வல்லரசுகளின் வேட்டைக் காடாக மாறியுள்ள இலங்கையில் ஈழத் தமிழரின் விடுதலைக்கான வியூகம் எது?
மு. திருநாவுக்கரசு.5-12-2019
தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை வழங்காது அவர்களை ஒடுக்கினால் அதன் விளைவாக இலங்கைத்தீவு வல்லரசுகளின் வேட்டைக்காடாக மாறும் என்று 1955 ஆம் ஆண்டு டாக்டர் என். எம் . பெரேரா நாடாளுமன்றத்தில் முன்னெச்சரிக்கை செய்தார்.
தமிழ் மொழியையும் உத்தியோக மொழியாக்காது சிங்களத்தை மட்டும் உத்தியோக மொழியாக்க வேண்டும் என்ற திரு எஸ் .டபிள்யூ .ஆர் .டி. பண்டாரநாயக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்து பேசுகையில் மேற்கண்டவாறு என். எம். பெரேரா தெரிவித்தார்.
தமிழ் மக்களை ஒடுக்குவதன் வாயிலாக இறுதியில் இலங்கைத்தீவு இரண்டாக உடையும் என்பதையும் என். எம் .பெரேரா எதிர்வு கூறத் தவறவில்லை.
தமிழ் மக்களுக்கு உரிய , அவர்களுக்கான உரிமையை ஏற்றுகக்கொண்டு அவர்களுடன் இணைந்து வளமான, அமைதியும் சுபிட்சமும் நிறைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக அந்நிய வல்லரசுகளிடம் கையேந்தியதன் விளைவாக இலங்கைத்தீவு முழுவதுமே அந்நியர்களின் கைகளுக்குள்ளும் கால்களுக்குள்ளும் சிக்குண்டு சீரழியும் நிலை உருவாகியுள்ளது.
தமிழர்களுக்கான உரிமைகளை வழங்க மறுத்து அவர்களை ஒடுக்குவதற்காக அந்நியர்களின் உதவியை நாடியதன் விளைவு இலங்கையை அந்நியர்களின் வேட்டைக் காடாக்க வழிவகுத்துள்ளது என்பதே இங்கு பிரதானமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.
கல்லைக் கல்லால் உரைஞ்சத் தீப்பொறி கிளம்புவது போல தமிழரை ஒடுக்க ஒடுக்க தீப்பொறி கிளம்பி இலங்கையை சுட்டெரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இன ஒடுக்குமுறையில் மையம் கொண்ட அந்தத் தீ தற்போது அம்பாந்தோட்டையில் எரிபற்றுநிலை அடைந்து இலங்கையை எரிக்கவல்ல உலைக் களத்துத்ததிற்கான எதார்த்தத்தை தோற்றுவித்துள்ளது.
அமெரிக்காவின் மேற்குக்கரை பசிபிக் சமுத்திரத்தில் இருந்து இந்தியாவின் மேற்குக் கரை இந்து சமுத்திரம் வரை விரியும் பிராந்தியமே இந்தோ -பசிபிக் பிராந்தியமென அரசியலற் புவியியல் ரீதியில் வரையறுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்தோ- பசிபிக் என்ற பதப் பிரயோகத்தின் அடிப்படையிலான இராணுவ– பொருளாதார –அரசியல் முதன்மை பெற்று விளங்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக சீனாவின் வர்த்தக ஆதிக்க பட்டுப்பாதை அரசியலை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டியின் விளைவாக இத்தகைய ஒரு புதிய பிராந்தியக் கூட்டு அரசியல் உதயமாகியுள்ளது. இது இந்து சமுத்திரத்தில் இந்தியாவையும் இதற்குள் இழுத்துவிட்டுள்ளது. இந்த வகையில் அமெரிக்க -சீன -இந்திய ஆதிக்கப் போட்டி அரசியலுக்கான களமாக இந்தோ பசிபிக் பிராந்தியம் என்கின்ற ஓர் இராணுவ- பொருளாதார -அரசியற்களம் விரியத் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவும் அமெரிக்காவும் ஓரணி.
இந்தப் பரந்த களத்துக்குள் இலங்கை ஓர் உலைக்களமாய் மாறியுள்ளது. குறிப்பாக 2005 ஆம் ஆண்டை முன்னும் பின்னுமாக அண்டி தனது பட்டுப்பாதை க்கான ஒரு மையமாய் இலங்கையை சீனா தெரிவு செய்தது. இதன் அடிப்படையில் இலங்கை அரசியல் ஒரு தீக்குச்சியாய் மாற்றப்பட்டு இன்று அது உலைக்களமாய் பரிணாமம் பெற்றுள்ளது.
இன ஒடுக்குமுறைக்கான இலங்கை அரசின் யுத்தத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி சீனா இதற்கான கால்கோளை மேற்கொண்டது.
இப்பின்னணியில் தமக்கேற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அமெரிக்கா புறப்பட்டதன் வாயிலாக இந்த இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் இராணுவ -பொருளாதார – அரசியல் விஸ்வரூபம் எடுக்கும் நிலை உருவானது. இது பசிபிக் மற்றும் இந்து மாகடல்களில் அமெரிக்காவுக்கு மட்டும் சவாலாக அமையாது கூடவே இந்து மா கடலில் இந்தியாவுக்கும் சவாலாக அமைந்ததன் விளைவாக இந்தியாவும் இதற்குள் ஓர் அங்கமாக அமையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் மேற்குக் கரையில் தொடங்கும் பசுபிக் சமுத்திரத்தில் இருந்து இந்தியாவின் மேற்குக் கரையான இந்து சமுத்திரம் வரை இரண்டு சமூகங்களையும் இணைத்த 24 நாடுகளைக் கொண்ட இந்தோ- பசிபிக் பிராந்திய இராணுவ பொருளாதார அரசியல் யுகம் தோன்றியுள்ளது.
நேரமும் வசதியும் ஏற்படும் இடத்தில் இதனையிட்டு பின்நாட்களில் விரிவாக நோக்கலாம் . இது தொடர்பான பரந்த, ஆழமான அறிவு , போராடும் ஈழத் தமிழர்களுக்கு மிகவும் அவசியம் என்பதில் சந்தேகமில்லை. காலம் கை கொடுக்கும் இடத்தில் இதனைப் பற்றி பின்பு யோசிக்கலாம்.
கிபி 11 ஆம் நூற்றாண்டில் தென்கிழக்காசிய நாடுகள் நோக்கிய சோழப்பேரரசின் கடல்சார் பேரரசப் படர்ச்சியிலிருந்து வரலாற்றுரீதியாக இதற்கான வேரை அடையாளம் காணலாம். நவீன வரலாற்றில் அது பனிப்போரின் பின்- பின்னா யுகத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் ஒட்டிய வகையில் மேற்படி இந்தோ – பசிபிக் பிராந்திய அடிப்படையிலான இராணுவ- பொருளாதார – அரசியல் பெரு விருட்சமாய் கிளைவிட்டுக் கொப்பெறிந்து விழுதுவிட்டுப் பரவத் தொடங்கியது வரை இப்பிரச்சினை ஆழமாக ஆராயப்பட வேண்டியது அவசியமாகும். இதனை ஈழத் தமிழினம் ஒருபோதும் மேலெழுந்த வாரியாகப் பாராது மிக ஆழமாக பார்ப்பதன் வாயிலாகவே விடுதலைக்கான பாதையை அடையாளம் காணமுடியும்.
அமெரிக்காவின் பாதுகாப்பையும் ஆதிக்கத்தையும் வட , தென் அமெரிக்க கண்டங்களுடன் இணைத்து 1823 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட மன்றோ கோட்பாட்டின் (The Monroe Doctrine) நீட்சியாக 21 ஆம் நூற்றாண்டில் பசிபிக் சமுத்திரமும் இந்து சமுத்திரமும் இணைந்து தழுவிய அமெரிக்காவின் இந்தோ -பசிபிக் பிராந்திய கோட்பாட்டை அணுகவேண்டும். இதனை மொன்றோ விலிருந்து ஒபாமா அவரை என்றும் வர்ணிக்கலாம்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு சீனாவிற்கு நல்லாட்சி அரசாங்கம் எழுதிக் கொடுத்தது தவறு என்று புதிய ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ச கூறியதற்கு பின்னால் ஒரு ராஜதந்திர உள்நோக்கம் இருப்பதுடன் கூடவே இப்பிரச்சனையின் ஆழமும் ஆபத்தும் முன்னெழத் தொடங்கியுள்ளமை பெரிதும் கவனத்துக்குரியது.
இலங்கை அரசியலில் எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் எழுதப்பட்ட யாப்புகள் எழுதப்பட்ட சட்டங்கள் என்பதை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை.
எழுதப்பட்ட பதிவு திருமண உறவை விடவும் ஆசைநாயகன் ஆசைநாயகி இடையிலான எழுதப்படாத உறவு மிகவும் பலம்வாய்ந்ததாய் இருப்பதும் உண்டு. “” ஓரடி பின்னால் ஈரடி முன்னால்”” என்ற இராஜதந்திரமும் இங்கு கவனத்திற்குரியது.
மேற்படி அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அதுமட்டுமன்றி கூடவே நல்லாட்சி அரசாங்கம் கைச்சாத்திட்ட இருநாட்டு, பன்னாட்டு ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்யப்போவதாக அவர் அறிவித்திருப்பதும் கவனத்துக்குரியது. 30/1 ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் போர்க்குற்ற விசாரணை உட்பட இலங்கை நல்லாட்சி அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களும் இந்த மறுபரிசீலனையில் அடங்கும். இவற்றையிட்டு பின்னாட்களில் ஆராய்வோம்.
ஒப்பந்தம் சம்பந்தமாக மறு பரிசீலனை செய்வதற்கு இடமில்லை என்றும் செய்யப்படமாட்டாது என்றும் இன்றைய புதிய அரசாங்கம் தம்மிடம் ஒப்புக் கொண்டுவிட்டதாக சீனா அறிவித்துள்ளமையும்
இங்கு இராஜதந்திரச் சித்து விளையாட்டுக்களோடு பொருத்தி ஆராயப்பட வேண்டியதாகும்.
சீனாவின் பட்டுப்பாதை அடிப்படையிலான சீன -இலங்கை உறவு கட்டமைப்பு ரீதியான இஸ்தாபிதத்தை அடைந்துவிட்டது. இதனை கட்டமைப்பு ஆய்வியல் (Structural Analysis) முறைக்கூடகப் புரிந்துகொள்ளாது விட்டால் யானையைப் பார்த்த குருடனைப் போல பேசவேண்டியிருக்கும். ஆதலால் கட்டமைப்பு ரீதியான ஆய்வின்படி கோத்தபாய ராஜபக்ச சொல்லியது உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவாகும்.
“‘பூசாரி கையை விட்டாலும் கரடி தன் பிடியை விடாது”” என்ற நாட்டுக் கதை கூற்றுக் கிணங்க பூசாரிமீதான தன் பிடியின் வலிமையை சீனா மேலும் உறுதியுடன் பறைசாற்றி உள்ளது. அதேவேளை பூசாரியும் கைவிடவில்லை என்பது வேறுகதை. எனவே வெளிப்படையாக கூறப்படும் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் இராஜதந்திர உள்நோக்கங்கள் முக்கியமானவை.
இதைத் தொடர்ந்து இனி வரப்போகும் ஒரு சில வருடங்களுக்குள் இலங்கை தீவை மையமாகக்கொண்டு நடைபெற உள்ள அரசியல் சூறாவளியில் ஈழத் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான பாதையை திடமாக வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
இருள்சூழ்ந்த நடுக்கடலில் சூறாவளிக்குள் சிக்கியுள்ள ஓடத்தின் சுக்கானைச் சரிவரப் பிடிக்கப் போகின்ற படகோட்டி யார்? அதற்கான கலங்கரை விளக்கமாக இருக்கவில்ல அறிவு எது? போன்ற வினாக்களுக்கு தமிழ் மக்கள் தரப்பிலிருந்து கிடைக்கக்கூடிய சரியான பதிலில் இருந்தே தமிழ் மக்களுக்கான விடுதலை அடங்கியுள்ளது .