2011-ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப்படம் ‘எங்கேயும் எப்போதும்’. படம் ரிலீஸாகி ஒரு வருடம் ஆகியும், அதை இயக்கிய சரவணன், தனது அடுத்த படம் என்ன என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
வெளிக்காயம் இல்லை. உடலில் எங்கும் பேண்டேஜ் போடவில்லை எனினும், சரவணனைப்பொறுத்தவரை, அவரது சினிமா பயணத்தில் ‘எ.எ’ படத்தில் நடந்ததற்கு இணையான ஆக்ஸிடெண்ட் இது.
சரவணன் சறுக்கியது எங்கே? எப்படி?? கொஞ்சம் பின்னால் போவோம்.
தனது குருநாதர் முருகதாஸ் தயாரிப்பில் ‘எ.எ.’ படத்தை இயக்கியிருந்த சரவணன், படம் ஹிட் என்ற உடனே, தன்னைத்தேடி வந்த அடுத்த வாய்ப்புகளிலேயே பெரிய அட்வான்ஸாக இயக்குனர் லிங்குசாமியுடையதாக இருந்ததால், அடுத்து என்ன படம் பண்ணப்போகிறோம். யார் ஹீரோ? என்ன பட்ஜெட் என்று எதுவுமே கேட்காமல் வாங்கிப்போட்டுவிட்டார்.
யாரை வைத்து வேண்டுமானாலும் சரவணன் இயக்கத்தயாராக இருந்த நிலையிலும், சரவணனின் வெற்றிப்பட இயக்குனர் முத்திரையை ஆர்யா, விஷால் மாதிரி மார்க்கெட் உள்ள ஹீரோவுடன் காம்பினேஷன் அமைத்து பல்க் துட்டு பார்க்கவேண்டுமென்பதுதான் லிங்குவின் கணக்கு.
ஒரு இயக்குனராக சரவணனுக்கு இருக்கும் மவுசை வைத்து பெரிய ஹீரோக்களைக்கூட டம்மி விலைக்கு மடக்கிவிடலாம் என்பது லிங்குவின் கணக்கு. ஆனால் இந்த உள்நோக்கத்துடன், சரவணன் காம்பினேஷனுக்காக ஒவ்வொரு ஹீரோவுடன் பேசும்போதெல்லாம் சம்பளப்பஞ்சாயத்து வந்த நிற்கவே, சரவணனை நீண்ட நாள் வெயிட்டிங் லிஸ்டில் போட்டுவிட்டார்.
பொறுமையிழந்து வெளிக் கம்பெனிக்கு சரவணன் போக உத்தேசித்த வேளைகளிலெல்லாம், சற்று உருக்கமாகப்பேசி நிறுத்தி வைத்திருந்த லிங்கு, கடைசியாக சரவணனுக்கு கைகாட்டியிருப்பது ‘கும்கி’ ஹீரோ விக்ரம் பிரபுவை.
சூர்யா,ஆர்யாவில் துவங்கி தன்னை விக்ரம் பிரபுவிடம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் லிங்குவிடம், ‘மறுபடியும் முதல்ல இருந்தா? என்று மனசுக்குள் நினைத்தபடியே ’ கும்கி’ ரிலீஸாகட்டும் சார் பிறகு முடிவு பண்ணிக்கலாம்’ என்று முதல் முறையாக சரவணன் டைம் வாங்கியிருக்கிறாராம்.
ஆக்ஸிடெண்ட் எங்கேயும் எப்போ வேணுமுன்னாலும் நடக்கலாம். இனியாவது அவசரப்பட்டு அட்வான்ஸ் வாங்கிட்டு அவஸ்தைப்படாதீங்க சரவணன்.