற்கிறார். நான் கல்யாணிடம் கேட்கிறேன்.அஜய் ஓகேவா என்று.நேர்மையாகச் சொல்லவேண்டும் என்றால்,எனக்கு அஜய் மீது சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.படப்பிடிப்பு முடிந்ததும் அன்றைய காட்சிகளை பார்த்துக்கொண்டே இருப்பேன்.ஒருநாள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு என்றார்கள்.நான் கிளைமாக்ஸை படமாக்குவதை பார்க்கவேண்டும் என்று விரும்பினேன்.அந்தக்காட்சியைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.அப்போது நான் படப்பிடிப்புத்தளத்திற்குள் செல்கிறேன்.மிகவும் அமைதியாக இருக்கிறது.அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.அஜய் நடித்துக் கொண்டிருந்தார்.இயக்குநர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைத்துவிட்டது.கல்யாணும் ஓகே சொல்லிவிட்டார்.ஆனால் அஜய் அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்து ஒன்மோர் இன்னொருடேக் போகலாமா என்று கேட்டார்.எனக்குப் புரியவில்லை.அஜயிடம் நேரமாகிறது.இயக்குநர் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. போதும் என்றேன்.இறுதியில் இயக்குநரை சமாதானப்படுத்தி அதேகாட்சியை மீண்டும் ஒருமுறை நடிப்பதற்காக அவர் செல்கிறார்.நான் அப்போது கோபத்துடன் தனியாகச் சென்று அமர்கிறேன்.அந்தக்காட்சியில் மீண்டும் நடித்துமுடித்துவிட்டு இயக்குநர் ‘கட் ‘சொன்னவுடன் என் முகத்தில் செருப்பால் அடித்ததுபோல் இருந்தது.எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது அந்த ஷாட்தான்.இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய படப்பிடிப்பில் நடிகர்கள் யாராவது நம்பிக்கையுடன் இன்னொருடேக் கேட்டால் நான் அதை அனுமதிக்கிறேன்.இந்த விசயத்தை நான் அஜயிடம் கற்றுக்கொண்டேன்.
இந்தப் படமே அஜய்தான்.அவர் கேரக்டர் மேல் ட்ராவல் ஆகும் கதை இது.இந்தப்படம் அஜயின் முதல்படம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.அந்த அளவிற்கு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த மாதம் ‘டார்க்’ வெளியாகிறது.அடுத்தமாதம் ‘கராத்தே பாபு’ வெளியாகிறது.அதற்குப்பிறகு’ப்ளடி பாலிடிக்ஸ்’ படம் வெளியாகிறது.தொடர்ந்து மூன்றுமாதங்களில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.
