மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமங்களில் நடைபெறும் திருமண சடங்குகளுக்கு கோந்தல் என்று பெயராம்.அந்தப் பெயரில் கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியான திரைப்படம் இப்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு(டப்பிங் படமாக) வெளியாகியிருக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்டது.

இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1970 களில்,மகாராஷ்டிராவின் கிராமம் ஒன்றில் நடக்கும் கதை.நாயகி இஷிதா தேஷ்முக்கிற்கு விருப்பமில்லாத திருமணம் நடைபெறுகிறது.திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டில் நடத்தப்படும் கோந்தல் சடங்கில் உறவினர்கள்,ஊர்த்தலைவர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொள்கிறார்கள்.

விடிய விடிய நடக்கும் இந்த சடங்கின்போது,மணப்பெண் மீது ஆசைப்படும் ஊர்த்தலைவரின் மகன்,அவரது விருப்பத்தோடு அவரை அடைய நினைக்கிறார்.மணப்பெண்ணோ தனது முன்னாள் காதலருடன் அங்கிருந்து வெளியேறத் திட்டமிடுகிறார்.இரக்க குணம் கொண்ட அப்பாவியான மாப்பிள்ளை கிஷோர் கடம்,புதுமனைவியுடன் இல்லற வாழ்க்கையைத் தொடங்க ஆசையோடு காத்திருக்கிறார். அதேநேரம்,ஊர்த்தலைவரால் பாதிக்கப்பட்டு தனது மகனை இழந்த ஊர்ப்பெரியவர்,அவரைப் பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் நினைத்தது நடந்ததா? என்பதைச் சொல்கிறது படம்.

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் யோகேஷ் சோகோனி.தொடக்கத்தில் அப்பாவி முகம்,இரக்க குணம் என்றிருக்கிறார்.புதுமனைவி குறித்த இரட்டை அர்த்த பேச்சுகள்கூடப் புரியாமல் வெள்ளந்தியாகப் பேசுகிறார்.அவ்வளவுக்கும் நேர்மாறாக இறுதியில் பெரும்பாய்ச்சல் நிகழ்த்தி வியக்கவைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் இஷிதா தேஷ்முக் அழகாக இருக்கிறார்.விருப்பமில்லாத திருமணம் மற்றும் தன்னை நோக்கிவரும் காமப்பார்வைகள் ஆகியனவற்றின் அவஸ்தைகளுக்கிடையே காதலன் மீதான காதல் உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

பழிவாங்கும் உணர்ச்சியோடு இருக்கும் தெருக்கூத்து கலைக்குழுவின் மூத்தவராக நடித்திருக்கும் கிஷோர் கடம் நன்று.இவர் என்ன செய்யப்போகிறாரோ? என பயப்பட வைத்திருக்கிறார்.

ஊர்த் தலைவராக நடித்திருக்கும் சுரேஷ் விஸ்வகர்மா,ஊர்த்தலைவர் மகனாக நடித்திருக்கும் நிஷாத் போஹிர்,நாயகியின் காதலராக தெருக்கூத்து கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஞ்சு பிரபு ஆகியோரும் பாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.

பெரும்பாலும் இரவுக்காட்சிகள்,குறைந்த விளக்கொலிகளை வைத்துக் கொண்டு நிறைந்த காட்சியனுபவம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அமலேந்து சௌத்ரி.

இளையராஜா இசையமைத்திருக்கிறார்.தமிழ்மண்ணின் மணம்பரப்பி சாதனைகள் படைத்த அவர்,மராத்திய மண்ணின் பாரம்பரிய இசையிலும் பெரும் வீச்சை வெளிப்படுத்தியிருக்கிறார்.அம்மண்ணின் மக்களும் அவர் இசையில் மயங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் சந்தோஷ் தேவகர்.மகராஷ்டிராவின் பண்பாட்டை வெளிப்படுத்தும் கோந்தல் என்கிற சடங்கை பின்னணியாக வைத்துக்கொண்டு,மனித மனங்களின் ஊசலாட்டங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.வியாபாரப்படங்களுக்கெதிரானது எனச் சொல்லப்படும்,மெதுவாக நகரும் காட்சிகள்,நீள நீளமான காட்சிகள்,கூடுதல் வசனக் காட்சிகள் ஆகியனவற்றை வைத்துக்கொண்டு விறுவிறுப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்.

– இளையவன்