சொன்னதும் சொல்லாததும்
- அவசரத் தேவைகளுக்கு அல்லாமல் வெளியே வராதீர்கள்.
- வழக்கமான மருத்துவ செக்அப்களை ஒத்தி வைக்கலாம்.
- அறுவை சிகிச்சைகளைக்கூட தள்ளிப்போடுங்கள்.
- அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடங்கல் ஏதும் இருக்காது. எனவே பொருட்களை வாங்கிக் குவிக்க ஓடாதீர்கள்.
- 22 ஆம் தேதி மக்கள் உங்களுக்கு நீங்களே தடையுத்தரவு போட்டுக் கொள்ளுங்கள்.
- 22ஆம் தேதி மாலை எல்லாரும் வாசலுக்கு வந்து கைதட்டி, கொரோனாவுக்கு எதிராக உழைப்பவர்களைப் பாராட்டுங்கள்.
- பொருளாதாரம் பெருத்த சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இதை சமாளிக்க நிதியமைச்சர் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
- வேலைக்கு வர முடியாதவர்களுக்கு சம்பளத்தைப் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று முதலாளிகளை வேண்டிக் கொள்கிறேன்.
இதுதான் பிரதமர் பேசியதன் சாரம்.
1 முதல் 3 வரை – பொத்தாம்பொதுவான உபதேசம். சும்மா அடித்து விடலாம்.
4 – அவர் வசிக்கிற தில்லியில், அவருடைய மூக்குக்குக் கீழேயே ஊரெங்கும் கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. தில்லி போலீஸேகூட கடைகளை அடைக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறது. யார் கொடுத்த ஆணை, எதற்காக கடைகளை அடைக்க வேண்டும் என்று எதுவுமே தெரியாமல் எல்லாரும் கடைகளை மூடி விட்டார்கள். பாலுக்கும் காய்கறிகளுக்குமாய் மக்கள் ஓடுவதைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் சொல்ல முடியாதா?
5 – வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க வேண்டாமா?
6 – அது என்ன 22ஆம் தேதி கணக்கு? மற்ற நாட்களில் கொரோனா தாக்காதா? அன்று ஒருநாள் மட்டும் வெளியே வராமல் இருந்து என்ன பிரயோசனம்? இப்படி அறிவிப்பதற்கு தர்க்கரீதியாக, அறிவியல்ரீதியாக ஏதேனும் காரணம் உண்டா?
6 – மருத்துவ ஊழியர்களைப் பாராட்டுவதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. அதற்கென ஒரு நாளும் நேரமும் தேவையில்லை. உண்மையில் அவர்களைப் பாராட்ட வேண்டுமானால், மருத்துவத்துறையினருக்கு அரசு கூடுதல் வசதிகளை, பாதுகாப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். அதைப்பற்றி ஒரு வார்த்தையும் காணோம். சும்மா கை தட்டினால் போதுமா?
7 – ஏதோ இப்போதுதான் பொருளாதாரம் சீர்கெட்டு இருக்கிறதா என்ன! அதான் ஏகப்பட்ட பர்னிச்சர்களையும் உடைத்துப்போட்டிருக்கிறீர்களே! இப்போது உடைப்பதற்கு இன்னொரு பர்னிச்சர் கிடைத்திருக்கிறது.
8 – விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது என்று உத்தரவு போட முடியாதா?
பிரதமர் பேசியிருக்க வேண்டியது என்ன?
— இந்தியாவில் இப்போது நோயாளிகள் எண்ணிக்கை என்ன?
— இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு எந்தளவுக்கு இருக்கிறது?
— நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?
— தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்படுமா?
— பரிசோதனை மையங்கள் எங்கெங்கே அமைக்கப் போகிறார்கள்?
— சிறப்பு குவாரன்டைன் மருத்துவமனைகள் எங்கெங்கே அமைக்கப்போகிறார்கள்? — மருத்துவ ஊழியர்களுக்கு சிறப்புப் பாதுகாப்புக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்போகிறார்கள்?
— கூடுதல் மருத்துவப் பணியாளர்களுக்கு எப்படி ஏற்பாடு செய்யப்போகிறார்கள்?
— தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்குமா?
— பாமர மக்கள் நம்பும் மாஸ்க்குகள், சானிடைசர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறதே, அதை சரி செய்ய என்ன செய்யப்போகிறார்கள்?
— வதந்திகளைப் பரப்புவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
— பொருட்களைப் பதுக்குவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
இதெல்லாம் பேசுவார் என்று எதிர்பார்த்தால்…
ஹ்ம்… நமக்கு வாய்த்தது இவ்வளவுதான்.
கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ ஓடும் கதைதான்.
எல்லாரும் கைதட்டுங்க. எல்லாம் சரியாகிடும்.
— தமிழ்நாடு பேரிடர் துயர் துடைப்பு தன்னார்வலர்கள் வலைப்பக்கத்திலிருந்து.
https://m.facebook.com/story.php?story_fbid=1005493693179269&id=761356810926293