இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் வீட்டுக்கு அதிகாலை வந்திருந்தால், என்னை நீங்கள் பக்திப் பழம் என்றே நினைத்திருப்பீர்கள். அறை முழுக்க சுகந்தம் வீச, காற்றில் இளையராஜா இசையமைத்த திருவாசகம் பரவிக் கொண்டிருக்கும். மகிழினியின் காதில் விழும் முதல் இசை, இளையராஜாவுடையதாகவே இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அது நடக்கவும் செய்தது. அவ்வப்போது, மகிழினி அந்த லயத்தில் முணுமுணுக்கும் போது, பெத்தவனின் பிறவிக்கடல் நிரம்பி வழியும். அந்த நொடி விவரிக்க முடியாத சந்தோஷத்தில் மனம் பறக்கும்.
ஏனெனில், இளையராஜா, வெறும் இசையமைப்பாளர் மட்டும் இல்லை. காற்றில் தவழும் மனநல மருத்துவமனை. எல்லாக் கேள்விகளுக்குமான ஒரே பதில். வாழ்வின் நீண்ட பயணத்தில், எப்போதும் வரும் வழித்துணை.
மடி வேண்டுமா? கிடைக்கும். தோள் வேண்டுமா? கொடுப்பார். அட்சர சுத்தமான குரலில் எல்லோரும் பாடும் போது, கரகரத்த குரலை வைத்துக் கொண்டு, ஒருவனால் எப்படி இத்தனை ஆண்டுகள் தமிழ் உலகத்தை ஆட்சி செய்ய முடிகிறது? சென்னையை தாண்டினால் ஊரெல்லாம் இளையராஜா தான். பின் தொடரும் நிழல் போல, அல்லது நிழல் மறைந்த இருள் போல, எப்போதும் நம்மை தொடர்ந்தபடி இருக்கிறார்.
பெரும் பாறையாக உருமாறிய மனச்சோர்வை, கண்ணீராக உதிர்க்க வைக்கும் வித்தை அவருக்கு அத்துப்படி. மீள முடியாத புதைகுழியிலும், காலகாலத்துக்குமான பேரின்பத்திலும் தொடர்ந்து தள்ளுகிறவனை எப்படி புரிந்து கொள்வது என்பது இன்று வரை தெரியவில்லை.
திரையிசைப் பாடல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், நான் திரும்ப திரும்ப கேட்பது, அவருடைய ‘how to name it’
“nothing but wind” தான். சொற்களால் விவரிக்க முடியாத அனுபவம் அது. அதைக் கேட்கும் போதெல்லாம், அவருடைய திரையிசைப் பாடல்களுக்கு கிடைத்த முக்கியத்துவம் ஏன் இதற்கு கிடைக்கவில்லை என்று வேதனை அடைந்திருக்கிறேன். ஆனால், அது தலைமுறை தாண்டும்.
நம் எல்லோருடைய பால்யமும் பேரின்பத்தால் நிரம்பியது. பேரின்பம் பாடல்களால் நிரம்பியது. அந்த பாடல்கள், வாழ்வின் சம்பவங்களால் உண்டானது. எனக்கும் அப்படித் தான். பால்யத்தை திரும்பிப் பார்த்தால் என் நினைவுகளாக நிற்பது, இளையராஜா மட்டும் தான். பால்யத்தில் மட்டுமா? முதுகலை படிக்கும் போது, பறவையே எங்கு இருக்கிறாய் என, உறக்கத்தை திருடிப் போனார். இது மரணம் வரைக்கும் நீளும் போல.
இளையராஜாவை உள்வாங்க உள்வாங்க, நீங்களும் இளையராஜாவாக மாறிப் போவது தான், அவருடைய மாயவித்தை. நான் உணர்ந்திருக்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன்பு எழுதிய பதிவில், ‘எனக்கு மட்டும் துப்பாக்கியால் சுடும் அதிகாரம் இருந்தால், இளையராஜாவின் நெற்றியை நோக்கியே என் ரவைகள் பாயும்’ என்று எழுதி இருந்தேன். நம்மை தொடர்ந்து அடிமைப்படுத்துகிறவர்களை வேறு எப்படி பழி வாங்குவது என்று காரணமும் சொல்லி இருந்தேன். என்னுடைய 100வது வயதில் அது நடந்தே தீரும்.