இந்தியாவின் தேசிய விளையாட்டு மட்டைப்பந்து எனும் கிரிக்கெட்தான் என்கிற மூடநம்பிக்கை பெரும்பாலானோருக்கு இருக்கிறது.அந்த அளவுக்கு விளம்பரங்கள் செய்து ஊதிப்பெரிதாக்கப்பட்ட விளையாட்டு அது.அதன் கெடுவிளைவுகள் எவ்வளவு? என்பதைத் துணிவுடன் எடுத்துச் சொல்லியிருக்கும் இணையத் தொடர் மம்பட்டியான் ஸ்டார்ஸ்.

இந்தத் தொடரின் நாயகர்கள்,வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகிய மூவரும் மட்டைப்பந்து வீரர் தோனியின் தீவிர இரசிகர்கள்.அவர் விளையாடும் கடைசி போட்டியைப் பார்க்கச் செல்லவேண்டும் என வெறிகொள்கிறார்கள்.அதற்காக சட்டத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பான செயல்களைச் செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை.அப்படிச் செய்து பெற்ற நுழைவுச்சீட்டுகள் போலியானவை.அதன்பின் மீண்டும் நுழைவுச்சீட்டு பெற பணம் திரட்ட முயல்கிறார்கள்.அதனால் சிக்கல்கள் ஏற்படுகின்றன.அவற்றைக் கடந்து போட்டியை நேரில் பார்த்தார்களா? இல்லையா? என்பதை சுவையாகச் சொல்லியிருக்கிறது இந்தத் தொடர்.

நாயகர்களாக நடித்திருக்கும் வைபவ் முருகேசன்,வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகியோர் உண்மையான விளையாட்டு வீரர்கள் போலவே மாறியிருக்கிறார்கள்.ஒரு குழு அமைத்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறார்கள்.அபோது நடக்கும் நிகழ்வுகள் அப்படியே நம்ம ஊர் மைதானங்களில் காண்கின்ற காட்சி போலவே இருக்கின்றன.அந்த அளவுக்குப் பொருத்தமாக நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

தொடரின் நாயகி லாவண்யா அன்பழகன்,கதையில் நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருக்கிறார்.ஆண்களை மட்டுமே வைத்து கதை சொன்னால் வறட்சியாக இருக்கும் என்று இவரை வைத்திருக்கிறார்கள்.அதேநேரம்,அவருடைய கதாபாத்திரம் மூலம் பெண்களின் வாழ்நிலையை அழகாகப் பிரதிபலித்திருக்கிறார்கள்.தன் நடிப்பால் அதற்கு வலுச்சேர்த்திருக்கிறார் லாவண்யா அன்பழகன்.

விவேக் பிரசன்னா,சம்பத் ராம்,நான் கடவுள் ராஜேந்திரன்,சரத் ரவி, ஹலோ கந்தசாமி ஆகியோரின் அனுபவ நடிப்பினால் அவரவர்க்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் மனதில் பதிகின்றன.

ஒருபக்கம்,கிராமப்புறம்,அங்கு வாழும் மக்கள்,அந்த நிலப்பரப்பு இன்னொருபக்கம் நகர்ப்புறம் அதன் நடவடிக்கைகள் ஆகியனவற்றை காட்சிகளிலும் வெளிப்படுத்தி திரைக்கதைக்கும் தொடரின் பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.எம்.ராஜ்குமார்.

இணையத் தொடர் ஆறு பாகங்களாக இருக்கின்றன என்றவுடன் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான பின்னணி இசை கோர்க்கவேண்டும் என்று முடிவு செய்து செயல்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் பரத் தனசேகர்.அது நன்றாகப் பலன் கொடுத்திருக்கிறது.எவ்விடத்திலும் சலிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

தொடர் எனும்போது ஒரு பாகம் முடிந்ததும் விட்டுவிட்டு இன்னொரு பக்கம் மக்கள் திரும்பிவிடக் கூடிய பேராபத்து இருக்கிறது.அப்படிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக,அடுத்து என்ன? என்கிற ஆர்வம் கொப்பளிக்கும் நேரத்தில் பாகத்தை முடித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பவித்ரன்.கே.

கலை இயக்குநர் பி.தமிழ்செல்வன்,போலிகளையும் உண்மை என நம்பவைத்திருக்கிறார்.

கதை மற்றும் திரைக்கதையை சவிர் சுதாகர்,நவீன் ராஜ்குமார்,கலைச்செல்வன்,வினு கார்த்திகேயன் ஆகிய நால்வர் எழுதியிருக்கிறார்கள்.ஒருவேளை இது இவர்களுடைய சொந்த அனுபவமோ? என்று எண்ணுமளவுக்கு உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதியிருக்கிறார்கள்.இந்த விளையாட்டின் மீதும் வீரர்கள் மீதும் பைத்தியமாக இருப்பவர்களுக்கு இவர்கள் எழுத்து அருமருந்து.

எழுதிய நால்வரில் ஒருவரான சவிர் சுதாகர் இயக்கியிருக்கிறார்.ஒரு பக்கம் இந்த விளையாட்டு மற்றும் வீரர்கள் மீது பக்தி வைத்திருக்கும் மக்கள் இன்னொரு பக்கம் இந்த விளையாட்டையும் மக்களின் மூடநம்பிக்கையையும் மூலதனமாக வைத்து திட்டமிட்டு நடத்தப்படும் மோசடிகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இணையத் தொடர்.

– இளையவன்

குறிப்பு – இந்தத் தொடர் ஜூன் 26,2026 முதல் ஜீ5 தமிழ் இணையதளத்தில் காணக்கிடைக்கிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.