தமிழ்சினிமாவில் உதவி இயக்குநர்களுக்கும் வசனகர்த்தாக்களுக்கும், பாடல் ஆசிரியர்களுக்கும் ஒழுங்காக சம்பளம் தராமல் நாமம் போடுவதென்பது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருவது. அந்த வகையில் லேட்டஸ்டாக இயக்குநர் லிங்குசாமி தனக்கு பேசிய சம்பளம் தராமல் நோகடித்து வருவதாக பொங்குகிறார் பத்திரிகையாளரும், அஜீத்தின் முன்னாள் மேனேஜருமாகிய வீ.கே.சுந்தர்.
சீட்டிங் நடந்தது என்ன?
விஷாலை வைத்து அவரது தயாரிப்பில் ‘சண்டைக்கோழிக் குழம்பு2’ படத்தை இயக்கிவரும் லிங்கு, துவக்கத்தில் படத்துக்கு வசனம் எழுத அவரது ஆஸ்தான எழுத்தாளர் பிருந்தாசாரதியை நியமித்திருக்கிறார். கதை தேனி, கம்பம், மதுரை வட்டார வகையறா என்பதால் பிருந்தாவின் வசனத்தில் லிங்கு திருப்தி அடையவில்லை. பின்னர் குழுவினரின் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு, தேனி வட்டார வழக்கில் எழுதுவதில் கைதேர்ந்தவரான வீ.கே.சுந்தர் அழைக்கப்பட்டார். அவரும் தனது இருமாத அன்றாட அலுவல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, முழுப்படத்துக்கு வசனம் எழுதிக்கொடுத்திருக்கிறார். அதை எடுத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு கிளம்பியவர்களுக்கு சுந்தருக்கு முறையான சம்பளம் தர ஏனோ மனம் வரவில்லை. போனில் பல முறை அழைத்தும் லிங்குசாமி, அவரது சகோ போஸ் உட்பட யாரும் போனை கண்டுகொள்வதேயில்லை.
‘நான் நியாயமாக கேட்ட சம்பளத்துக்கு ஒத்துக்கொள்ளாமல் மூன்று லட்சம் மட்டுமே தரமுடியும் என்று கூறி, இப்போது கால்வாசியைக் கூட தராமல் இழுத்தடிக்கிறார் லிங்கு. அவர் உட்பட அந்த யூனிட்டில் பணிபுரிபவர்களில் பாதிப்பேரை எனக்கு சுமார் 28 வருடங்களாக தெரியும். அப்படிப்பட்ட எனக்கே இந்த நிலைமை.இதை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது’ என்று புலம்புகிறார் சுந்தர்.
ஏற்கனவே லிங்குவின் கதை சங்கு ஊதும் நிலையில்தான் இருக்கிறது என்கிறபோது உழைத்த எழுத்தாளனின் வயித்தெரிச்சலையும் சம்பாதித்துக்கொண்டால் ‘சண்டைக்கொழிக்குழம்பு2’ நிச்சயம் சில்வர் ஜூப்ளிதான்.