கடந்த இரண்டு வருடங்களாக, நயன்தாரா,விக்னேஷ் செய்திகளை விட அதிக சர்ச்சைகளை சந்தித்த சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ந் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இச்செய்தியை அப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படம் பற்றிய அறிவிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெளியிட்டனர். ஆனால் படத்தில் நடிக்க சிம்பு காலதாமதம் செய்ததாக குற்றம்சாட்டி படத்தை கைவிடுவதாகவும், வேறு நடிகரை வைத்து புதிய பரிமாணத்தோடு மாநாடு படம் தொடங்கப்படும் என்றும் பட நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து மாநாடு படத்துக்கு போட்டியாக மகா மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார் என்று அவரது தரப்பில் அறிவிப்பு வெளியானது. இந்த மோதலை தீர்க்க தயாரிப்பாளர் சங்கம் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது மாநாடு படத்தில் சிம்பு நடிக்க தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாநாடு படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டனர். டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் மனோஜ், டேனியல், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பதாகவும், படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறார் என்றும் அறிவித்தனர். இந்த நிலையில் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது வருகிற 19-ந் தேதி மாநாடு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். இப்படத்தின் முதல் ஷெட்யூல் கோவையில் துவங்க உள்ளது.இது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.