கோவாவில் இந்திய விடுதலைக்கு முன்னால் நடக்கிற கதை.மிகப்பெரிய கடத்தல்மன்னனிடம் வேலை செய்கிறார் கதாநாயகன் யாஷ்.அந்த கடத்தல்மன்னனின் மகளை யாஷுக்கு திருமணம் செய்ய முடிவாகிறது.அதேநேரம் இன்னொரு பெண்ணுடன் யாஷுக்கு உறவு ஏற்படுகிறது.அதனால் ஒரு குழந்தையும் பிறக்கிறது.இதனால் பல சிக்கல்கள்.ஒரேநேரத்தில் உள்ளும் புறமும் பல நெருக்கடிகள் மட்டுமின்றி தாய் போல் வளர்த்த அக்காவையும் இழக்கிறார் யாஷ்.அதனால் அவர் எடுக்கும் அதிரடி முடிவால் அவருடைய வாரிசே அவருக்கு எதிராக மாறும் நிலை.அதனால் என்னென்னவெல்லாம் நடக்கின்றன? என்பதையெல்லாம் இரத்தமும் கொலையுமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகன் யாஷ் இரண்டு வேடங்கள் ஏற்றிருக்கிறார்.அப்பா வேடத்துக்காக இரண்டுவித தோற்றங்களில் வருகிறார்.அடர்ந்த தாடி மீசையில்லாமல் மகன் வேடம் அமைந்திருக்கிறது.அவருடைய அறிமுகக்காட்சியிலிருந்து கடைசிவரை அவர் பிம்பத்தை உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கியாரா அத்வானி,தாரா சுதாரியா,ருக்மிணி வசந்த் ஆகிய மூவரும் யாஷ் வாழ்க்கையில் வரும் பெண்கள்.இவர்களில் கியாரா அத்வானியின் பழியுணர்ச்சி படத்தை நகர்த்திச் செல்லும் உந்துசக்தியாக இருக்கிறது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.

யாஷின் அக்காவாக நடித்திருக்கும் நயன்தாராவுக்கு முக்கியமான கதாபாத்திரம்.அதற்குப் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

ஹூமாகுரேசி எதிர்மறை வேடமேற்றிருக்கிறார்.கச்சிதமாக நடித்திருக்கிறார்.

டாரல்டிசில்வா,சுதேவ்நாயர் உள்ளிட்டு படத்தில் நிறைய நடிகர்கள்.அவரவர் வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜீவ்ரவியின் உழைப்பில்,காட்சிகள் மிரட்சி தருகின்றன.

ரவி பஸ்ரூர்,விஷால் மிஸ்ரா,தனிஷ்க் பாக்சி ஆகிய மூவர் இசையமைத்துள்ளனர்.பாடல்கள் மற்றும் பின்னணி இசை அளவாக அமைந்திருக்கின்றன.

ஜே.ஜே.பெர்ரி,அன்பறிவ்,கெச்சா காம்பக்டீ,அம்ரித் சிங் ஆகிய சண்டைப்பயிற்சி இயக்குநர்கள்தாம் படத்தில் நிறைந்திருக்கிறார்கள்.விதவிதமான சண்டைகள் வியக்க வைக்கின்றன.

உஜ்வல் குல்கர்னி படத்தைத் தொகுக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.அதனால் படமும் சிரமப்படுத்துகிறது.

மோகன் பி.கேரே,சந்தீப் ஜி.ஷர்மா ஆகிய கலை இயக்குநர்கள்,படம் நடக்கும் 1940 களை திரையில் கொண்டுவர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.

திரைக்கதையை நாயகன் யாஷும் இயக்குநர் கீதுமோகன்தாஸும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள்.கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கிறார்.

மிகப்பெரிய செல்வாக்குடன் வலம்வரும் கடத்தல் மன்னர்களின் வாழ்நிலை.அதன் உச்சத்தில் இருக்கும் ஒருவரின் இருண்மை மனநிலை,அவர் வாழ்க்கையில் வரும் பெண்கள் ஆகியனவற்றை வைத்து திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

கீதுமோகன்தாஸ் இயக்கி இருப்பதால், பெண்களின் பார்வையில் இருண்மை உலகம் எப்படியிருக்கிறது? எனக் காட்டியிருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாற்றம். அளவுக்கதிகமான படுக்கையறைக் காட்சிகள், கெட்ட வார்த்தைகள், கொடூர வன்முறைக்காட்சிகள் என பார்த்துச் சலித்தவற்றையே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

– கதிரோன்