விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்பட்ட ஜனநாயகன், “லாஸ்ட் ஒன் டைம்” ஹேஸ்டாக்குகளில் கண்ணீர் எமோஜிகள் கரைபுரண்டு ஓடுகின்றன. பட க்ளைமேக்ஸ் முடிந்து அவரது பழைய படங்களின் ரீவைன்ட் ஷாட்ஸ் ஓட்டப்படும்போது, தியேட்டரில் விஜய்யின் கடைசிப் படம் பார்க்கிறோம் என்பதை நினைத்து அவரது அமைச்சர்கள் சிலர் அழுகிற ரீல்ஸ்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகின்றன. அமைச்சர்களே அடக்கமுடியாமல் அழுகிறார்கள் என்கிறபோது அவரது ரசிகர்களின் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியுமா? ஆனால் என்ன செய்வது ? ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெறமுடியும் என்பதுதானே உலகநியதி? அதிலும் விஜய் கோடம்பாக்கம் என்னும் குறு நிலத்தை இழந்து தமிழகம் என்னும் பெரும் நிலத்தை அல்லவா கைப்பற்றியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் என்கிற அரியாசனையைத் துறந்து தமிழக முதல்வர் அரியாசனையில் விஜய் அமர்ந்திருக்கும் நிலையில், கோடம்பாக்கத்தின் மில்லியன் டாலர் கேள்வி “யார் அடுத்த விஜய்?” என்பது தான்.அஜித்திற்கு வாய்ப்பு இருக்கா…இந்த கேள்விக்கான விடையைத் தேடும் முன் விஜய்யின் போட்டியாளரான அஜித் குறித்த சில தகவல்களைத் தெரிந்து கொள்வதும் அவசியம்.2025 ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸான “குட் பேட் அக்லி”க்குப் பின்னர் அஜித் புதிய படம் எதிலும் நடிக்கவில்லை. அவரது கவனம் முழுக்க கார் ரேஸ்… கார் ரேஸ்… கார் ரேஸ்தான். படம் நடிக்காத இந்த ஒன்றரை ஆண்டு இடைவெளியில் அவர் கலந்து கொண்ட, கலந்து கொள்ளவிருக்கும் பல கார் ரேஸ் அட்டவணைகள் தான் அடுத்தடுத்து வெளியானவே தவிர, அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து அதிகாரபூர்வமான ஒரு செய்தி கூட இதுவரை வந்ததில்லை.
ஸோ… விஜய் இடம் போலவே அஜித் இடமும் காலியாகத்தானே இருக்கிறது. இருவர் இடத்தையும் நிரப்பப்போவது யார், யார் என்றே விவாதித்து விடலாமே என்றுதானே யோசிக்கிறீர்கள்.அன்புக்கட்டளை</u>அதுதான் இல்லை. அஜித் தனது ரேஸ் காரில் யூடர்ன் அடித்து மிக விரைவில் கோடம்பாக்கம் திரும்புகிறார். அவருக்கு அப்படி ஒரு யோசனையைச் சொன்னதே அவரது நண்பரும், முதல்வருமான விஜய்தான் என்கிறார்கள். “நண்பா கார் ரேஸ் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ் சினிமாவின் “சூப்பர்” இடம் உனக்காக காத்திருக்கு. சீக்கிரம் அடுத்த படத்தைத் துவங்கு” என்பதுதான் அஜித்துக்கு விஜய்யின் அன்புக்கட்டளை” என்கிறார்கள்.
விஜய்யின் அந்த யோசனையை ஏற்று முழு மூச்சாக படங்களில் நடிக்க அஜித் முடிவெடுத்திருக்கும் நிலையில், அடுத்த முதல் படத்தை அவரது காதல் மனைவி ஷாலினியே தான் தயாரிக்கிறார். நிர்வாகத் தயாரிப்பு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா. “கு.பே.அ”(குட் பேட் அக்லி) ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவிருக்கும் இப்படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதி வாரத்தில் துவங்கவிருக்கிறது. அடுத்த பட அறிவிப்புகளும் அடுத்தடுத்து வரும் என்கிறார்கள். ஆக மீண்டும் களத்தில் அஜித் என்கிறபோது, அடுத்த விஜய் யார் என்கிற கேள்வி மட்டுமே இப்போதைய டாபிக். வேறு யாருக்கு வாய்ப்பு விஜய், அஜித் தாண்டி எல்லோருக்கும் மேலே இருக்கிறவர்கள் என்கிற வகையில் கமலும், ரஜினியும் இந்த ஏரியாவுக்குள்ளேயே வரமாட்டார்கள். இவர்கள் தவிர்த்து இன்று தமிழ் சினிமாவின் டாப் டென் நடிகர்கள் பட்டியலிட்டால் அதில் தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், சிம்பு, விஷால், ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர்தான் இருக்கிறார்கள். இந்த லிஸ்டில் பிரதீப் ரங்கநாதனையும் விட்டுவிட முடியாது. தொடர்ந்து மூன்று 100 கோடி வசூல் படங்கள் கொடுத்தவராயிற்றே?
இவர்கள் அனைவருக்குமே வியாபார ரீதியாக ஒரு மார்க்கெட் இருக்கிறது. சாடிலைட், ஓ.டி.டி வியாபாரங்களும் இருக்கின்றன. ஆனால் விஜய் இடம் காலியான பின்னர் நடக்கவிருக்கும் ரேஸில் எந்த அளவுக்கு பிட்னெஸ்சில் இருக்கிறார்கள்? விஷால், ஜெயம் ரவி, ஆர்யா, கார்த்தி ஆகிய நால்வருமே சொல்லிக் கொள்ளும்படி நல்ல ஹிட் கொடுத்து ரொம்ப நாளாச்சி என்பதால் ” நல்லா வார்ம் அப் பண்ணிட்டு அப்புறமா வாங்க பாஸ்” என்று கொஞ்சமும் யோசிக்காமல் ஸ்டேடியத்துக்கு அனுப்பிவிடலாம். பிரதீப்பின் திரைப்பயணம் கொஞ்சகாலமே என்பதால் அவர் இன்னும் சில படங்கள் பயணிக்க வேண்டியுள்ளது.விக்ரமா… சூர்யாவா…அடுத்தவர் விக்ரம். நடிகராக கமலுக்கு அடுத்து தமிழ் சினிமா கொண்டாடும் கலைஞர் என்றாலும் ஷங்கரின் “ஐ”க்குப் பின்னர் கடந்த 11 வருடங்களாக கமர்ஷியல் வெற்றி கொடுக்க முடியாமல் தவிக்கிறார். நடுவில் அவருக்கு வாய்த்த ஒரே ஒரு வெற்றியான “பொன்னியின் செல்வன்” மணிரத்னத்தின் படம் என்று ஆகிவிடுகிறது. போதாக்குறைக்கு படத்தில் இன்னும் சில முன்னணி நடிகர்களும் இருந்தார்கள். ஸோ அந்த வெற்றி வெறுமனே விக்ரம் கணக்கில் மட்டுமே வராது.
சூர்யாவுக்குமே “கருப்பு”க்கு முன்னர் அவரது இருப்பே கவலைக்குரியதாயிருந்தது. நடுவில் தெலுங்கு, மலையாளப் படங்கள் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருப்பதும் அவருக்கு மைனஸ். அடுத்தடுத்து இன்னும் ரெண்டு ஹிட்கள் கொடுத்தால்தான் பைனல்ஸ் லிஸ்டுக்குள் வரமுடியும்.விஜய் சேதுபதியா… சிம்புவா…விஜய் சேதுபதியின் ப்ளஸ், மைனஸ் ரெண்டுமே அவர் கதாநாகனாக மட்டுமின்றி வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடிப்பது. “விஜய் இடத்துக்கு நடக்கப் போற ரேஸ்ல கலந்துக்குறீங்களா பாஸ்?” என்று கேட்டால் ” அய்யோ ஆளை விடுங்க பாஸ்” என்று அவரே அலறி அடித்து ஓடி விடுவார்.
முன்னணி இடத்துக்கு வருவதற்கான அத்தனை தகுதிகள் இருந்தாலும் பின்னணியிலேயே இருந்து கொண்டிருப்பவர் சிம்பு என்கிற ஆதங்கம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சக திரைக்கலைஞர்களுக்கே உண்டு. வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் “அரசன்” இவரை நிச்சயமாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லக்கூடும். ஆனால் அறிவிக்கப்படுகிற படங்களில் பாதிப்படங்கள் டிராப் ஆகிற நிலை முடிவுக்கு வந்தால்தான் சிம்பு தெம்பாக முடியும். என்பதே இப்போதைய நிலவரம்.
தனுஷா… சிவகார்த்திகேயனா…
ஆக இப்போதைய நிலவரப்படி ரேஸ் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மத்தியில்தான் தனது 22 ஆண்டுகால சினிமா பயணத்தில் “காதல் கொண்டேன்” துவங்கி இன்றுவரை டாப் டென் லிஸ்டில் நீக்கமற நிறைந்து வந்தவர். தரமான படங்கள் செய்துவரும் அதேவேளை அவர் மசாலா படங்களையும் விட்டு வைப்பதில்லை. ஹிந்திப் படங்கள் பக்கமும் சில சாதனைகள் செய்துள்ளார். தேசிய விருதுகள் அவருக்கு இன்னொரு ப்ளஸ். “அமரன்” இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் “ஓம்”, வெற்றிமாறனுடன் “தமிழ் முருகன்” தொடங்கி கைவசம் அரை டஜன் முன்னணி இயக்குநர்களை தனது அடுத்த படங்களுக்காக கஸ்டடியில் வைத்திருப்பது இவருக்கு இன்னொரு ப்ளஸ்.
தனது 15 ஆண்டுகால திரையுலக பயணத்தில் நடித்த 25 படங்களில் பாதிக்கும் மேல், அதாவது 15 ஹிட் படங்கள் கொடுத்த பெருமை சிவகார்த்திகேயனுக்கு உண்டு. அதிலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய “அமரன்” சி.காவை அவரது கேரியரின் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. கமல் தயாரிப்பில் “தாய்கிழவி” இயக்குநர் சிவகுமார் முருகேசனின் இயக்கத்தில் அவர் நடித்து வரும் “சேயோன்” படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. “கோட்” படத்தில் விஜய் தனது துப்பாக்கியை சிவாவுக்கு கைமாற்றிக் கொடுத்து, “இனிமே என் வேலையை நீ பாத்துக்கோ” என்று சொன்னது இப்போது சி.காவுக்கு மிகப்பெரிய எனர்ஜி பூஸ்டராக இருக்கும். ஆனாலும் “கில்லி” தொடங்கி “மாஸ்டர்” “பீஸ்ட்” “தெறி”, “கோட்” என்று விஜய் கொடுத்த வெறி ஹிட்களைத் தொட்டு அவரது இடத்துக்கு இவர்கள் வர அடுத்த தேர்தல் வரை கூட ஆகலாம்.
