தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததாலேயே கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கூடக் கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு எல்லாக் காலங்களிலும் இருக்கிறது.அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு போராட்டங்கள் ஒருபக்கம் நடந்தாலும் அந்தக்கொடுமைகள் தொடருவது இன்னும் நின்றபாடில்லை என்பதை உணர்த்தும் படமாக வெளியாகியிருக்கிறது தி கிராண்ட் மாஸ்டர்.
கணவரை இழந்த துப்புரவுத் தொழிலாளியான அபர்ணதி,தன் ஒரேமகனை நன்றாகப் படிக்க வைத்து வழக்குரைஞராக்க வேண்டும் என நினைக்கிறார்.ஆனால் அந்தச் சிறுவனுக்கு சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வம்.அப்போட்டியின் உச்சமான கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்லவேண்டும் என்று விரும்புகிறார்.ஆனால்,அம்மா செய்யும் வேலையைக் காரணம் காட்டி அவரைப் புறக்கணிக்கிறார்கள். நிராகரிக்கப்பட்ட தன் மகனுக்கு தானே சதுரங்க விளையாட்டைப் பயிற்றுவித்து வெல்லவைக்க நினைக்கிறார் அபர்ணதி.அவரால் எப்படி முடியும்? அவரால் முடிந்ததா? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி,ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு பக்காவாகப் பொருந்தியிருக்கிறார்.ஏக்கம்,துக்கம்,கோபம்,வேகம் ஆகிய எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.அவருக்கு ஒரு தனித்திறன் இருக்கிறது என்பது கதையின் திருப்பம்.அந்தக்காட்சிகளில் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
சிறுவன் அஸ்மின் படம் முழுக்க தன்மேல்தான் இருக்கிறதென்று உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
அபர்ணதியின் கணவராக நடித்திருக்கும் லிங்கேஷ்,பொறுப்பாக நடித்திருக்கிறார்.வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ்மேனன்,மேல்தட்டு வர்க்கத்தினரை பிரதிபலித்திருக்கிறார்.
தமிழரசி,அன்பு கதாபாத்திரங்களும் நன்று.
ஒளிப்பதிவாளர்கள் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன்.ஆர்.எஸ் ஆகியோர் காட்சிகளை மட்டுமின்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
கொஞ்சம் விட்டால் தொய்வடைந்துவிடும் ஆபத்துள்ள திரைக்கதையை விறுவிறுப்பாக மாற்ற முயன்று வென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரஞ்சி.சி.கே.
எழுதி இயக்கியிருக்கிறார் வெற்றிச்செழியன்.அடித்தட்டு மக்கள் வாழ்வில் அள்ள அள்ளக் குறையாமல் தொடரும் துயரங்களில் ஒரு பகுதியைப் படமாக்கியிருக்கிறார்.விளையாட்டை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கே உரிய வேகத்துடனும் விறுவிறுப்புடனும் படத்தைக் கொண்டு செல்ல விழைந்திருக்கிறார்.ஒரு சிறுவனின் கனவு என்று தொடங்கும் படம் போகப்போக அச்சிறுவனின் தாய் உள்ளிட்டோரின் தொடர்ச்சி என்று சொல்லியிருப்பது திரைக்கதைக்குத் திருப்பம் என்றாலும் காலங்காலமாக இது தொடருகிறது என்பதை உணர்த்தும் வண்ணம் அமைந்திருக்கிறது.இது இயக்குநரின் பலம்.
-இளையவன்
