முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் உடலுறவுகளால் திரையை நிறைத்து அதற்குள் காதலின் தீவிரம் எத்தகையது என்பதை வலிக்க வலிக்க பேசியிருக்கும் படம் “LOVE(2015)”.
வெளிப்பார்வைக்கு இப்படம் போர்னோகிராபி மாதிரிதான் தெரியும், அப்பட்டமான நிர்வாணங்கள் நேரடியான உடலுறவுக் காட்சிகள் என சாதாரண ரசிக மனம் அதிரக்கூடிய அளவில்தான் காட்சிகள் இருக்கும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கான படம்தான் என்றாலும் படத்தைப் புரிந்துகொள்ள பதினெட்டு வயதுகளைத் தாண்டிய பக்குவம் தேவைப்படுகிறது.
மர்ஃபியும் எலக்ட்ராவும் ஒரு பூங்காவில் சந்தித்து ஒருவருக்கொருவர் பிடித்துப் போகிறது, பேசிப், பழகி, காதலித்து, காமத்தை அதன் எல்லை வரை திகட்டத் திகட்ட அனுபவிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் எந்த ரகசியங்களும் இல்லாத நிலை. இவ்வுலகில் தாங்கள்தான் மிகச் சிறந்த காதலர் எனச் சொல்லிக் கொள்கிறார்கள், உனக்குப் பிடித்ததை நீ செய்யலாம் எனக்குப் பிடித்ததை நான் செய்வேன் நமக்குள் ஒளிவுமறைவுகள் இல்லை, நாம் காதலர்கள், உனக்கு யாரையாவது பிடித்து இருக்கிறதா நீ அவர்களோடு இருக்கலாம் அதே போல எனக்கும் என்கிற தீர்மானத்திற்குள் வருகிறார்கள், இளமையின் ஆவேசம் அப்படி உறுதி எடுக்க வைக்கிறது.
ஆனாலும் ஒருவருக்கொருவர் முழுமையாக இந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்ற முடியவில்லை. உடைமையுணர்வு என்பது காதலின் ஒரு பகுதியாக நின்று வதைக்கிறது. காமத்தில் உனக்கு என்னவிதமான டிசைர் இருக்கிறது? என்கிற கேள்வியில் மொத்த உறவும் திசை மாறுகிறது. அவள் சொல்வாள் “நீ நான் மற்றும் இன்னொரு பெண் மூவருமாக உடலுறவு கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது, அதுதான் என் டிசைர்” அதனை நிறைவேற்றிக் கொள்ளத் தோதாக இவர்கள் வீட்டிற்கு அருகில் ஒரு பெண் குடிவருகிறாள். அவளோடு பேசிப்பழகி மூன்று நபர்கள் கலவி கொள்ளும் காட்சி, காட்சியை மிகப் பிரம்மாதமாக படமாக்கி இருப்பார் இயக்குனர். ஏனெனில் அந்த காம நிகழ்வுதான் மொத்தப் வாழ்க்கையையும் திசைமாறவைத்து காதலைச் சீரழித்து விடும். ஒரு காதல் எவ்வாறு சீரழிகிறது. ஓர் உறவுக்குள் கட்டற்ற காமம் ஒருபோதும் நன்மைகளைக் கொண்டு தராது. அது நம்பிக்கையின்மைகளை மட்டுமே தோற்றுவிக்கும்.
பார்க்கும் போது முதலில் மிகக் கிளர்ச்சியாகத் தோன்றிய த்ரீசம் காட்சி, பிறகு அதனால் இந்தக் காதல் சிதைய சிதைய இவர்கள் ஏன் அதைச் செய்தார்கள் என்று சோகமான காட்சியாகி விடுகிறது.
நீ எனக்குரியவள்/ன் என்கிற ஒரு நிலையில் காமமானது உரிமை. நீ யாருடனும் இருக்கலாம், நானும் யாருடனும் இருக்கலாம் எனும் ஒப்பன் ரிலேசன்ஷிப்பில் அந்த உரிமை பறிபோய்விடுகிறது. தங்களுக்குள் இடையேயான காதலும் காமமும் எப்படி நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலே இதில் ஈடுபடுகிறார்கள்.
இளமை எப்போதும் கட்டற்ற பாலியல் நுகர்வுக்குத்தான் மனத்தை உந்தும், அங்கு நெறிப்படாத மனங்கள் யாவும் சிக்கலுக்குத்தான் உள்ளாகின்றன.
காமம் மிக இருண்மையானது. மேலும் மேலும் என்று காமத்தை ஆராய்ந்து அனுபவிக்கும் போது சூன்யன்களே சூழ்கின்றன.
உடல்கள் ஒன்றுமே இல்லையென்றான பிறகு காதல் மட்டும் எல்லாமுமாகி விஸ்தரித்து உயிர்வதைக்குள் நிறுத்திவிடுகிறது.
what is the meaning of life
“love”
ஆனால் அந்தக் காதலை இருவரும் என்ன செய்தார்கள், காதல் இவர்களை என்ன செய்தது என்பதுதான் கதை.
காட்சிகள் முன்னும் பின்னும் மாற்றி போடப்பட்டு நான்லீனியராக இருக்கும். படத்தைப் பொறுமையாகப் பார்த்தால் ஒழிய எந்தக் காட்சி எதோடு தொடர்புடையது என்று கண்டுபிடிப்பது கடினம்.
காமத்தின் காட்சிகளில் கிளர்ச்சியுறாமல் இரண்டு மணி நேரம் நிதானமாகப் பார்த்தால் படம் தெளிவாகப் புரியும்.