வையம் மீடியாஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் ‘எழுமின்’.
தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி இருவரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “இவ்வளவு மாணவர்கள் மத்தியில் இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது. நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால்தான் இப்போதும் வாழும் கலைவாணராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தயவு செய்து இந்த ‘எழுமின்’ திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். அதற்கு இந்த திரைப்படத்திற்கு ஏதேனும் சிறப்பு அந்தஸ்து வழங்கி, வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும்.
இதனைக் கேட்பதற்கான காரணம், இந்த திரைப்படம் நிச்சயமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்ச விழிப்புணர்வையாவது மாணவர்களுக்கு வழங்கும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில், இந்தத் திரைப்படத்தில் நடிக்க வந்த பிறகு ‘கிக் பாக்சிங்’ கற்றுக் கொண்ட சிறுவன் இப்போது ஸ்டேட் லெவலில் தங்கப் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். தற்காப்பு கலைகளின் முக்கியத்துவத்தை நிச்சயமாக ‘எழுமின்’ திரைப்படம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும்…” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
நடிகர் விவேக் பேசும்போது, “தமிழ்நாட்டில் சமீபமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன் நின்று நடத்தி வென்று காட்டிய மாணவர்கள்தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள்.
நான் நான்கு பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். முதலாவது, தன்னம்பிக்கையால் உயர்ந்த நடிகர் தனுஷுக்கு. நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து ஒரு பாடலைப் பாடி கொடுத்திருக்கிறார். இரண்டாவது இசையமைப்பாளர் அனிருத்திற்கு. மூன்றாவது நன்றி.. இசையமைப்பாளர்கள் ஆதி மற்றும் இமான் இருவருக்கும்.. கூப்பிட்டவுடன் மறுக்காமல் வந்து கலந்து கொண்டமைக்காக..” என்று கடகடவென நன்றி தெரிவித்து சுருக்கமாய் முடித்துக் கொண்டார்.
விழாவில் நடிகர் தனுஷ் பாடிய ‘எழுடா’ பாடலும், இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘எழு எழு’ பாடலும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது.